திட்டம் இரண்டு (2021) திரைப்படம் எதன் அடிப்படையில் ட்ரான்ஸ்போபியா?

மாற்றுப்பாலினத்தவரின் தினசரிகளோ அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சமூக நெருக்கடிகளோ ஆவணப்படுத்தப்படாமல் ஒருதலைக் காதலின் போராட்டம் என்னும் பெயரில் (அதுவும் சிறுவயதில் முதன் முதலாக எதிர்கொள்ளும் பாலீர்ப்பு காதலின் நீட்சியாகவே கதை தொடர்கிறது) அவர்களின் பாலினத்தை பரிதாபகரமாக காட்ட முனைந்து இறுதியில் Transphobic பார்வையில் “ஆள் மாறாட்ட மோசடியாக” காட்சிப்படுத்தி கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.பாலின அடையாள நெருக்கடியிலுள்ளவரின் குரலை முன்நிலைப்படுத்தாமல் பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரே நோக்கில் திரைப்படம்  உருவாக்கப்பட்டுள்ளது.

படம் பாலின மாற்று அறுவை சிகிச்சையைப் (gender reassignment surgery ) புதிதாக தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்த முனையும் தொனியில்  எதிர்பாராத அதிர்ச்சியை மட்டுமே பின்புலமாக வைத்து (அந்த அதிர்ச்சியும் அறுவை சிகிச்சை மூலம் ஓர் பெண் ஆணாக மாறியுள்ளார் பாருங்கள் என்கிற வினோதத்தன்மை பொருந்திய ஆச்சர்யத் தொனியுடன்) thriller elements மூலம் பார்வையாளர்களை exploit செய்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிரா கதாப்பாத்திரம் (ஐஸ்வர்யா ராஜேஷ்) போலீசாக இருந்தும் ஒரு பெண்ணாக க்ளைமேக்ஸ் வரை மாற்றுப்பாலினமாக காட்சிப்படுத்தப்படும் ஆண்  கதாப்பாத்திரம் மற்றும் டாக்டர்,போலீஸ் என ஒரு கூட்டத்தால் அலைக்களிக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார். இத்தனையும் எதற்காக?  

மாற்றுப்பாலின சிகிச்சை மேற்கொண்ட நபர் தன் பிறப்பு பாலினஅடையாளத்தை மட்டுமல்லாது தன் பிறந்து வாழ்ந்த முழுச் சுவட்டையுமே அழித்து தான்கொல்லப்பட்டதாக புனைந்து குடும்பம், சமூகம் என அத்தனை பேருக்கும் பயந்து அனைவரையும் ஏமாற்றி தன் புது அடையாளத்தை நிறுவிக்கொள்ள.இன்னும் தான் சிறுவயதிலிருந்து ரகசியமாக விரும்பிய பெண்ணை அடைந்து கொள்ள. இத்தகைய ஒருதலைக் காதலைக் காட்சிப் படுத்திய விதம், “ஆள்மாறாட்ட மோசடியாகவே” திரைப்படத்தில் கடத்தப்பட்டுள்ளது.தினசரிகளில் நெருக்கடிகடிகளைச் சந்திக்கும் மாற்றுப்பாலினத்தவர்கள், எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது பற்றிப் பேசாமல் அல்லது  தன் அடையாளத்தை தைரியமாக ‘இதுதான் நான்’ என்று வெளிப்படுத்துவதற்கான இடத்தை  திரைப்படத்தில் தராமல்,அவர்களின் ஒருதலைக் காதலுக்காக ஆள் மாறாட்டத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில்  கதை நகர்வதும் சுற்றியிருந்த படித்த வைத்தியர்,போலீஸ் முதற்கொண்டு அத்தனை பேரும்  அதற்குத் துணைபோவதும் “மாற்றுப்பலினத்தவர்கள் ஆள்மாறாட்ட மோசடி செய்பவர்கள்” என்னும் பார்வையை மிக இலகுவாகவும் வலுவாகவும் உருவாக்கி விடுகின்றது.

முதன்முதலாக நிகழும் பாலியல்/ பாலீர்ப்பு அனுபவத்தை (initial sexual experience) மாத்திரம் பற்றிக்கொண்டு அது  ஒருதலைக் காதலாக உருவெடுத்து அத்தனை பிரயத்தனங்கள் மேற்கொண்டு, அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, அல்லது ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டாவது அந்நபரை அடைந்தே தீரவேண்டும் எனும் obsessive நிலை ஏன் உருவாகவேண்டும்?  முதல் பாலியல் அனுபவத்திற்கு  தூண்டிவிட்ட நபரின் மீதேதான் காலாகாலத்திற்கும் காதல் தொடர வேண்டுமா? இத்தனைக்கும்  திரைப்படத்தில் அப்பெண்ணின் முதல் பாலியல் அனுபவத்திற்கான தூண்டாலாக கன்னத்தில் முத்தமிடலைத் தான் காம உணர்வுடன் இணைத்து காட்டியிருப்பார் இயக்குனர். ஒரு தலைக் காதலில் பெண்ணை எதைச்செய்தாவது அடைந்தே தீர வேண்டும் என்பது நாம் எதிர்க்க வேண்டிய பார்த்துப் பழகிப்போன  வழக்கமான  ஆண் மன நிலையல்லவா? ஒரு மாற்றுப் பாலினத்தவரை பாலின உடைப்பு நிகழத்தப்படாத,ஆணாதிக்க சிந்தனைகளுக்குள் கட்டுண்ட hetrosexual வழிவந்த ஆணாக நிறுவுவதற்காகவா இத்தனை பிரயத்தனங்கள்? 

திரைப்படத்தில் மாற்று பாலினமாக வரும் கதாப்பாத்திரத்தை, சிறு பராயம் முதல் திருமணம் வரை பெண்ணாக (சூர்யா கதாப்பத்திரம் மூலம் ) காட்சிப்படுத்திவிட்டு பாலின மாற்று சிகிச்சையின் பின் ஒட்டு மொத்தமாக அப்பெண் கதாபாத்திரத்தை தூக்கி விட்டு ஒரு ஆணை நடிக்க வைத்து  (அர்ஜுன்) காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.இது திரைப்படத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும் போது  இன்னும் அபத்தமாக தோன்றியது.பெண்ணுக்கு ஆணைப்போல மேக்கப் போட்டிருந்தால் கூட பொறுத்துப் போயிருக்கலாம்.ஆனால் பார்வையாளரை ஏமாற்ற வேண்டும் என்றே தோற்றத்தில் குறை கூற முடியாத உண்மையான (cishet man) ஆணை ஆரம்பித்திலிருந்து காட்சிப்படுத்தி இறுதியில் அவர் ஒரு பெண்ணாக இருந்து மாறியவர் என்று சொல்வதன் மூலம் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி அதிர்ச்சிக்குள்ளாவாரோ அதே அளவு பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்து முட்டாளாக்கப்பட்டதாக உணர்வர்.இவ்வளவு மட்டமான த்ரில்லருக்கு பாலின மாற்றுச்சிகிச்சை என்பது ஊறுகாய்.

திரையில் பெண்ணும் பெண்ணும்/ ஆணும் ஆணும் முத்தம் கொடுப்பதாகவோ உறவில் ஈடுபடுவதாக காட்சிப்படுத்துவதைக் கூட பெரும்பாவமாக கருதுபவர் இயக்குனர். (இவரது முன்னைய குறும்படங்கள் இதற்குச் சாட்சி) அதனால்தானோ என்னவோ உண்மையில் ஆணாக இருக்கும் கதாப்பாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷை முத்தம் கொடுப்பதை அனுமதித்திருப்பார்.இன்னும் முத்தத்துடனே நிறுத்திக் கொண்டு அடுத்து சீனுக்கு கடந்து விடுவார் இயக்குனர்.ஆனால் பாருங்கள்,மாற்றுப்பாலினத்தவர்கள் தன் அடையாளத்தை சரியாக இன்னதுதான் நான் என்று வெளிப்படுத்த முடியாமல் தத்தளிக்கும்  தருணங்களில் தான்  விரும்பும் நபருடன் நெருக்கமான உறவு கொள்ள நேர்ந்தால் அந்நபர்  எதிர்கொள்ளும்  gender dysphoria வினால் சிரமப்பட வழிகோலுவது குறித்து இயக்குனருக்கு புரிதல் உண்டா என்பதுதான் கேள்வி.பாலுறவை வெறும் தொடுகை மற்றும்  முத்தத்துடன் மாத்திரம்தான் புரிந்து வைத்துள்ளார் என்று நினைக்கிறேன். 

சூர்யா கதிகாப்பாத்திரம் அறுவை சிகிச்சைக்கு முன்னர் வரை பெண்ணாக இருந்த போது குடும்பத்தில் நிகழ்த்தப்பட்ட எந்த ஒடுக்கு முறைக்கும் ஒரு சிறு எதிர்க்குரலெழுப்பாமல் குடும்பத்தில் எவ்வித உடைப்பையும்  தனக்காக  நிகழ்த்தாமல், டாக்டரை திருமணம் செய்து போன பின் அவர் உறவுக்காக நெருங்கும் பொழுதுகளில் தற்கொலை செய்து கொள்ள முனைகிறார். அதிலிருந்து காப்பாற்றப்பட்ட நிலையில்,இன்னும்  தனக்கு என்ன வேண்டும் என்றே உறுதியாக தெரியாத  தருணத்தில் டாக்டரால் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.டாக்டர் சமூக வலைத்தளங்களில் உலவும் மேற்கத்திய பெண்ணாக இருந்து ஆணாய் மாறிய மாற்றுப் பாலினத்தவர்களின் காணொளிகளை அப்பெண்ணிடம் காட்டிவிட்டு, மாற்றுப்பாலின அறுவை சிகிச்சைக்கு தயாராகக்கோரி ஆரோக்கியமான உளவியல் ஆலோசனைகள் என்று எதையும் முன்வைக்காமல் சகட்டுமேனிக்கு இலகுவாய் மாற்றுப்பாலின சிகிச்சை செய்துவிடலாம் என்கிறார்.மேற்கத்தைய நாடுகளில் மாற்றுப்பாலின அறுவை சிகிச்சைகள் முன்னேறியிருக்க இந்தியா போன்ற நாடுகளில் எந்தளவுக்கு முழுமையாக சாத்தியம்  என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இறந்து போனதாக கருதப்படும் தன் தோழியை யார் கொன்றார்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தேடிக்கொண்டிருக்கையில், ஒருதலைக் காதலில் தன்னை ஏமாற்றிய பெண்களைக் கொலை செய்யதுகொண்டிருக்கும் ஒரு சைக்கோவை கண்டுபிடிப்பார்.போலீஸ் கேள்வி கேட்ட உடனே பதில் காரண காரியங்களை சொல்லிவிட்டு (சூர்யாவையும் கொல்ல  நினச்சன்;ஆனா நான் கொல்லல) கொஞ்ச நாளில் பெயிலில் வந்து வெளியில் சுற்றுவார் அந்த சைக்கோ.எந்த சைக்கோவாவது கேள்வி கேட்ட உடனே பதில் சொல்லி  தன் குற்றத்தை ஒத்துக்கொண்டு பார்த்திருப்போமா?   அதுவும் ஒரு தலைக்காதலால் அவர்கள் மீது கொண்ட obsession இனால் தன்னை ஏமாற்றியவர்களாக நினைக்கும் பெண்களை  ஒவ்வொருவராக கொன்றுவிடுவார். அதே போன்ற ஒருதலைக் காதல் obsessive மன நிலையில்தான், இறந்து விட்டதாக சொல்லி  இத்தனை அலைக்கழிப்பையும்  ஆள் மாறாட்டத்தையும் செய்து அந்தளவு தீவிர மன நிலைக்குச் செல்ல  அந்த மாற்றுப்பாலினமாகவரும் ஆண் கதாப்பத்திரம் துணிகிறது ?  

படத்தின் இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையாளியை கண்டுபிடிக்க வரும்போது, மாற்றுப் பாலினமாக வெளிப்படுத்த முன்னர் இருந்த ஆண் கதாப்பாத்திரம் injection எடுத்துக்கொள்வதை ஏதோ போதை வஸ்து எடுத்துக்கொள்ளும் மோசமான drug addict ஆண் போல் காட்சிப் படுத்தியிருப்பார். கிட்டத்தட்ட அந்த சைக்கோவிற்கு இணையாக அந்த மாற்றுப்பாலினக் கதாப்பாத்திரம் குழப்பி அடிக்கப்பட்டிருக்கும். க்ளைமேக்சில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் என்று தெரியவந்த பின்னரே gender reassignment surgery க்கு எடுத்துக்கொள்ளும்  hormonal injection என்று பார்வையாளர்களுக்கு புரிந்திருக்கும்.

இவ்வளவையும் இயக்குனர் செய்துவிட்டு, இறுதியில் ஐஸ்வர்யாராஜேசும், அந்த மாற்றுப் பாலினமாக காட்டிய ஆண் கதாப்பாத்திரமும் ஒருவரை ஒருவர் நேரெதிர் நோக்கி நிற்க “இவர்கள் சேர்கிறார்களோ இல்லையோ அது முக்கியமல்ல, மாற்றுப்பாலினத்தவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,அப்போதுதான் சமூகத்தில்  அவர்களுக்கான இடம் கிடைக்கும்” என்று பாடம் எடுத்த போதுதான் ஒன்று தோன்றியது.

இயக்குனர் ஏதோ நல்ல எண்ணத்தில்  திரைப்படத்தை இயக்க முன் வந்திருந்தாலும் பாலினம் பற்றிய புரிதலில்லாமல், முற்போக்கு பேசமுனைந்து ஆண்மைய புனைவில் தன்னுள் மண்டிக்கிடக்கும் transphobic  பார்வைகளைத் தன்னை அறியாமலே திரைப்படத்தின் கதைக்கருவுக்கு குறிப்பாக screenplay மற்றும் த்ரில்லருக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்.ஆரம்பம் முதல் இறுதி க்ளைமேக்ஸ் வரை அர்ஜூன் என்கிற மாற்றுப்பாலினமாக நடிக்கும் ஆண் கதாப்பாத்திரம் கொலைகாரராக இருக்கலாம் என்கிற ஐயப்பாட்டை சுவடுகளாக திரைப்படம் முழுக்க கொடுத்து விட்டு இறுதியில்  தன் இருப்புக்கான அடையாளத்தையே அழித்து விட்டு புதியதொரு பாலின அடையாளத்துடன் வாழ்கிறார் என்பதை ஏகப்பட்ட மட்டமான twist களுடன் கூடிய கதையாக சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *