வாழ்க்கை கவிதைகளால் ஆனது.“paterson”(2016)

It is difficult to get the news from poems yet; men die miserably every day for lack of what is found there.

 William carols Williams-

கவிதைகள் யதார்த்தத்திகுப் புறம்பானவையாக,

கற்பனையானவையாக இருக்கலாம்.

ஒன்றுகொன்று முரண்பட்டிருக்கும் அதேவேளை 

பொருத்தமான மொழிக்கோர்வைகளால் மட்டும் இணைந்திருக்கலாம்.

சரி ஒரு வித மொழி விளையாட்டாகவே  இருக்கட்டுமே!

கவிதை எதையும் செய்யப்போவதுமில்லை.எதையும் செய்யச் சொல்லுமாறு தூண்டுவதுமில்லை.அது அதன் பாட்டில் இருந்துவிடுகிறது.அதனை அதன் இருப்பிலேயே ரசித்து விட்டுப்போகிறோம்.அத்தகைய கவிதை வடிவிலான,ரசிப்பதற்கு மட்டுமே உரித்தான  திரைப்படம்தான்  “paterson”(2016)

இயக்குநர் Jim Jarmusch தன் சுயகற்பனையைக்கொண்டு அவரது முழு உலகையும் மெல்லிய சந்தத்தோடு எளிமையான கையாண்டிருக்கிறார்.மனிதர்களது பொதுவாழ்க்கையில் கவிதை இல்லாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பான்மையான திரைப்படங்களில் அவை பற்றிய எவ்வித குறிப்புகள் வழங்காமல் விட்டதுமாகும் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு.ஒரு திரைப்பட இயக்குநர் தன் திரைப்படத்தில் கவிதைகளை, அது சார்ந்த ரசனை மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தும்போது கவிஞர்களும் கவிதையும் இலகுவாக பிரபல்யம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

இன்னும் கவிதைக்கான தேவைப்படுகளும் மக்களின் ரசனையும் கூடலாம். ஆனால் நம் சமூகத்தில் இங்கே யார் யார் கவிஞர் என்று தேடிப்பார்க்கும் வரையில் அல்லது “நான் ஒரு கவிஞன்; என் கவிதைகள் வாசித்ததுண்டா?” என அவரே அவரது வாயால் கேட்கும் வரையில் யாருக்கும் யாரையும் தெரியாது. திரைப்படங்களில் கவிஞர்களை மெச்சியதும் மிக அரிது.

இவற்றிற்கு புறம்பாக இத்திரைப்பட இயக்குநர் ஒரு படி மேலே போய் கவிதைகளாலும் கலைகளாலும் நிரப்பப்பட்ட ஒரு திரைப்படத்தை கவிதையாகவே வடித்துள்ளார். அமெரிக்க கவிஞர்  William carols Williams மீது அதீத பற்றும் ஆர்வமும் கொண்டு அவரைப்போல கவிதை புனைந்து வெளியிட ஆர்வமாயிருக்கும் ஒரு கலைஞன் பற்றியே  பிரதானமாக திரைப்படம் பேசிச்செல்கிறது.அவனது பெயர் Paterson. அதே பெயரில் Williams இன் பிரபலமான கவிதை தொகுப்பும் உள்ளது.இன்னும் இக்கதைக்களம் நிகழும் நகரம் கூட Paterson.

வேறுபட்ட படைப்பாற்றலுடைய ஒரு தம்பதியினரின் ஒருவார நாட்களின் அன்றாட செயற்பாடுகளை மையமாக கொண்ட முழு கதையமைப்பு. அதில் ஏழு நாட்களும் சின்னஞ்சிறு மாறுபாடுகளுடன் காட்சிப்படுத்தப்படும்.ஐந்து வேலைநாட்களும் தொடர்ச்சியான காட்சி, நடவடிக்கைகள், இடங்கள், பாத்திரங்கள், கருப்பொருள் என்றவாறு இருக்க வார இறுதி நாட்களில் தத்தம் சொந்த நடவடிக்கைகளை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

திரைப்படத்தின் தனிச்சிறப்பு குறிப்பாக Laura, Paterson தம்பதியின் உறவுமுறையானது, ஆக்கப்பூர்வமான இரு ஆன்மாக்களின் கூட்டிணைப்பாக (partnership of creative souls) இருக்கிறது. மனிதனது அன்றாட வாழ்க்கையில் கலைககள் எந்தளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் ஆக்கபூர்வமற்ற ஆன்மாக்கள் எந்தளவு அசிரத்தையாகவும் அழுத்தமாகவும் நடந்துகொள்கின்றன என்பதையும் திரைப்படத்தில் காணலாம்.இருவரும் ஏதோ ஒருவகையில் முரண்பாடானவர்கள். அதே நேரம் அவர்களுக்குள்ளிருக்கும் மறைமுகமான ஈகோவைத்தாண்டி அன்பால் ஒன்றிணைந்தவர்கள்.ஒருவர் மற்றொருவரின் ஆசைக்கு கனவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, ஒருவரையொருவர் மெச்சக்கூடிய மனப்பான்மை உடையவர்கள்.

Paterson தன் கனவுக்காக அன்றாட வாழ்வில் நீண்டகாலம் பொறுமையாக பல்வேறு விடயங்களையும், அவரை சுற்றியுள்ள மக்களையும் எவ்வித விமர்சனங்களின்றி அமைதியாகவும் நுணுக்கமாகவும் உள்வாங்கிக் கொள்வதில் ஆர்வமிக்கவராக இருப்பார்.அதே நேரம் அவரது கலையின் வெளிப்படுத்தல்கள் குறைவாக இருப்பதுடன் அவரது திறமை பற்றிய அவநம்பிக்கை குறிப்பொன்று மறைமுகமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.Paterson எளிமையாக தன்னைத்தானே ஒதுக்கிக்கொண்டிருந்தாலும் அவரது கவிதைகளை Laura வுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.அளவில்லாத அன்பு ஆதரவு அவள் அளித்த போதிலும் அவளது ஆடம்பர பகட்டை மறைமுகமாக வெறுக்கிறார்.

Laura கலை சார்ந்த பழக்க வழக்கங்கள், செயற்பாடு மற்றும் இலட்சியங்களைத் திறந்த மனதுடன் தைரியமாக வெளிப்படுத்தக் கூடியவளாக இருப்பதுடன் கறுப்புவெள்ளை நிற ஒழுங்கமைப்பில் பிரத்தியேகமான ஆர்வம் உள்ளவளாகத் தோன்றுகிறாள்.அவளது ஆடை வடிவமைப்பு, வீட்டு அலங்காரம், தான் வளர்க்கும் நாய்,தான் வாங்கிய கிட்டார், மற்றும் அவள் விற்பனைக்காகத் தயாரிக்கும் கேக் வரையில் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிற ஒழுங்குகள் திளைத்திருக்கும்.ஏன் அவர்கள் பார்க்கச்செல்லும் பழைய திரைப்படம் கூடக் கறுப்பு வெள்ளையில் இருந்தது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று மிகவும் மகிழ்ச்சியுடன் Paterson இடம் கூறுமளவுக்கு அந்த கறுப்பு வெள்ளை நிற ஒழுங்கு அவளுக்குள் ஆதிக்கம் செலுத்தியிருக்கும்.இந்த நிற ஒழுங்கு கூட முரண்களோடு நிறைந்ததே வாழ்க்கை என்பதைப் புலப்படுத்துவது போலவும், Laura, Paterson வேறுபட்ட கலையார்வமிக்கவர்களாய் இருந்தாலும் காதலால் பிணைந்திருப்பதனை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

உண்மையில் இந்த Laura என்னும் கதாப்பாத்திரம் தன்னையே ஒவ்வொரு கதாப்பாத்திரமாக உருவகப்படுத்திக்கொள்பவர்.

அதற்கேற்றாற் போல் பொருத்தமான நடிகை Golshifteh Farahaniயை இயக்குநர் தெரிவு செய்திருப்பது திரைப்படத்தில் இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியில் Laura தமக்குக் கனவில் இரட்டைக்குழந்தைகள் பிறந்ததாக கணவனிடம் கூறி மகிழ்ச்சியடைவாள்.

அந்தக் காட்சியிலிருந்து அங்கங்கே Paterson இரட்டைச்சிறுவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த இரட்டையர்கள் வரை ஒவ்வொரு பருவத்தினரையும் மேலோட்டமாக அடையாளப்படுத்தி இருப்பார்.கவிதைகளில் மொழிப்புலமைப் புனைவுக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது போல இவை பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இத் திரைப்படத்தை ஆரம்பத்தில் பார்த்த போது ஒருவித சோர்வு நிலை தோன்றலாம். உதாரணமாக அன்றாட ஏழு நாட்களின் தொடர் செயற்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.அவற்றை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது ஒருவித எரிச்சலும் சலிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்.ஆனால் இது உண்மையில் கவிதையின் ஒரு வடிவமே. ”ஒரு சொல்லையோ வசனத்தையோ மீண்டும் மீண்டும் கவிதையில் பயன்படுத்துதல்” (Repetition in poetry )இவ்வாறு மீண்டும் மீண்டும் சொற்களை கவிதையில் பயன்படுத்துவது சக்திமிக்க இன்னும் பயனுள்ள சொல்லாட்சி சாதனத்தை உருவாக்கி விடுகின்றது.

பல கவிஞர்கள் மொழியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனைப் புரிந்துகொண்டு மனிதனது நிலைக்கேற்ப அவனை எதிர்கொள்ளும் அளவுக்கு அர்த்தமுள்ள ஆயுதமாக மொழியைப் பயன்படுத்துகின்றனர். கவிதை மனிதனுள் ஆழமாகச் செல்வதற்கு இவை துணைபுரிகின்றது.இன்னும் அவற்றை எந்தவகையில் படிக்கும் போதும் ஒரு ஒழுங்கான சந்தத்திற்கு இயங்கக்கூடியவாறு ஒலிகள், எழுத்துக்கள், வார்த்தைகள், கோடுகள் என்பவற்றை அதிகரித்துக்கொண்டு கவிதைக்கான சுவாரஷ்யமான வடிவத்தை ஒழுங்கமைப்பர். அது போன்றதொரு ஒழுங்கமைப்பே இங்கும் காணப்படுகிறது.மீண்டும் மீண்டும் ஒரே சொல்லைப் பயன்படுத்தலில், எவ்வாறு மனிதனுள் ஆழமாக மொழியும் சொல்லாடல்களும் நுழைந்து ஆதிக்கம் செலுத்துமோ அதை விடப் பன்மடங்கு மீண்டும் மீண்டும் அதே இடங்கள், நபர்கள், காட்சிகளைப் பயன்படுத்தும்போது பார்வையாளரின் மனக்கண்முன் காட்சிமொழிப்பதிவு நுழைந்து ஆதிக்கம் செலுத்தும்.

அத்தகையதொரு செயற்பாட்டைத்தான் இயக்குநர் இங்கே நிகழ்த்தியுள்ளார். அந்த நகரத்தில் அனைவரும் இவர்களைப்போல எளிதான முறையில் தங்கள் கலையைப் படைப்பாற்றலைக் கொண்டிருக்கவில்லை. இன்னும் இயக்குநர் கலைக்குள்ளான சிக்கல்கள் நிறைந்த இரு கதாப்பாத்திரங்களை காட்சிப்படுத்துவார்.

நடிப்பில் கண்மூடித்தனமான ஆர்வமிக்க ஒருவன் தன் முன்னாள் காதலியை பின்தொடர்ந்து தொந்தரவு செய்யும் காட்சி ஒன்று Bar இல் நிகழும். அப்போது Paterson beer குடித்துக்கொண்டிருக்கையில் அந்தப்பெண் தன் முன்னாள் காதலன் பற்றி ,’அவன் தனது காதல் உணர்வுகளை நாடகப்பாங்கிலான ஒருவித பொறாமையை வெளிப்படுத்துகின்ற கண்மூடித்தனமான நடிப்பை மட்டுமே தன்னிடம் வெளிப்படுத்த முயற்சிப்பதாக’கூறுவாள்.இங்கே இயக்குநர் “வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையில் வேறுபாடு காட்டாத தன்மை ஆபத்தானது” என்பதை மறைமுகமாக அக்கதாப்பாத்திரங்கள் மூலம் நிரூபிக்க முயற்சிப்பார்.

நம் சமூகத்தினரிடையே புத்தாக்க கலை தொடர்பான புரிதல் மிகவும் அசட்டுத்தனமான நம்பிக்கையுடன் வேரூன்றிக் காணப்படுகின்றது. ஆடம்பர வாழ்க்கை,வசதி வாய்ப்பிருப்பவர்களால்தான் ஆக்கப்பூர்வமான கலையை சரியாக உருவாக்க முடியும் என்பதுதான் அது.

இன்னும் அன்றாட வாழ்க்கையை எளிமையான முறையில் நகர்த்திச் செல்பவர்களுக்கு கலையை உருவாக்குவதற்கான சூழலும் வசதிவாய்ப்புக்களுமே பெருங்காரணியாக தோன்றுகின்றன.அவை இல்லாத பட்சத்தில் தனக்குள் எந்தக்கலையுமே கைகூடாது என்று எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் உண்மையில் வரலாற்றில் கலைகளைத் தோற்றுவித்த கலைஞர்களின் வாழ்வியலைப் பார்க்கும்போது வறுமையிலும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் பூரிப்படைந்து உயிர் வாழ்ந்தவர்கள்தான் அதிகம்.

அந்தவகையில் paterson தனது நாயுடன் வெளியில் செல்லும்போது இரவு நேரம் ஆடைச்சலவை செய்யும் ஒருவன் தனியாக தன் சொந்தக்குரலில் ஒலி எழுப்பிப் பாடி ஒத்திகை பார்க்க ஆரம்பிப்பான். அவன் பாடி முடிந்ததும் அவனைப் பார்த்து மகிழ்ச்சியோடு வாழ்த்திவிடுவார். இக்காட்சியின் மூலம் யாராக இருந்தாலும் சரி, உலகிலுள்ள அனைத்து மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு புத்தாக்க சிந்தனையும்,படைப்பாற்றலும் உண்டு என்பதை Patrson ஏற்றுக்கொண்டதனை இயக்குநர் வெளிப்படுத்தி இருப்பார்.

இவ்வாறாகத் தினசரி வேலைகள் மற்றும் பொழுதுபோக்கிற்கு இடையே ஒருவித வித்தியாசத்தை அல்லது புதுமையை தோற்றுவிக்கும் ஜனநாயக நோக்கமே “கலை” அன்றி வேறில்லை என்பதைக் கவித்துவமாக காட்சிப்படுத்தி இருப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

Movie:Paterson(2016)
Director:Jim Jarmush

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *