book introduction

“ஸலாம் அலைக்” அடையாளம் தேடும் அகதி

இலக்கியச்சூழலில் ஈழப்போர் குறித்த காத்திரமான விமர்சப்பார்வை கொண்டவை ஷோபாவின் எழுத்துக்கள். தமிழ் ஈழப்போர் பற்றி, தமிழ் மொழிப் பற்றுடன் வெளியில் நின்று ரொமான்டிசைஸ் செய்து துதி மட்டும் பாடிக்கொண்டிருப்பவர்களுக்கிடையில், போரில் சிக்குண்டு அலைக்கழியும் சாமானியனின் இருண்ட அவமானங்கள் நிறைந்த பக்கங்களை, நீண்ட விடைகாண முடியாத பயணங்களை பேசுபொருளாகக் கொண்டுவருகிறார்.

போரின் போதிருந்த சூழலும் போரின் பிந்திய சூழலும் விவரிக்கப்பட்டு பாஸ்போர்ட்,விசா  இல்லாமல், அலைக்கழிந்து திரியும் ஒரு சாமானியனின் பார்வையிலிருந்து அவனைச்சுற்றி நிகழும் வன்முறைகளை,  குற்றவுணர்வுகளை ஆவணப்படுத்தும் நினைவுக்குறிப்பாக இந்நாவலை அடையாளம் காணமுடிந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு- கொழும்பிலிருந்து தாய்லாந்து- தாய்லாந்திலிருந்து பிரான்ஸ்- பிரான்சிலிருந்து… எங்கே ? போரின் பின்னரும்  நிரந்தரமாக ஓரிடத்தில் இளைப்பாறக் கூட முடியாமல் அரசின் சட்ட நெருக்கடிகளால் அவதிப்பட்டு மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டே இருக்கிறான் அந்த சாமானியன்.

நவ தாராளவாதத்தை உள்வாங்கிக்கொண்ட நாடுகள் தங்களை உலக சமாதானத்தின் முன்னோடிகளாக, சுதந்திரத்தின் முன்னோடிகளாக, பொருளாதார  சமநிலையை நிகழ்த்தியவர்களாக, இன்னும்  கலாச்சாரத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கைக்கொண்ட மனிதாபிமானிகளாக தங்களை முன்னிறுவிக்கொண்டு வலம் வருவதன் அசல்  முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது “ஸலாம் அலைக்” நாவல்.

பல்லினக் கலாச்சாரப் பின்புலத்தை கொண்ட மக்கள் ஒன்றாகவும் சுமுகமாகவும்  சுதந்திரமாக வாழ முடியும் என்கிற தாராளவாத நாடுகளின் சிந்தனையின் தோல்வியைத்தான் ஐரோப்பிய இலக்கியங்களும் சினிமாக்களும் வெகுவாக விமர்சித்து வருகின்றன. (உதாரணமாக Rainer Werner Fassbinder- Ali fear eats soul, Michael Haneke – code unknown, Fatih akin Movies , ousmane sembène – Black girl.) அப்படியொரு விமர்சனப்பார்வையை பிரஞ்சு அரசின் மீது வைக்கிறார் ஷோபா.

அகதியான ஒருவனுக்கு அகதி என்கிற அந்தஸ்த்தை வழங்கவே, ஆயிரம் முறை பரிசீலனை செய்து, இரண்டுமாத விசா,

மூன்று மாதவிசா என இழுத்தடித்து சட்டப்பூர்வமாய்த் தொழில் செய்ய முடியாமல், நிம்மதியிழந்து பிறரில் தங்கி வாழ்ந்து,தன் சொந்த அடையாளத்தை மறைத்து பிரான்ஸ் அரசின் நெருக்கடிக்குள் சிக்குண்டு தவிக்கும் புலம்பெயர்ந்தவர்களின்  அலைக்கழிப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நாடு விட்டு நாடு சென்று ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள எடுக்கும் சிரத்தை, உச்சரிப்பில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், ஊடகங்கள் ஈழப்பிரச்னையை எவ்வளவு மேம்போக்காகப் போலியாகப் புனைந்து கற்பனை பிம்பத்தை சமூகத்தில் உருவாக்கி விட்டிருக்கின்றது என்கிற ஊடகங்கள் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கின்றது.

போர்க்காலத்தில் இந்திய ராணுவம் இலங்கையில் புகுந்து சமாதானப்படை என்கிற பேரில் யாழ்ப்பாணத்தில் செய்த அத்துமீறல்கள், வன்புணர்வுகள், தமிழ் தேசியக்குழுவும் இந்திய ராணுவத்துடன்  இணைந்து புலிகளுக்குத்தெரியாமல் யாழ்ப்பாண இளைஞர்களை வற்புறுத்திப் பயிற்சி முகாமில் சேர்த்து அவர்களைத் துன்புறுத்தியது,இந்திய ராணுவத்தை வெளியேற்றிய பின் புலிகள் இந்திய,தமிழ் தேசிய ராணுவத்தால் வற்புறுத்தி பயிற்சி பெற்ற சிறுவர்களை என்ன ஏதென்றே விசாரிக்காமல் சுட்டுக்கொன்றது, இது போக கொழும்பில் சுற்றிவளைத்து தமிழ் பேசிய மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது என்று நிதானமில்லாமல் நீண்டு செல்லும் வன்முறைகளாவன  போர் எப்படி மனித குலத்தின்மீதிருக்கும் கடைசி நம்பிக்கைத்துளியையும் ஆட்டம் காணவைக்கிறது என்கிற கேள்வியையே எழுப்பும். ( நாவலில் மேலும் இவை குறித்து வாசித்து புரிந்து கொள்ளலாம்)

நாவல், ஒவ்வொரு இடங்களிலும் நிகழும் பல சம்பவங்களை அடிப்படையாகக் (event based) கொண்டிருப்பதனால் பல கதாப்பாத்திரங்கள் explore செய்வதற்கான இடத்தை ஆசிரியர் வழங்கவில்லை. தன்னிலையிருந்து கதை சொல்லப்படுவதும் அதற்கொரு காரணமாகவிருக்கலாம். மைய ஆண் கதாப்பாத்திரம் கதையைச் சுமந்து செல்வதால் அதில் வரும் பிரதான பெண் கதாப்பாத்திரத்தின் மீதான பார்வை போதுமானதாக இருக்கவில்லை. எளிய மொழி நடையில் எவ்விதப் பூடகங்களுமின்றி வெளிப்படையாகவே வன்முறைகளையும் அகதியின் அலைக்கழிப்புகளையும் அடையாளத் தேடல்களையும் பிரச்சாரத்தொனியின்றி பதிவு செய்யப்பட்டிருக்கும் நாவல் ” ஸலாம் அலைக்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *