நினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்

தனிமையைத் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களாயினும் சரி அல்லது பிறரால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் உழன்று கொண்டிருப்பவர்களாயினும் சரி, ஒரு எல்லைக்குமேல் அதனை ஜீரணிக்க முடியாமல் நாம் தள்ளாடுகிறோம்.

அத்தகைய தனிமையை கலைகளாலும் ஏதோ முன்பின் அறிமுகமற்றவர்களின் சிலகண நேர அரவணைப்பினாலும் பூர்த்தியாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

காதல், தனிமை, வெறுமை,  காதலைக்கடந்து செல்லல், இன்னொரு காதலுக்குள் வீழ்தல், உறவுச்சிக்கல், அகக்கொந்தளிப்புகள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருமனிதனும் தன் வாழ்வில் அனுபவித்துத் திளைத்திருக்க வேண்டியவை. இந்த உணர்வுகள் இவ்வுலகிற்குப் புதுமையான ஒன்றுமல்ல இன்னும் காதல் செய்வது மாபெரும் குற்றச்செயலுமல்ல. 

இத்தகைய மனித மனதின் அகச்சிக்கல்களையும் காதல் மற்றும் தனிமையை கடந்து செல்ல எடுக்கும் பிரயத்தனங்களையும் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றித்து காட்சி மொழியின் மூலம் கவிதையாக வடிக்கும் வல்லமை பெற்றவர்தான் இயக்குநர் “Wongkar-wai”. 


அவரது ஒவ்வொரு திரைப்படத்தையும் தனிமையின் விளிம்பில் தவித்திருக்கும் போதே பார்த்திட வேண்டும். 

காதலில் வீழ்ந்து தொலைந்து போகும் யுக்திகளையும், காதலையும் தனிமையையும் கடந்து செல்லும் யுக்திகளையும் மிகவும் லாகவமாக காட்சிப்படுத்தியிருப்பார். 

இருந்தும் இவரது படங்களின் காட்சிகளையும் எளிதில் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வோம்.  தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் இன்னொரு படத்தின் காட்சிகளின் வசனங்களின் தடையங்களை நாம் அடையாளம் காணக்கூடியவாறு அங்கங்கே விட்டுச்சென்றிருப்பார். 

அந்த வகையில் Happy together(1997), In the mood for Love (2000), Chunking express (1994), Fallen angels(1995), 2046 (2004), Days of being wild(1990), My blurbery nights(2007), As tears go by(1988) பிரதானமாகக் குறிப்பிடத்தக்கவை. 

என்ன எல்லாமே ஒரே வகையான உணர்வுத்தளம்தானே என்று எடுத்த எடுப்பிலேயே புறந்தள்ளிவிடமுடியாது. 


ஏன் தன் முன்னைய படங்களில் பயன்படுத்திய அதே நடிகர்களையே பெரும்பாலான படங்களில் பயன்படுத்தி இருப்பார். 

இருந்தும் ஒரு தெவிட்டல் நிலையை எம்முள் அவ்வளவு சீக்கிரம் தோற்றுவித்திருக்க வாய்ப்புகள் இருக்காது. 


காரணம் Wong இன் ஒவ்வொரு கதைக்களமும் கதை சொல்லும் பாணியும் தனித்துவமானவை. அதற்கென தெரிவு செய்யும் இசைக்கோர்வைகள், கேமரா கோணம், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் உட்பட அனைத்தும் நம் மனதை ஒவ்வொரு படத்திலும் வசீகரிக்கும் வல்லமை பெற்றவை. 

ஒளிப்பதிவு என்றவுடன் Christopher Doyleக்கும் Wong இற்கும் இடையிலான இணக்கப்பாட்டை அடிக்கடி நினைத்து பெருமிதம் கொள்ளத்தோன்றுமளவு கனகச்சிதமானவை. 

காட்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் பின்னணி குரலோசையுடன் கதை சொல்லும் விதம் காட்சிகளோடு கதைகளை ஒன்று சேர்த்து விடுகின்றது. பின்னணி குரலில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் ஒவ்வொன்றும் புறக்கணிக்கவியலா தத்துவங்கள். இன்னும் கதாப்பாத்திரங்களின் மனோபாவங்களை அதன் கட்டமைப்பினுள் நின்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன விளக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு நம் நிலையை எண்ணி ஆசுவாசமடைய அவை உதவி புரியும். 

