நாம் நம் சொந்த நினைவுகளின் சிறைவாசிகள். குறிப்பாக சிறுபராயக் காயங்களும் (childhood trauma), முடிவுக்கு கொண்டு வரப்படாத உறவுகளின் கைவிடப்படல்களும், மெளனமாக நமக்குள் நிகழும் போர்களும் உருவாக்கியவை. சந்தோஷமான நினைவுகளை விட வலிகளால்/எதிர்மறையான நினைவுகளினால் நாம் அதிகமாக ஈர்க்கப் படுகிறோம். நத்தை தனது கூட்டினைச் சுமப்பது போல, நம் கடந்தகால நினைவுகளின் ஏக்கச் சுமைகளைக் கைவிடாமல் நம்முடனே இழுத்துச் செல்கிறோம்; அந்தச் சுமை நம் முன்னோக்கிய ஒவ்வொரு நகர்வையும் மெதுவாக்குகிறது, நம்மைவிட்டு விலக்கி வைக்க முடியாத சுமையாக நம்முடனேயே பயணிக்கிறது.
நினைவுகள் என்னும் அந்த நத்தைக் கூடுதான் நமக்கு ஒரே நேரத்தில் தஞ்சமும், சிறையும். அந்தக் கூட்டினுள்ளே, அடர்ந்திருக்கும் இருளானது “வெறுமை” அல்ல; மாறாக விசித்திரமான இன்னும் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட, நெருக்கமான “அரவணைப்பு”. இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட சொந்த விரக்தியின், சுய பச்சாதாப அரவணைப்பு. நம்மை இன்னும் தீவிரமாக புரிந்துகொண்டு நம்முடன் ஆழமாக இணையும் ஒரே வழி.
காலங்கடந்து தற்போது இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் கடந்தகால நினைவுகள், தற்போதைய இருப்பைவிட, நிகழ்காலத்தை விட உயிர்ப்புடன் தோன்றும் அளவுக்கு மீண்டும் மீண்டும் மனதில் மீட்டிப் பார்க்கப்பட்டு, சுய பிரக்ஞையின்றி (சில நேரம் பிரக்ஞையுடன்) விளையாடப்படுகின்றன. பல சமயங்களில் இந்த நினைவுகளை நம் அறிவுக்கு அப்பாற்பட்டு கற்பனை செய்து உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கிறோம். ஒரு யாசகன் தனது நாணயங்களை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துக் கொள்வது போல, அந்த நாணயங்களின் எடையே நம் இருப்பை நிரூபிப்பது போல நாம் அவற்றைப் பராமரிக்கிறோம். இன்னும் நாம் யாசகனாகவே இருக்கவும் விரும்புகிறோம்.
நம்மைச் சுற்றி நாமே உருவாக்கிக் கொண்ட இந்தத் துயர கோட்டை நம்மை காப்பாற்றுகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அது அமைதியாக நம்மைச் சிறைப்படுத்துவதோ, நம் முன் நகர்வை மிகத் தாமதப்படுத்துவதோ, வெளியுலகத்தையும் புது மனிதர்களையும் மாயையாக்கி (illusion) நம்ப வைப்பதோ, ஏன்- நம் ஆக்கப்பூர்வத் திறனையே அழித்து மீண்டும் மீண்டும் கடந்தவைகளை அசைபோட்டு நினைவுச் சுழலில் அமிழ்த்தி விடுவதோ, இவை எவையுமே நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.
இந்த வழியில்தான் நினைவுகள் சரணாலயமாகவும், சிறையாகவும் மாறி விடுகிறது. நம் இருப்பை வடிவமைக்கிறது, நம் ஒவ்வொரு கண்மூடித்தனமான முடிவுகளையும் தீர்மானிக்கிறது. நாம் இவ்வளவு காலமாகச் சுமந்து வந்த சிறைக்கு அப்பால் ஒளியை எதிர் கொள்ள, அந்த மாயையை விட்டு வெளியேறும் தைரியத்தை, ஒருவர் எவ்வாறு கண்டுபிடிப்பது? அது சாத்தியமா ?
Adam Elliot இன் Memoir of a Snail (Stop Motion Animation) திரைப்படத்தில் காட்டப்படும் Grace எனும் கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையின் இழை இந்த முரண்களால் வடிவமைக்கப்படுகிறது. வலிகளால் அலங்கரிக்கப்பட்ட அக உலகின் அழகும், அதிலிருந்து வெளியேற முடியாமல் அழுந்தும் சோகமும் ஏக்கமும்.

நாம் எவ்வளவு சுய பச்சாதாப இரக்க தயவுடன் இந்தத் தஞ்சத்தை நமக்கு நாமே உருவாக்கிவிடுகிறோமோ, அது அவ்வளவு கனமாகி, நாம் அனுபவிக்க வேண்டிய அடிப்படை கொண்டாட்டங்கள் அல்லது மகிழ்ச்சியைக் கூடக் கனமாக்கி எச்சரிக்கையுடன் சுமக்க வேண்டிய நிலையை உருவாக்குகிவிடுகிறது. சுற்றியுள்ளவர்களால் அன்பெனும் பெயரில் சுரண்டப் படுவது கூட தெரியாத அளவுக்கு நினைவுச் சுமையில் மனம் அழுந்தியிருக்கும்.
தொடச்சியான சோகத்திலும் எப்போதாவது தன்னை மறந்து சந்தோசமாக இருந்து விட்டு குற்றவுணர்வுக்குள்ளாகி அழுததுண்டா ? ஐயோ! அதிகமா சந்தோஷப் பட்டுவிட்டோம். ஓ.. அதிகமா சிரித்து விட்டோம்.! கொஞ்சம் அதிகமாக பழைய நினைவுகளை நினைப்பதை நிறுத்தி விட்டோம். நமக்கு நாமே உருவாக்கிய கனமான கோட்டையைத் தூக்கிப் போட்டுவிட்டு சுதந்திரமாகி விட்டோம். நம் முதுகுக்கு பின்னால் எந்த சுருளும் இல்லை. நம்மை இந்தச் சுமைதான் நீ/நான் என்று அடையாளப்படுத்தும். எந்த கனமும் இல்லையென்றால் அது பெரிய நெருக்கடியாகிவிடுகிறது. நம் அடையாளமே பல தருணங்களில் வலிகளால் உருவானவை. அந்த நினைவுகளை வலிகளை விட்டு தர கை விட நம்மை நாமே அனுமதிப்பதில்லை. ஏனென்றால், அது போதை. பல சமயங்களில் ஆக்கப் பூர்வத்தின் அடி நாதம், சில சமயங்களில் செளகரியம் (Comfort). அதுதான் நம்முடைய இன்றைய இருப்பை கட்டமைத்திருக்கும். அந்த வலியின் நினைவுகள் தான், தன்னையும் தன் உறவுகளையும் மீட்டிப் பார்க்க ஒரே வழி.
உலகின் எடையை உணரத் துணிபவர்களுக்கு, “ஒரு ஆழமான இதயத்திற்கு வலியும் துன்பமும் தவிர்க்க முடியதவை” என்று தாஸ்தஸ்க்கி நினைவூட்டுவதை இங்கு கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது. வெறுமனே மனிதர்களின் துன்பத்தை அல்லது அந்தத் துன்பத்திற்குள் ஆழமாக மூழ்கியிருப்பதை ஒரு பக்கச் சார்பாக மட்டுப்படுத்தி அணுகி விட முடியாது. இழப்புக்களும் கைவிடப் படல்களும் கடந்தகால இறுக்கமான நினைவுகளும் நம் கட்டுப்பாடில் இல்லாதவை. ஆனால் அவற்றைப் புரிந்து ஏற்றுக் கொள்வது மிகப்பெரிய ஞானத்தைத் போதிக்கும். அத்தகைய துன்பத்தில் தான், எந்த மகிழ்ச்சியாலும் வழங்க முடியாத அறிவு, சுய விழிப்புணர்வின் வலி மிகுந்த மறுபிறப்பு இருக்கிறது. இன்னும் தன் அக உலகத்தை விரிவாக்கி ஆழமாக உணர்வதோடு பிறரது வலியைப் புரிந்து கொண்டு அவர்களுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதுதான் வலிகள் செய்யும் உன்னதமான செயல்.
நினைவுக் கூட்டினுள்ளே இருள் அதிகமாக இருக்கலாம்; ஆனால் அதுதான் நம்மை ஒளியை நோக்கி முன்னகர்த்தும். கண்டடைந்த ஒரு சிறு புள்ளி ஒளியைக் கூட பிரம்மாண்டமாகப் பிரகாசிக்கச்செய்யும். நம் ஆன்மாவைத் தூய்மைப் படுத்தும். நம்பிக்கையின் ஒளியைத் தெளிவுபடுத்தும். இன்னும் இந்த வேகமான நுகர்வுக் கலாச்சாரத்தில், எதையும் பொருட்படுத்தாத, வலிகளுடன் உட்கார பொறுமையில்லாத, ஏன் தன்னைத் தானே எதிர்கொள்ள நேரமில்லாத சமூகத்தில், ஒருவர் தன்னை ஆழமாக உணர்வதும், தன் வலிகளை மீட்டிப்பார்த்து, மனிதர்களை நினைத்துக் கொள்வதும் மிக முக்கியமான விடயமாகக் கருத வேண்டியுள்ளது. கலைஞனின் ஒளிவு மறைவற்ற,நேர்மையான துவங்கு புள்ளி இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.
இன்னும் பல சமயங்களில், இங்கே நத்தை போல மெதுவாக நகர்வதும் அவ்வப்போது தேவையானது தான். அவை எப்போதுமே முன்னோக்கியே நகரும், அது மெதுவாக என்றாலுமே! கடந்து வந்த பாதைத் தடங்களை பின்னோக்கிச் சென்று பார்த்து அழிக்காது. அதைப்பற்றி அக்கறை கொள்ளாது. முன்னோக்கிப் போய்க் கொண்டேயிருக்கும்.
இந்தத் திரைப்படத்தின் க்ரேஸ் கதாப்பாத்திரத்துடன் பலரும் இணைந்து கொண்டதற்கு காரணம்; அவள் மிக மென்மையானவள். உணர்ச்சிவசப் படக் கூடியவள்(Emotional) . சிறுவயதிலிருந்து கடந்தகால நினைவுகளின் வலிகளைச்சுமந்து கொண்டே அதனுடன் நுணுக்கமாக வாழப்பழகிக் கொண்டவள். ஆர்த்மார்த்தமாக பிரிந்து போன உறவுகளுக்காக ஏங்குபவள். அவளுடைய வாழ்க்கையில் அந்த வலிகளுக்குள் ஒரு அமைதி, தியானம் இருக்கும். ஒரு பிரார்த்தனை. பல ஏமாற்றங்களுக்குப் பின்னும் அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்ளப் பழகியிருப்பாள். எங்கோ இருந்து கிடைக்கும் சிறு நம்பிக்கையைக் கூட பற்றிக் கொள்வாள்.
ஒரு வேளை, இந்தத் திரைப்படத்தின் குறிக்கோள்/அமைதியான வெற்றி இங்கேதான் இருக்கிறது; இருளுக்குள்ளிருந்து ஒளியை முன்னோக்கிப் பயணிக்கும் சிறு அசைவு கூட (பயத்துடனோ, நடுக்கத்துடனோ, தயக்கத்துடன் எடுத்து முன்வைக்கும் அடி கூட) இந்த உலகில் உயிர் தப்பித்தலை விட மிகப் பெரும் வீரச் செயலாக இருக்க முடியும். உண்மையில் மிகப்பெரிய போராட்டம் என்பது, கனமான நினைவுகளைச் சுமந்து திரிவதில் அல்ல; மாறாக அந்த நத்தைக் கூட்டிற்கு அப்பால் வாழ்க்கை இருக்கிறது என்று நம்பிக்கை கொள்வதும், இன்னும் எப்பொதுமே அந்த ஓட்டுக்குள்ளேயே தங்கிவிட தூண்டப்படுதலுக்கு எதிராக செயல்படுவதும் தான்.
பி. கு: இது தவிர்த்து இந்தப் படத்தின் உருவாக்கம், கருத்தியல் மற்றும் ஈர்க்கத்தக்க பாத்திர வடிவமைப்பு என்று ஆழமாகப் பேச பல விடயங்கள் இருந்தாலும் முக்கியமான கருவை மட்டும் அடையாளப் படுத்தியிருக்கிறேன்.