சுயத்தின் அதிருதிப்திகள் (Girl 2018)

தன் பாலினம் குறித்து பதட்டம் கொள்ளச்செய்யவும்,பெரும்பான்மை சமூகம் அங்கீகரிக்கக்கூடிய உடலியல் கூறுகள், இன்னபிற  அலங்காரங்களைக்கொண்டு தன்னைக்குறித்த பாலினத்திற்குள் வகைப்படுத்தி அடைத்துக்கொள்வதற்கும் ஏதுவாகவே சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது.

புறத்தோற்றம் மற்றும் பாலியல் உடற்கூறுகளைக் கொண்டுதான் ஒருவறது பாலினம் தீர்மானிக்கப்பட்டு சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் இன்னபிற சலுகைகளும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றதெனில், சமூகத்தில் பாலினம் பற்றிய இருப்பு குறித்து  சிந்திக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இன்னும் தற்காலத்தில் தன் இயல்பான உடலை தானே வெறுக்கச்செய்ய, தன் உடலியல் கூறுகள் குறித்து மனதளவில் அதிருப்தியடையும் நிலையை உருவாக்கக்கூடியவாறே பாலின அரசியல் சமூகத்தில் இறுக்கமாக  நிறுவப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.

ஒரு நபரின்  பாலின அடிப்படையைக் கொண்டு “இவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் அல்லது வாழவேண்டும்” என்று குறிப்பிட்ட சமூகம் அல்லது குழு பல்வேறான அழுத்தங்களை கொடுக்குமிடத்து, அந்நபர் உளவியல்,உடலியல் ரீதியாக எந்தளவுக்கு சுய சந்தேகத்துடனும் சுய வெறுப்புடனும் வெறுமையாக தன்  தினசரி வாழ்க்கையைக் கடத்துவார் என்பது பெரும்பான்மையாக பேசாப் பெருந்துயர்.

Gir(2018) திரைப்படம் “பெண்ணாக” மாறத்துடிக்கும் இளம் மாற்றுப்பாலின பாலே நடனத்தில்(ballet dance) பேரார்வமிக்க Lara எனும் கதாப்பாத்திரத்தின் உளவியல், உடலியல்,பாலியல் சிக்கல்களை ஆராய முனைகிறது.Nora Monsecour எனும் தேர்ச்சிபெற்ற பாலே நடனகலைஞரின் உண்மைக்கதையின் மையத்தை மேம்போக்கான அடிப்படையில் உள்வாங்கி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.பருவவயதை எத்தனிக்க தயாராகவிருக்கும் லாரா ஒரு பெண்ணாக இருக்க விரும்பி பாலின மறுசீரமைப்பிற்கான சிகிச்சைகளை(gender reassingment surgery)மேற்கொண்டு வரும்போது அதில் முழுமையாக நம்பிக்கையும் பொறுமையுமற்றவராக காணப்படுகிறார்.தாராள வாத,தொழிநுட்பத்தில் முன்னேற்றம் கண்ட சமூகத்தில் வாழும் போதும் இன்னும் குடும்பத்தில் உறுதியான ஆதரவு வழங்கப்பட்டும் எத்தகைய காரணிகள் உளவியல் ரீதியாக லாராவை அழுத்தத்துக்குள்ளாகி துன்புறுத்துகின்றது என்பது குறித்து இயக்குனர்(Lukas Dhont) மிக நுட்பமான பார்வையை பார்வையாளர்கள் மீது செலுத்தியுள்ளார்.

“நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பவில்லை;நான் ஒரு பெண்ணாக  இருக்க விரும்புகிறேன்”(I Don’t want to be an example; I want to be a girl) என்பது லாரா தன் தந்தையிடம் தன் இலக்கு பற்றி முன்வைக்கும் கோரிக்கை.

இங்கு பெண்ணிற்கான வரையறை என்ன? என்ற கேள்வி எழலாம்.தற்காலத்தை பொறுத்தமட்டில் பெண்கள் தம் இருப்பு,சுதந்திரம் குறித்து,காலங்காலமாக ஆண்மைய ச்சமுதாயத்தினால்  நிறுவபபட்ட பிம்பத்தினை உடைத்து “நான் எதுவாக வேண்டுமானாலும் இருப்பேன்” என்று பேச முற்படுகையில், லாரா தன் அறிவுக்கு புலப்படும் வண்ணம்,தான் வாழும் பெண் சமூகத்தில் நிலவும் பெண்மைக்கான குறித்த சில பிம்பங்களை மாத்திரம் பிடித்துக்கொண்டு அதற்குள் தன்னைக்கொண்டுவர முற்படுகிறார்.இங்கு தனக்கான சுதந்திர இருப்பை நிறுவ வேண்டுமாயின், அதாவது நவீனப் பெண்ணிய வாதிகள் கூற்றுப்படி  “நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்” என்று லாராவும் சுதந்திரமாக தன் இருப்பை ஏற்று வாழவேண்டுமாயின் முதலாவது தான் பெண் என்பதை,குறித்த சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.ஆக அடிப்படையில் தான் பெண்ணாகவே  இருக்க வேண்டும்,இன்னும் சமூகம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் லாரா மூர்க்கமாகவும் தன்முனைப்பாகவும் இருப்பதனைக் திரைப்படம் முழுக்க காண முடிந்தது.

ஒரு மாற்றுப்பாலினத்தவரது தினசரி வாழ்க்கையில் தன் சுயம் குறித்து  “நீ ஒரு தவறான உடலில் இருக்கிறாய்” என்று ஒரு கோடி நினைவூட்டல்களை திரும்ப த்திரும்ப மனதுக்குள் போட்டு அழுத்திக்கொண்டேயிருக்கும்.இது “Gender Dysphoria” எனப்படும் “தன் பிறப்பின் போது வகைப்படுத்தப்பட்ட பாலின அடையாளத்திற்கும் தற்போதைய பாலின அடையாளத்திற்கும் இடையில் அதீதமாக பொருந்தா தன்மையை உணர்ந்து தானே வருந்திக்கொண்டிருப்பதனைக் குறிக்கும்” ஒரு உளவியல் சிக்கல்.

லாரா தான் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடியைப் பார்த்து தன் தோற்றம் குறித்து அதிருப்தி கொள்கிறார்.இந்தக்கண்ணாடிகள் தன் தோற்றத்தை உண்மையாகவே வெளிப்படுத்துகிறதா? அல்லது கண்ணாடி தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் மாற நினைக்கும் ஒரு  பெண்ணாக நொடியேனும் தன்னைக்காட்டி விடாதா?, இன்னும் தன்னை ஈர்க்கும் ஆண்களுக்கு தான் எவ்வாறு தோன்ற வேண்டும்? என்று தினசரி சுய சந்தேகம் கொண்டு தன்னுடலில் அதிருப்தியடைகிறார்.

திரைப்படம் முழுக்க முழுக்க லாராவின் அமைதியும்,உடல் பிம்பங்கள் குறித்து நுட்பமாக அதிகமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் அவரது உளவியல் சிக்கலைக் கண்டுபிடிக்க வேண்டி பார்வையாளரைத்தூண்டும் திரை மொழியாகவே தோன்றியது.இத்தகைய உளவியல் சிக்கல்களைத் தன்னகத்தே கொண்ட லாராவின் அமைதிதான் பார்வையாளர்களை மேலும் மேலும் சீர்குலைத்து விடுகின்றது.

பொதுவாக மாற்றுப் பாலினத்தவர் தங்களது பாலின மாற்றம்,அடையாளம் குறித்து வெளிப்படுத்துவது(self expression)அதிகமாகவும் அவர்களுக்கான ஆழமான தேவையாகவும் இருப்பதை அவதானிக்கிறோம்.இவ்வாறிருக்க லாரா தனக்கான சிக்கலை வெளிப்படுத்தாது,அவரது தந்தையின் குரலையோ அல்லது சிகிச்சையாளரது குரலையோ ஏன் நாடி நிற்கிறார் என்பது அவருக்குள்ளிருக்கும் முரண்.இது தன்னை செயலற்றவராக(passive) இன்னும் சமூக ஒடுக்குமுறைக்கு இயைந்து நடப்பவராகவும்,தங்களின் குரல்களாக பிறர் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கலாம்.ஆனால் இங்கு இவரது பாலின மாற்றத்திற்கான பதின்ம பருவ வயது,மிகவும் கடினமானதும்,முதிர்ச்சியற்ற தன்மையுடன் பல்வேறு குழப்பங்களைத் தோற்றுவிக்க கூடிய ஒன்றாகவும் கருதப்பட வேண்டியுள்ளது.