Wong இன் முதிர்ச்சியுடனான அழகியல், பின்னவீனத்துவக்காட்சிகள் பார்வையாளர்களை மூழ்கடித்து இன்றுவரை சாகசம் செய்துகொண்டிருக்கிறது. 

இதுவரை பார்த்த Wong படங்களில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி பிரமிக்கச்செய்த காதல் காவியம்தான் “Happytogether(1997)”.

வழக்கமாக ஆண் பெண் உறவுச்சிக்கல், எதிர்ப்பாலுடல் மீதான ஈர்ப்பு,பிற மனைவி, பிறகணவன் மீதான ஈர்ப்பு என்று மனித உணர்வுச்சிக்கல்களை அலசி ஆராய்ந்த இயக்குநர் இரு ஆண்களுக்கிடையிலான (Gaycouple) காதலுடனான காமம், அகக்கொந்தளிப்புகள், காதலைக் கடக்க முன்னெடுக்கும் பிரயத்தனங்கள் போன்றவற்றை நேர்த்தியாகவும் சுவாரஷ்யமாகவும் பதிவு செய்திருப்பார். 1997 Cannes Film Festival இல் இத்திரைப்படத்திற்குச் சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது.

இரு ஆண்களுக்கிடையிலான காதல் என்றவுடன் தமிழ் சமூகம் முகம் சுழிப்பது கண் முன் நிழலாடுகின்றது. 


உண்மையில் ஓரினச்சேர்க்கை என்றாலே சமூகத்தின் வெறுப்பு ஒவ்வொரு இடத்திலும் பதியப்படுகிறது. 

நமக்கு அந்நியமான ஒன்றை ஏற்றுக்கொள்ள நாம் யாரும் தயாராக இருப்பதில்லை. 

அதற்காக நமக்கு அந்நியமானவை எல்லாம் அருவருப்பானவை என்று ஆகிவிடுமா? இங்கு தான் இருத்தலியல் கோட்பாட்டின் தனிமனித வாழ்வு மற்றும் தனிமனிதசுதந்திரத்தை கவனத்திற்கொள்ள வேண்டும். 

கவர்ச்சிகரமான நினைவுகளின் தொடர்ச்சியாக பின்னணிக்குரலுடன் திரைப்படம் நகர்த்திச்செல்லப்படும். அவர்கள் இருவருக்கும் சுழற்சி முறையிலான பிரிதலும் இணைதலும் சகஜமான ஒன்றாக ஆரம்பத்தில் காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கிடையே அசைக்கமுடியாத ஆழமான புரிந்துணர்வு இருப்பதனை நாம் இலகுவாக உணரக்கூடியதாகவிருக்கும். 

ஆரம்பக்காட்சி Black & White இல் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்களது முதல் (Braekup)பிரிவையும் இன்னும் அவைகள் அதன் பின் ஒன்றிணைவது color இலும் நம் புரிதலுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 


இங்கு நிகழும் ஒரு பிரதான செயற்பாடு (Emotional Abuse) ”உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்”.அதை தன் இணை தனக்குச் செய்கிறார் என்று தெரிந்தும் கூட தன் இணையைப் புரிந்து கொண்டு அந்த உறவைக்கடக்கவும் முடியாமல் மறக்கவுமுடியாமல் இராப்பொழுதுகளில் தூக்கமின்றி உழன்று திரிந்து பின்னர் கடினமான வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து காலப்போக்கில் தன் தேவைகளை நேர்மையாகக் கணக்கெடுப்பு செய்து வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நடத்தத் தீர்மானித்தல் தான் படத்தின் தத்துவம் என்று கூறலாம். 

உண்மையில் யாரையும் கட்டிப்போட்டு வற்புறுத்திக் காதல் செய்ய இயலாது. 


அவரவர் மன நிலைக்கேற்ப அதை நகர விட்டுவிட வேண்டும். 

இத்திரைப்படத்தில் மிகவும் பிடித்த பல அம்சங்கள் உண்டு. பிரதானமாக ஓரினச்சேர்க்கை என்றவுடன் சமூகத்தின் புறக்கணிப்பை, எதிர்ப்பை மேலோட்டமாக என்றாலும் காட்சிப்படுத்த முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இங்கே சமூகத்தின் பார்வையோ குடும்பத்தின் வெறுப்போ பதிவு செய்யப்படவில்லை. 


மாறாக இரு ஆண்களின் முரண்பட்ட  பண்புகளும், காதலுடனான அகக்கொந்தளிப்புகளும் தான் பேசப்படுகிறது. 


இதுதான் உண்மைநிலை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். 


இங்கே பொதுப்படையில் ஆண்கள் எல்லாம் ஒரே மனநிலை, பெண்கள் எல்லாம் ஒரே மன நிலை என்று பொதுமைப்படுத்திப் பேசுவது அபத்தத்தின் உச்சம். 

ஆணுக்குப் பெண்ணின் மேல் ஈர்ப்பு வரக் காரணம் எதிர்ப்பாலினம் என்பதால்தான் என்று கூறுபவர்கள் ஒரு ஆணுக்கு ஆணின் மேலோ ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்ணின்மேலோ ஏற்படும் ஈர்ப்பை, காதலைச் செயற்கையான ஒன்றாக நினைத்து ஏற்க முடியாமல் பதட்டம் அடைகின்றனர். 


உடலுறவு என்றாலே பிள்ளைவிருத்திக்காக மட்டுமே என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்குக் காதல் செய்தலின் தாற்பரியம் புரிய வாய்ப்பில்லை.  Love is always Love. 

அடுத்து தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அகச்சிக்கல் என்பது ஒரு பொருட்டே இல்லை. 


இருவருக்கிடையிலான அகக்கொந்தளிப்பு மற்றும் உறவுச்சிக்கலை முதிர்ச்சியுடன் பதிவு செய்ய தமிழ்சினிமாவில் தவறிவிடுகின்றனர். Happy to gether பார்த்த பின் தமிழில் விண்ணைத்தாண்டிவருவாயா திரைப்படத்தை நினைவு கூர்ந்து கொண்டேன்.

படத்தில் செயற்கைத்தனங்கள் ஆயிரம் இருந்தாலும் இயக்குநர் கெளதம்மேனன் பேச முயற்சி செய்திருப்பதும் இத்தகைய இரு முரண்பட்ட நபர்களுக்கிடையிலான காதலும் அக்காதலைக் கடக்க முயற்சி செய்தலும்தான். 

ஆனால் தமிழ்ப் படங்களுக்கே உரித்தான ஒரு பாணி உண்டு. அது இத்திரைப்படத்தையும் விட்டுவைக்கவில்லை.

அதாவது காதல் காமத்தில் இருவருக்கிடையிலான முரண்பாடுகளை , தங்களுக்கு தாங்களே எதிரியாக நிற்பதை,தங்கள் இயல்பான இருப்புகளே முரண்பாடாக இருப்பதை, காட்சிப்படுத்தத் தவறி வெளியில் இருந்து அப்பாவோ அல்லது அண்ணாவோ வில்லனாக மாற்றி வெளிக்காரணிகளை கொண்டு வலிந்து திணித்து காதலின் பிரிவை நியாயப்படுத்துவது. 

இங்கு தான் சொல்ல வந்த அகச்சிக்கல்சார் விடயம் தவறவிடப்பட்டுவிடுகிறது. 

Hong kong இன் தலை சிறந்த நடிகர்களான Tony Leung, Leslie Cheung இருவரும் மிகவும் யதார்த்தமான நடிப்பில் வழக்கம்போல பின்னி எடுத்திருப்பார்கள்.நம் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் அவர்கள் நாட்டில் ”Mass Stylish Heroes”. 


இந்த இடத்தில் கூட தமிழ் சினிமாவை கேள்விக்குட்படுத்தலாம்.            தமிழ்சினிமாவில் இத்தகைய கதாப்பாத்திரங்களை தைரியமாக ஏற்று நடிக்க மிக உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் முன்வருவார்களா என்றால் நிச்சயமாக இது சாத்தியமற்றது. 

முதலில் ஓரினச்சேர்க்கை சார்ந்த புரிதல் சிந்தனைத்தளமே மிக மந்தமான நிலையில் இருக்க இது பற்றி யார் கதை எழுதுவது? யார் நடிப்பது? 

Happy together(1997) 

Wong Kar-wai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *