இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் Game Over திரைப்படம் ஓரளவு கருத்தியல் ரீதியாக முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்மத்தின் பின் இருக்கக்கூடிய “Sexual Trauma” விலிருந்து அந்த பெண்ணே மீண்டு வருவது போன்ற கருத்தியலும் காட்சியமைப்பும் தமிழ் சமூகத்தில் புதுமையான அணுகு முறையாக முன்னிறுவிப் பேசபட்டது.
எனக்குத்தெரிந்து கருத்தியலை,கதாப்பாத்திரங்களை,நேர்த்தியாக கட்டமைக்காதவிடத்து எவ்வளவு தீவிரமான, உணர்வுப்பூர்வமான விடயத்தை பேச முற்பட்டாலும் அத்திரைப்படம் வெறும் சுவாரஷ்யத்தை கொண்டு பார்வையாளர்களின் சுரண்டலுக்கும்(Exploitation),நுகர்வுக்குமான திரைப்படமாகவே அணுகப்படும்.அதைத்தான் இயக்குனர் கதாப்பாத்திர வடிவமைப்பிலும் பெண்களை காட்சிப்படுத்தும் விதத்திலும் பிரதிபலிக்கச்செய்திருக்கிறார்.
திரைப்படத்தில் முதல் பாதி தேவையற்ற மிக மேம்போக்கான மற்றும் பார்வையாளர்களுக்கு உணர்வுகளைத்தூண்டும் என்ற நம்பிக்கையின் பேரில் போராட்ட குணமிக்க ஒரு பெண்ணை முன்னிறுவுவதாக சஞ்சனா என்னும் கதாப்பாத்திரம் காணப்பட்டது.இங்கு அந்தப்பெண் எதிர்கொள்ளும்“புற்றுநோய்” (cancer)என்னும் விடயம் ஆண்களைக்குறிக்கும் உவமையாக அல்லது குறியீடாக அவதானிக்க முடிந்திருந்தாலும்;அம்முன்கதை வெறும் உணர்ச்சிப்பிழம்புகளை தமிழ் சமூகத்தில் வழக்கமாக கட்டமைக்க முனைவது போல போலித்தன்மை நிறைந்ததாக கட்டமைத்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.இது போக ஒருவித அமானுஷ்ய தன்மையை சஞ்சனாவின் அஸ்தியினூடாக tatto வில் தப்சியின் உடலில் ஏற்றப்படுவதன் மூலம் சஞ்சனாவின் கேன்சருக்கு எதிராக போராடும் குணம் தப்சியிடம் உள்வாங்கப்பட்டு அவர் தனக்குள் நிகழும் trauma விற்கெதிராக போராடுவதாக காட்சிப்படுத்தப்படுவது யதார்த்தத்தை ஒரு விதமாக சீர் குலைத்து அமானுஷ்யத்தையே முன்னிறுவுவதாக தோன்றியது.ஆக அஸ்தி,ஆவி, அமானுஷ்யம் என்ற தோரணையில் தான் சமகாலப் பெண்ணின் இருப்பு மற்றும் உளவியல்,உடலியல் போராட்டங்கள் நம்முன் கொண்டுவரப்படுகின்றன.
இரண்டாவது பாதி தப்சியின் மனதிற்குள் நிகழ்த்தப்படுபவை.அவருக்கு Game இல் இருக்கும் அதீத ஈடுபாடு மற்றும் தான் வன்புணரப்பட்ட இடத்திலிருந்தபோது எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையை கடக்கும் ஒரு போராட்டமாகவே காட்சிப்படுத்த முனைந்திருந்தாலும் அது வெறுமனே ஒரு எண்ணமாக(idea) பேசப்படலாமே ஒழிய அதில் கொண்டாடித்தீர்க்க எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.
பெண்களுக்கு நிகழும்பாலியல் வன்மங்கள்,வெறுமனே திரைப்படத்திற்கு சுவாரஷ்யத்தை மட்டுமே ஊட்டி பார்வையாளர்களை Exploitation செய்து தீனி போடுவது தொடர்பான மிகப்பெரும் விமர்சனம் வெளி நாட்டுத்திரைப்படங்களின் மீதே அதீதமாக முன்வைக்கப்படுகின்றன.
இரண்டாம் பகுதியில் சிக்கல் என்னவெனில் இங்கே பிரதான கதாப்பாத்திரமாக காட்டப்படும் தப்சி ஒரு உயர் வர்க்க இன்னும் சுயாதீனமாக தொழில் புரியும் ஒரு பெண்.தமிழ் சமூகத்தைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கு வர்க்க அடிப்படை, மற்றும் தொழில் முறையை வைத்து சமூகத்தில் ஒருவித அங்கீகாரமும் சுய புரிதலும் இருக்கும் என்பது ஒரு பார்வை.அந்தப்பெண் பாதிக்கப்பட்டவராக இருக்குமிடத்து “நான் அன்று அந்த புதுவருட நிகழ்வுக்கு போயிருக்கக்கூடாது” என்று தன்னைத்தானே குற்றவுணர்வுக்குள்ளாக்கி தன்னைக் காயப்படுத்திக்கொண்டு தன் பெற்றோரிடம் அழுவார்.இந்தப்பெண் இங்கே எப்படி இவ்வளவு பிற்போக்காக மாறி பேசுகிறார் என்பதில்தான் இயக்குனர் வெறுமனே சுரண்டலுக்கான திரைக்கதையாக மாற்றியிருகின்றார் என்பது புரியும்.”நான் இந்த ஆடை அணிந்து சென்றிருந்தால் வன்புணரப்பட்டிருக்க மாட்டேனோ?,இந்த இரவு வெளியில் செல்லாமல் இருந்திருந்தால் வன்புணரப்பட்டிருக்க மாட்டேனோ? என்பது ,பாதிக்கப்பட்டவர்(victim) தன் இருப்பு மீது சமூகப்பார்வையைப் போட்டுக்கொண்டு தன்னைத்தானே நிந்தித்துக்கொள்ளும் (Blame) போக்காக மாறிவிடுகிறது.ஆண்களும் பிற சமூகமும் victim blame செய்வதைத்தாண்டி தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டு குற்றவுணர்வுக்குள்ளாகி இது போல இனி செய்வதிலிருந்து நான் ஒதுங்கி ஒழுக்கமாக இருக்கவேண்டும்.அவ்வாறில்லாதவிடத்து எனக்கு rape நிகழும்” என்ற எண்ணப்போக்கையே படித்து சுதந்திரமாக தொழில்புரிந்து உயர்வர்க்கத்தில் வாழும் ஒரு பெண்ணின்மீது வைத்து அவ்வகையான பெண்களை பிற்போக்காக மீளமைப்பதாக தோன்றியது.
அந்த வகையில் பாலிவுட் திரைப்பட பெண்கதாப்பாத்திரங்கள் பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாகவே தோன்றுகின்றது.NH10,Masaan,Pink,Highway போன்ற திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் தன் செயல் குறித்து என்றுமே குற்றவுணர்வுக்குள்ளானதில்லை.இன்னும் “நல்ல பெண்” என்று இந்த சமூகம் நிறுவிய எந்த ஒழுக்கக்கோட்பாட்டிற்குள்ளும் பெண் தன்னைக்கொண்டுவர முனைந்ததும் இல்லை.ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே தலை கீழ். கடந்த வருடம் அருவி திரைப்படம் கூட “நல்ல பெண்” என்ற கோணத்தை அந்த பெண் நிறுவ முனைந்ததில் தான் தமிழ் சமூகத்தில் கொண்டாடப்பட்டது.நல்ல பெண் யார் என்று இவர்களிடம் கேட்டால் செக்ஸ் இல் ஆர்வம் மற்றும் ஈடுபாடற்ற பெண்ணைக் கை காட்டுவர்.இது குறித்து கேட்டால் தமிழ் சமூகம் முன்னேறவில்லை.இப்பொழுதுதான் தவழ்ந்து கொண்டிருக்கின்றது.மெதுவாகத்தான் வருவார்கள் என்று ஓராயிரம் காரணங்களை அடுக்குவார்கள்.
அடுத்து தப்சியின் வீட்டில் வேலைக்கு இருக்கும் அந்த கீழ்த்தட்டு பெண்ணை திரைப்படம் முழுக்க உபயோகிப்பதைப்பாருங்கள்.தப்சியின் trauma போராட்டத்தினுள் அந்த வேலைக்காரப் பெண்ணை உள்வாங்கி அவர் கழுத்து வேட்டுப்படுதலும்,மாடியிலிருந்து விழுதலும், என்று Game ஐ சுவாரஷ்யப்படுத்தும் நோக்கம் கருதி,ஒரே நேரத்தில் இயக்குனர் தப்சிக்கான இடத்தையும் வேலை செய்யும் பெண்ணுக்கான இடத்தையும் தன் கருத்தியலில் எங்கு நிறுவியுள்ளார் என்று பாருங்கள்?
தப்சி ஒரு மேல் வர்க்க மற்றும் சுயம் குறித்து சந்தேகம் கொண்ட எலைட்வகையறாப்பெண்.அதே வேளை வீட்டு வேலைக்காக ஒரு பெண்ணை நிர்ணயித்திருப்பார்.தப்சியை பார்த்துக்கொள்ள, இல்லை இல்லை உயிரைக்கொடுத்தேனும் அந்த வேலைக்காரப்பெண் தப்சியைப் பாதுகாத்துக்கொள்ளும் இடத்தில் இயக்குனர் வைக்கிறார்.இதுதான் ஒரே திரைப்படத்தில் வர்க்க வேற்றுமை கொண்ட இரு வேறு பெண்களை திரைப்படத்தில் கையாளும் விதமும் பார்வையாளருக்கு காட்ட முனையும் விதமும்.இவ்விடத்தில் திரைப்படத்தின் பிரதான கதாப்பாத்திரமான தப்சி தானே ஒருவித ஹீரோயினிசத்தன்மையோடுபோராடுவதாகக் காட்ட முனைந்து வேலைக்காரப்பெண் தப்சிக்காக இறந்தால் கூடப்பரவாயில்லை என்னும் போக்கு முன்னிறுவப்படுகின்றது.இதை தப்சியின் trauma வில் Game ஆக நிறுவி பார்வையாளர்களை அலைக்களிப்பதுடன்,இயக்குனர் சார்ந்து வர்க்க அடிப்படையில் பெண்கள் பற்றிய நேர்மையற்ற பார்வையை நமக்குத்தந்து விடுகிறார்.
இங்கு திரைப்படத்தின் கருத்தியலைமுற்போக்காக அணுக நினைக்கும் இயக்குனருக்கு பெண்களின் இருப்பையும் வர்க்கத்தையும் கொண்டு அவர்களை காட்சிப்படுத்தும் இயக்குனரின் பார்வை எவ்வளவு பிற்போக்குத்தனங்கள் நிறைந்தவை?