பாலின மாற்றத்துக்கான வசதி வாய்ப்புகள்,தொழிநுட்ப முன்னேற்றங்கள்,குடும்ப ஆதரவுகள் என தன் இருப்புக்கு சாதகமாக அத்தனை வளங்களும் உதவிவிகளும் கிடைக்கும் முற்போக்கான,தாராளவாத  சமூகத்தில் கூட லாரா எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல் மிக மிக நுணுக்கமாக அணுக வேண்டிய ஒன்று.பாலின தராளவாதத்திற்கு ஆதரவு வழங்கும் சமூகத்திலேயே  எண்ணிப்பார்க்கவியலாத பாகுபாடுகள்,அவமதிப்புகள் அத்துமீறல்கள்,ஒடுக்குமுறைகள் என்பன தொடர்ச்சியாக நிகழ்ந்தேறிகொண்டிருகின்றன.குழுவாக,சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படும் உளவியல் வன்மத்தை இயக்குனர் திரைப்படத்தில் பதிவு செய்யத்தவறவில்லை.

லாராவுடன் நடனமாடும் பெண்களுக்குத்தெரியும் இவர் ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாற எத்தனிப்பவர் என்று. இருந்தாலும் குழுவாக சேர்ந்து கொண்டு அவரை பெண்ணாக ஏற்காமல்,”நீ குளிக்கும்போது எங்களது உடலுறுப்புகளைப் பார்த்து ரசித்துவிட்டிருப்பாய் ,எங்களுக்கு அதில் எந்த சிக்கலும் இல்லை,அது போல உன்னுடைய பிறப்புறுப்பையும் காட்டு” என்ற தொனியில் கோருவது  அத்தகைய உளவியலில் சிக்கலில் தத்தளிக்கும் ஒருவருக்கு நிகழும் வன்மத்தின் உச்சம்.இத்தகைய ஒரு சிக்கல் குறித்து  நம் தமிழ்சமூகத்தில் வாய் திறக்கக்கூட வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது.முதலில் இத்தகைய பிரச்சனைகள் பாதிக்கப்பட்ட குறித்த நபரிடமிருந்து வெளியில் அடையாளப்படுத்தப்படுமா என்பதே புதிர்.  

லாரா தினமும் நடனத்திலும் கூட பெண்ணாக இருக்கவே ஒத்திகை செய்கிறாள்.அவள் தெரிவு செய்த பாலே நடனத்தில் பெண்மையின் உடலியற்பங்குகளை,அசைவுகளை முழுமையாக வெளிப்படுத்தி தேர்ச்சி பெற்ற பெண் நடனக்கலைஞராக மாறுவதன் மூலமும்,அங்குள்ள மூத்த நடனப்பயிற்றுவிப்பாளர்களை திருப்திப்படுத்துவதன் மூலமும் தன்னை பெண்ணாக சமூகமும்,கலையும் உத்தியோக பூர்வமாக,முழுமையாக அங்கீகரிக்கும் என்பதுதான் லாராவின் அவா.இதானாலேயே லாரா ஏன் பாலே நடனத்தைத் தெரிவு செய்தார் என்பது குறித்து நாம் சந்தேகிக்கவேண்டியுள்ளது.பாலே  நடனம் என்பதால் லாரா புரிந்து கொள்வது என்ன? என்ற கேள்வியை முன்வைத்தால்,அந் நடனத்தை தெரிவு செய்ததன் நோக்கம்,அணுகுமுறை  எல்லாமே தன்னை பெண்ணாக சமூகத்தில் முன்னிறுவ வேண்டும்,பெண்ணாக அங்கீகரிக்கவேண்டும் என்பது மட்டுமேயன்றி வேறு எந்தவித நோக்கமுமில்லை என்பது புரியும்.

ஆனால் அங்கு நிகழ்வது என்ன?

அவள் நடனத்தில் பிந்தங்கியவள் என்றால் கூடப்பரவாயில்லை.அவளது நடத்திறனின் வீரியம்,முன்னேற்றம் குறித்து நடனப்பள்ளியாசிரியர் மகிழ்ச்சியாக அவளது தந்தையிடம் கூறுகிறார்.

நடனமாட அணியும் ஆடையில் வெளிப்புறமாக தன் உடல் தோற்றத்தில்  பிறப்படையாளம் (ஆண்குறி) துளியேனும் பிறருக்கு தெரிந்துவிடக்கூடாதென்பதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார்.இன்னும் பசைப்பட்டையினால் (Tape) தன் பிறப்புறுப்பை இறுக்கமாக  சுற்றிக்கட்டிகொண்டு நடமாடுகிறார்.இது ஒருவித சுய அழித்தலே.!நடனமாடும் போது  அவரது கவனம் முழுக்க தன் ஆண்குறி வெளித்தெரிகிறதா?,இல்லையா? என்ற சந்தேகத்துடனும் பதட்டத்துடனுமே நகர்கிறது.இதுகுறித்து தன் தந்தை பேசியதைக் கூட கவனத்திற் கொண்டதாகத்தெரியவில்லை.தினசரி ஒத்திகையின் பின் இயல்பாக மூச்சுக்கூட நிம்மதியாக விடமுடியாமல் தடுமாறி கழிவறையினுள் சென்று  அதனை அகற்றியபின் தன் இயல்பு நிலைக்குத்திரும்புவார்.

நடனமாடிவிட்டு தொடர்ச்சியாக குளிக்காமல் வீட்டுக்குச்சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண் இதுகுறித்து “இங்குள்ள அனைவரும் உன்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்று  சொன்னதும் தனக்கு விருப்பமில்லாவிடினும் “என் இனம் என்னைப்பற்றி என்ன நினைக்கிறது,என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ?” என்ற குழப்பத்தில்  குளித்து விட்டுச்செல்ல தயாராகுவார்.ஆனால் குளிக்கும்போது நிம்மதியிழந்து தன் மார்பின் அளவு குறித்தும் ஆண்குறி குறித்தும் பிரக்ஞையடைந்து கூனிக்குருகி ஒருவித அசெளகரியத்துக்குள்ளாகி கடமைக்கு குளித்து விட்டுச்செல்வார்.ஒத்திகை மண்டபத்தில் அவரது நடனம் குறித்த அவருக்கிருந்த நம்பிக்கையும் உற்சாகமும்,பிற பெண்களுடன் குளிக்கும்போது ஏற்பட்ட  நெருக்கடியினால் அமைதியின்மையைத் தோற்றுவித்து “தன்னால் நன்றாக நடனமாட முடியும்”என்ற நம்பிக்கைக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது.

பொதுவாக நடனம் எல்லைகளைத்தாண்டி சுயத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.லாரா அடிப்படையிலேயே தன் சுயத்தை ஏற்காமல் அதை வெளிப்படுத்துவதில் (self expression) நாட்டமற்றவராகவும் மந்தமானவராககவும் இருக்கும்போது,வளர்ந்து வரும் நடனக்கலைஞராக தன்னை முன்னிறுவவோ, தன் சுய இருப்புக்கான அதிகாரத்தை அல்லது உரிமையை பெற்றுக்கொள்வதிலோ தோற்றுப்போய்விடுகிறார்.

இவ்வயதில் லாரா எதிர்கொள்ளும் மற்றுமொரு பிரதான சிக்கல் பாலியல் உணர்வெளுச்சிகளும்,தனக்கான பாலினத்தேர்வு குறித்த முயற்சியும்.லாராவின் தேர்வு ஒரு ஆண் தான் என்றாலும்;தன்னைப் பெண்ணாக முன்னிறுவிக்கொள்ள வேண்டுமெனில் ஒரு ஆணுடலை அணுக வேண்டும் என்ற நோக்கமும் இதற்குள் ஒரு அடுக்காக இருப்பதனை அவதானிக்க முடிந்தது.இன்னும் அவ் ஆண் தன்னுடலை பெண்ணாகப் பாவித்து தொடுதலோ அல்லது  ஏற்றுக்கொள்தலோ அவருக்குப் போதுமானதாகிவிடுகிறது.இந்நிலையில்  தான் ஒரு  மாற்றுப்பாலினம் என்று அறிந்திராத இன்னும் பார்த்தமட்டில் தன்னை ஒரு “பெண்” என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆணைத்தான் நாடுகிறார்.லாரா தன் வகுப்பில் உள்ள எந்த ஆண்களுடனும் பெரிதாக நெருங்கிப் பழகவில்லை.இன்னும் அவர்களுக்கு லாரா ஒரு “மாற்று பாலினப்பெண்” என்பது நன்றாக தெரிந்திருக்க;அடிப்படையில் தன்னை இன்ன பாலினம் தான் என்று அறிந்த சமூகத்திடமிருந்து விலகி யாரென்றே அறிந்திராத ஒரு அந்நிய ஆணுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள நாடுவதுதான் அவருக்குள்ளிருக்கும் சிக்கல். இங்கே காதலுக்கான பேச்சுக்கே இடமில்லை.காமத்துடன் அணுக அவ் ஆண்  தகுதியானவன் என்பதனை அறிந்துகொள்கிறார்.ஒரு முறை அந்த ஆண் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை தூரத்திலிருந்து அவதானித்துவிட்டு,அந்தப்பெண்ணின் இடத்திற்குள் தன்னைப்போட்டுகொள்ள முனைந்து ஒருவித  பதட்டத்துடனும் குழப்பத்துடனுமே முன்பின் அறிமுகமற்ற ஆணிடம் செல்கிறார்.அங்கு சென்றதும் தனக்கு மார்பகமில்லை என்பதுகூட லாராவிற்கு சிக்கலில்லை,ஆனால் உறவுகொள்ளும்போது பெண்ணுறுப்பின்றி தன்னை எவ்வாறு ஆணிடம் தான் பெண்தான் என்று   நிறுவிக்கொள்ள முடியும்? இன்னும் அவ் ஆண் முத்தமிட ஆரம்பித்து சில கணங்களிலேயே பெண்ணுறுப்பு குறித்து  கவனம் செலுத்தியதை அறிந்த லாரா ஏமாற்றமடைகிறார்.அவ்வயதில் உடலுக்குத் தேவையான உணர்வுகளைப்  பெற்றுக்கொள்ளவேண்டுமாயினும் “பெண்ணுறுப்பு இன்றியமையாதது”(Vagina) என்பதை உறுதியாக பற்றிக்கொள்கிறார்.அன்று நடந்த நிகழ்வில் தன் பிறப்புறுப்பு குறித்து மேலும் மேலும் அதிருப்தியடைந்து வருந்துகிறார்.

இறுதியில் தன் இருப்பை ஏற்றுகொள்ளவும்,தன்னைத்தானே நேசிப்பதற்குமான பாதை அவரது பிறப்புறுப்பு வழியாகத்தான் இருக்கின்றது என்பதை குழப்பத்துடன் கண்டடைகிறார்.அது தன்னுயிருக்கே ஆபத்தை விழைவிக்கும் என்பதில் துளியும் சிரத்தை கொள்ளாமல் “தன் பாலினத்தை சமூகத்திடம் முன்னிறுவ வேண்டிய பொறுப்பு தனக்கானது” என்ற   இடத்தில் தன்னைப் போட்டுக்கொண்டது அவரது உளவியல் சிக்கலின் தீவிரத்தன்மையை பறை சாற்றுவதுடன் பார்வையாளருக்கு சங்கடத்தையும் தோற்றுவிக்கின்றது.

லாராவின் இறுதி முடிவு திரைப்படத்தில் மாற்றுப்பாலினத்தவருக்கு பாதகாமான தூண்டுதல்களைத் தோற்றுவிக்கும் என்பது பெரும்பான்மையான பார்வையாளர்கள் மற்றும் மாற்றுப்பாலின ஆதரவாளர்களின் விமர்சனமாகவிருந்தது.தனது உண்மைக்கதையில் இவ்வாறான சிக்கல்களை நேரடியாக முகங்கொடுத்த Nora Monsecour இறுதியில் தன் இருப்பையும் அடையாளத்தையும் எவ்வாறு ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்திக்கொண்டிருக்கின்றார் என்பது பற்றியாவது ஒரு அடுக்காக திரைப்படத்தில் குறிப்பிட்டிருக்கலாம்.

monsecour இது குறித்து “ ஒரு பெண்ணை உருவாக்கும் செயன்முறையானது  என்னை நானே திருநங்கையாக ஏற்றுக்கொள்ள அனுமதித்தது;இறுதியாக என்னை நானே நேசிக்க உதவியது.’ என்று எழுதியிருக்கிறார். (The process of creating girl allowed me to accept myself as transgender and helped me  finally love myself”) ஆனால் முடிவுகள் எதையும் இயக்குனர் முன்வைக்காதது பார்வையாளர்களுக்கு மிகுந்த அசெளகரியத்தையும் கனத்தையும் தோற்றுவித்திருப்பதனை உணர முடிந்தது. இயக்குனரது நோக்கம் குறிப்பாக இளம் மாற்றுப்பாலினத்தவர் எதிர்கொள்ளும் “Gender Dysphoria” அதன் வீரியம் பற்றிய அனுபவத்தைக்கொண்டு ஒரு புதிய வாசிப்பை,தேடலை,நுணுக்கமான புரிதலை சமூகத்திற்கு வழங்குவதனை உணர முடிந்தது.

இங்கே லாரா எதிர் நோக்கும் சவால்களில் முதன்மையானது  தன்னைத்தானே அறிந்துகொள்வது (Self-Conscious) அல்லது தன் இருப்பு குறித்து விழிப்புணர்வுடன்(self-awareness) இருப்பது.இது தனது பாலினம் என்ன என்பது  பற்றிய அறிதல் அல்ல.லாரா தன் பாலினம் குறித்து மிகத்தெளிவாகவே இருக்கிறார்.ஒட்டுமொத்தத் திரைப்படத்திலும் முழுக்க முழுக்க உளவியல் சிக்கல் குறித்து பேச இடமிருந்தும் பேசாமல் லாராவை ஊமையாக்கிருப்பதுதான் இவ்வாறான கேள்விகளை மேலும் சிக்கலுக்குள்ளாகி விடுகிறது.அவர் எதிர்கொள்வது தன் பாலினம் குறித்த குழப்பமா? என்றதொரு யோசனையை பார்வையாளர்களுக்கு லேசாக தூவி விட்டிருக்கும்.இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவர் எதிர்கொள்ளுகிற குழப்பம் அனைத்திடங்களிலும் உள்ள இளம்வயதினர் எதிர்கொள்ளும் “நான் யார் ? எங்கிருந்து வருகிறேன் ? எங்கே அல்லது எந்த சமூகத்துடன் பொருந்திப்போகிறேன் ?”என்பதுதான்.

திரைப்படம் விவரிக்க முனையும் லாராவுக்குள்ளிருக்கும் முரண்பாடுகளுக்கான தீர்வாக இறுதியாக காட்சிப்படுத்தப்படுவது,அவரது உளவியல் சிக்கலிலிருந்து வெளியேறுவதற்கு தன்மீது நிகழ்த்தும் சுயவன்மம் ஒரு ஆரோக்கியமான தீர்வல்ல என்பதுதான் நாம் புரிந்து கொள்ளவேண்டியது.எது எப்படியிருப்பினும் திரைப்படத்தில் புதையுண்டு கிடக்கும் மிக சக்தி வாய்ந்த செய்தி,”மனிதர்கள் பாலினம் குறித்த சிக்கல்களின் அடுக்குகளை அறிய தங்களை எதை நோக்கி நகர்த்திச்செல்ல வேண்டும்”  என்பது பற்றி தெளிவான பதிலையும் பரவவிட்டுச்சென்றிருக்கின்றது.

ஒவ்வொரு நாளின் இறுதியிலும்,ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் தம்மைத் தாமே  நேசிக்க ஆரம்பிக்கவும்,தம் இருப்பை ஏற்றுக்கொள்ளவும்,தன்னைச்சுற்றியுள்ள சாதகமான அதிர்வுகளை (positive vibes) பற்றிப்பிடித்துக்கொண்டு வாழ்க்கையை முன்னகர்த்திச்செல்ல முனைய  வேண்டும் என்பதுதான் லாராவைப்போல் தத்தளிப்பவர்களுக்கான தேவை.

தனி மனிதனோ அல்லது சமூகமோ ஒரு தனி நபரது இருத்தல்,தோற்றம்  குறித்த சுய சந்தேகத்தை அவருக்குத் தோற்றுவித்து,தன்னைத்தானே தினமும் வருத்திக்கொண்டும் நோவினை செய்துகொண்டும் வாழ்க்கையை நரகமாக்கி விட தூண்டாமல் இருந்தாலே போதுமே.!

2020 -ஜனவரி -மார்ச் நிழல் சினிமா இதழில் வெளியான கட்டுரை.

அத்தியா-(Bulbul Isabella)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *