Stop Raping Us

STOP RAPING US

Cannes திரைப்பட விழா நிகழ்வில் சிவப்புக் கம்பள வரவேற்பில் பெண்ணியச் செயற்பாட்டாளர் தன் நிர்வாண உடலில் உக்ரைன் கொடிநிறத்தின் மீது “Stop Raping Us” என வரைந்து வன்புணர்வுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் முகமாக ஆக்ரோஷமாக அலறிய  சம்பவம் அனைவரையும் நிலை குலையச்செய்தது. அங்கு அவர் கோருவது தார்மீகமாய் அவர் மீதான கவனக்குவிப்பு. ஊடகங்கள் மத்தியில் அவர் வெளிப்படுத்த நினைத்ததை நிகழ்த்திட (பேசிட)ஒரு வாய்ப்பு. இத்தனைக்கும் Cannes திரைப்பட ஆரம்ப நிகழ்வு உக்ரைன் அதிபரின் உரையுடன்தான் ஆர்பித்தது. (“It’s necessary for cinema not to be silent.”-Volodymyr Zelensky)

உலகின் தலை சிறந்த  படங்களை தேர்வு செய்தும் அவற்றை அங்கீகரிப்பவர்களாகவும் கலையின் முன்னோடியாக முன்னிறுவிக்கொள்ளும் Cannes திரைப்பட விழா ஒரு பெண்ணின் நிர்வாணத்தையும் ஆக்ரோஷத்தையும் கண்டு பயம் கொள்கிறது. உடனே  அங்குள்ள காவலாளிகளும் சுற்றியுள்ளவர்களும் அருவருப்பாக அப்பெண்ணைப் பார்த்து பதறியடித்துக்கொண்டு அவரது உடலை மூடி  அவ்விடத்தைவிட்டே அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கலை, சினிமாத்துறை, ஃபேஷன் மாடலிங் துறை பெண்ணுடல் குறித்து எத்தகைய புரிதல்களை இந்த நாகரீக முதலாளித்துவ முட்டாள்களுக்குள் தற்காலத்தில் ஏற்படுத்தியுள்ளது என்று சிந்திக்கையில் வியப்பாக உள்ளது. முதலாளித்துவம் கோரும் உடலுக்கு எதிரான உடல்  இல்லையா பெண்ணின் அப்பட்டமான நிர்வாண உடல்?சங்கடமாகத்தான் இருக்கும். உடலின் சுய வெளிப்பாட்டிற்கு, எதிரானவர்கள் இல்லையா இந்த பூர்ஷுவாக்கள்? அவர்கள் நிர்ணயிக்கும் உடையுடன், உடல்வாகுடன், கவர்ச்சித் தோற்றத்துடன் சிவப்புக் கம்பளத்தில் Arrogant ஆக நடை பயில வேண்டும். மனிதனின் Vulnerabilityக்கோ ஒடுக்குமுறைக்கெதிரான (Aggressive voice) ஆக்ரோஷமான குரலுக்கோ அங்கு இடமில்லை. மார்பங்களை, முலைக்காம்பை  பாலியல்பண்டமாக்கி வைப்பதில்தானே முதலாளித்துவத்தின் சுரண்டல் வீரியம் கொள்கின்றது. அவ்விடத்தில் இருந்த யாரேனும்  அப்பெண்ணுக்கு பேச வாய்ப்பு  வழங்கியிருக்கலாம். அதற்குக் கூட இடம்தராமல்  கருப்புத்துணிகளில் சுருட்டி அந்நிகழ்விற்கே இழுக்கு ஏற்பட்டதைப்போல தூக்கி வெளியேற்றுகிறார்கள்.

பலர் அப்பெண் என்ன பேச வருகிறாள், எதற்கு இத்தனை ஆக்ரோஷமாக கத்துகிறார்? என்பதை மறந்து அப்பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்து ஊடகங்களில் (Brut India) Slut shame செய்துகொண்டிருந்ததையும் காணக்கிடைத்தது. இவர்கள்  சாதாரணமாகவே பெண்ணுடலை sexualized செய்து மட்டுமே பார்ப்பதின் நீட்சி தான் இவை.

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினரால் தினமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாரபட்சமின்றி நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும்  அத்துமீறல் மற்றும் வன்புணர்வை உலகின் பார்வைக்கு கவனப்படுத்தவே அப்பெண் அவ்வளவு தீவிரப்போக்குடன் தன்னை வெளிப்படுத்துகிறார். பத்துவயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் அதிகமாக வன்புணரப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக ரஷ்ய ராணுவத்தினரால் குழந்தை முன்னால் தாய் வன்புணரபடுவதும், தாய் முன்னிலையில் குழந்தை வன்புணர்ந்து கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்தேறிக்  கொண்டிருக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இது போரில் கொல்லப்பட்டு இறந்து போவதை விட மோசமான  நெருக்கடிகளையும் மக்களைப் பேரழிவிற்குட்படுத்தும் கொடூரமான உளவியல் சித்திரவதைகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்குள் தோற்றுவிப்பதாக உளவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ரஷ்ய ஆக்கிரமிப்பிற்குட்பட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு பத்து வன்புணர்வுகள் நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எட்டுப்பேர், பத்துவயதுக்கும் குறைந்த குழந்தைகளாக இருப்பதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன.

“War rape” போர்க்காலங்களில் ஒரு ஆட்சியை வீழ்த்தி இன்னொரு ஆட்சியைக் கைப்பற்ற,உளவியல்ரீதியாக,சூழல் ரீதியாக அச்சுறுத்தலை நிகழ்த்தி ஒரு குழு பிற குழுக்கள் மீது வெறுப்பைக் கக்க கைக்கொள்ளும் யுக்தியில் பிரதானமானது வன்புணர்வு. உளவியல் துன்புறுத்தலை அதிகரிக்கச் செய்வதன் மூலம் எதிராளியை பலமிழக்கச்செய்யும் யுக்தியாக இது கையாளப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே ‘Rape culture’  பரிணமிக்கிறது. சமூகத்தில் நிலவும் பாலின, ஜாதிய, இன,மொழி வேறுபாடுகளை மையப்படுத்திய ஒடுக்குமுறைக்குள் முதலில் அத்துமீறல்களைக் கட்டவிழ்த்து விடும் இடம் பெண்களும் குழந்தைகளும்.

அப்பெண் Cannes இல் நடந்து கொண்டது சரியா? தவறா? என்கிற விவாதத் துவங்கு புள்ளியே அபத்தமானது. சமூகத்தில் சாதாரணமயப்படுத்தப்பட்டிருக்கும் (Rape)வன்புணர்வு,பெண் வெறுப்பு(mysoginy), பெண்ணைப் பாலியல் பண்டமாக (Sexualized) மாத்திரமே அணுகும் ஆணாதிக்கச் சூழலில் தீவிரப்பெண்ணியப் போக்கு  (Radical Feminism) அத்தியாவசியமானது என்பதுதான் தர்க்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *