Black Girl (1966)

மேற்காபிரிக்காவின் அதிகாரப்பூர்வமான குடியரசு நாடான senegalsஇல் பின்தங்கிய சூழலில் வசிக்கும் Diouanaஎன்னும் கறுப்பின இளம்பெண்ணின் புலம்பெயர்வின் கதை Black Girl(1966).[Original title “La Noir De”]

செனகல்நாட்டு இயக்குனர்  (Senegalese Director )Ousmane Sembene இன் முதல் முழு நீளத்திரைப்படமான Black Girl சர்வதேச அரங்கில் ஆபிரிக்க சமூகத்திற்கான ஒரு தனித்துவமான அடையாளத்தை அறுபதுகளிலேயே விட்டுச்சென்றது. இயக்குனர் Sembene திரைப்பட இயக்குனராக முன்னமே ஒரு நாவலாசிரியராக இருந்தவர்.நாவல் சிறந்த ஊடகமாக இருந்தும் கூட  பெரும்பாலும் கல்வியறிவற்ற தன் ஆபிரிக்க சமூகப்பார்வையாளரை சென்றடைவதற்கு சிறந்த ஊடகம் சினிமாதான் என்றறிந்த தருணம்  நாவலாசிரையரிலிருந்து தன்பார்வையை திரைப்படத்துறையின் பக்கம் திருப்பிக்கொண்டார்.1920 க்குப்பிறகு வட ஆபிரிக்காவில் பல திரைப்படங்கள் வந்த போதிலும் அவை பொதுவாக அரபு சினிமாவுடன் தொடர்புடையனவாகவே இருந்தன. இத்திரைப்படமானது துணை  saharan-africa விலிருந்து வெளிவந்த  முதல் நாடாக இருந்ததோடு இயக்குனரது சொந்த நாடான senegalsஇலேயே உருவாக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் திரைப்பட உருவாக்கத்திற்கான வளங்கள்,கட்டமைப்புகள்,தொழிநுட்ப வசதிகள்,நிதி ஆதாரங்களோ எதுவுமே இல்லாதபோதும் கூட இயக்குனர் sembene உண்மையில் ஆபிரிக்க சினிமாவைப்பற்றிகொண்டதன் விளைவாக Black girl போன்றதொரு பிரதான திரைப்படம் ஆபிரிக்க சினிமாக்களுக்கு அடித்தளமாக  என்றுமே நிலைத்திருக்குமாறு உருவாக்கி விட்டிருந்தார்.

Black Girl திரைப்படம் அவரது சொந்த எழுத்துக்களின் தழுவல்.1962 ஆம் ஆண்டில் அதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.அந்நாவலை எழுதுவதற்கான அசலான தூண்டுதலானது ,பிரஞ்சு செல்வந்த வீட்டில் வேலைபார்த்த ஆபிரிக்க வீட்டுப்பணிப்பெண் அவர்களது குளியல் தொட்டியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி பிரஞ்சுப்பத்திரிகையில்வந்திருந்த கட்டுரையில் இருந்து உருவானது.கிட்டத்தட்ட எந்தத்தகவலும் இல்லாத அந்த சிறு கட்டுரையை வாசித்த போது அந்தப்பெண் யார்?,அவள் எங்கிருந்து வந்தாள்? அவள் பிரான்ஸிற்கு எப்படி வேலைக்கு வந்தாள்? அவள் தன்னைத்தானே அழிவுக்குட்படுத்தும் செயலுக்கு அவளை இழுத்துச்சென்றது எது?என்பது பற்றி sembene தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார்.இறுதியில் இலக்கிய ரீதியாக அவருக்கு கிடைத்த அவரது பதிலானது,அடையாளம் மற்றும் காலனித்துவம் இவை இரண்டிற்கும் இடையிலான மோதல் பற்றிய கடினமான கேள்விகளை புனைவு செய்வதன் மூலம் கிடைத்தது.அதுவே Black Girl திரைப்படம்.

Senegal நாட்டின் பெருந்தலைநகரான Dakar இல் வசித்து வந்த செல்வந்த பிரான்சிய குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் குழந்தையை பராமரிக்க தெரிவு செய்யப்பட்டு அங்கு மகிழ்ச்சியாக வேலைபார்த்துக்கொண்டிருந்தவள்,France நாட்டின் தென்கிழக்குப்பகுதியில் உள்ள Antibes என்னும் பிரதேசத்திற்கு புலம்பெயர முடிவு செய்து அதே பிரான்சிய குடும்பத்துடன் செல்வதற்கு அதீத ஆர்வமிக்கவளாக காணப்படுகிறாள்.காரணம் பிரான்சில் ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வது தனது வாழ்க்கையை சிறப்பாக நகர்த்திச்செல்லும் என்பதோடு ஐரோப்பிய பன்முகக்கலாச்சாரவாதத்தை விரும்புபவளாகவும் பரந்த சுதந்திர நோக்கமுள்ள வாழ்க்கை முறையை (Cosmopolitan LifeStyle)எதிர்நோக்க தயாராகவும்  இருக்கிறாள். senegal இல் காலனித்துவத்தில் வந்த பிரான்சியர்களுக்காக சொந்த நாட்டில் வேலை செய்யும் போது பெரும்பாலும் அடக்குமுறை செய்யப்படாதவர்கள்தவர்கள்,புலம்பெயர்ந்து அவர்களது சொந்த நாடான பிரான்சிற்குச்சென்றதும் வேலையாட்கள் மீது அதீதமான அடக்குமுறை செலுத்தப்படுவதற்கான அதிகாரமானது, அவர்களுக்கான பூர்வீகமான இடத்தில் மற்றும் மொழியில் இருந்து உருவாக்கப்பட்டு விடுகின்றதனை இங்கு அவதானிக்கலாம்.

M’Bissine T. Diop (Diouana)


Diouana திரைப்படத்தின் பிரதான கதாப்பாத்திரமாக இருந்தும் அதிகம் பேசுவதில்லை.இருப்பினும்,அவளது குரல் முழுத்திரைப்படத்தையும் ஆதிக்கம் செலுத்தும்.தனக்குத்தானே பேசிக்கொள்ள அல்லது மனக்குறையை கொட்டிவிட அவளுக்கென சிறிய அறை உண்டு. இத்திரைப்படத்தில் பயன்படுத்திய வலுவான கதை அவளது எண்ணங்கள் சுதந்திரத்திர வேட்கைக்குத்தயார் நிலையில் உத்வேகத்துடன் உள்ளது என்பதை நிரூபிப்பதுடன்  தன் முதலாளிகள் தன்னை ஏமாற்றுவதை உணர்வதையும் காணலாம். அவள் அடக்குமுறை செய்யப்படல்,விலகி வந்த சூழ் நிலை  பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்தல், மற்றும் பிரான்சில் தனக்கான இருப்பு என்ன? தனது நிலை என்ன?என்பது பற்றி தன்னைத்தானே கேள்வி கேட்கத்தொடங்குகிறாள்.

இருந்தும் இங்கே அவளுக்கான பெரும் சிக்கல் மொழி அறிவின்மை மற்றும் தனக்கு எழுத வாசிக்கத்தெரியாது என்ற பெருங்குறைபாடுகளுமே.அவளது தாயிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருப்பதாக பிரித்து அதனை தன் முதலாளிகள் படித்துக்காட்டி பதில் எழுத முனையும் போது அதனை கிழித்துவிட்டு அழுது கொண்டே அறையினுள்ளே செல்வாள்.அப்போது அவளது மனக்குமுறலாக “தனக்கு எழுத வாசிக்க தெரியாது,மொழி தெரியாது,தனக்கான உறவுகள் இங்கே யாரும் இல்லை என்பவைகளே தன்னை அடிமையாக நிலை நாட்டி உள்ளது” என்ற முடிவுக்கு வருவாள்.மொழி தெரியாத இடத்தில் யாருமே அனாதைதான்.

That’s not true.

And it’s not my letter.

My mother didn’t write.

And I didn’t ask him to write a letter for me.

And my mistress is no lady.

It’s because I can’t write.

If I could write I’d tell all about my mistress “kindness”.

I’m a prisoner here.

I’m their prison.

I don’t know anyone here.

No one in my family is here.

That’s why I’m their slave.

எப்பொழுதும் அவள் விருப்பு வெறுப்பற்ற உணர்ச்சி வெளிப்பாட்டை அல்லது முகபாவத்தை குறையாமல் பேணி வந்தாள்.ஏறக்குறைய எதுவும் கூறுவதில்லை.கூறவும் மொழி தெரியாது.அவள் எவ்வித தயக்கமுமின்றி புகார்களுமின்றி தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்கிறாள்.

இங்கு ஒரு நபரின் உடலுக்கும் (குறிப்பாக பெண்ணுடலுக்கு) மற்றும் அந்த உடல்மொழிக்கும் உள்ள பொருத்தப்பாடு பற்றி இத்திரைப்படத்தில் கவனம் செலுத்தப்படுவதனை அவதானிக்கலாம்.

ஒரு காட்சியில்  Diouana அவளது சொந்த நாட்டிலேயே நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி தொடர்களில் வீடுவீடாக வேலை தேடி அலைந்து அனைவரும் புறக்கணித்தனர்.பின்னர் சாலையோரம் இளம்பெண்கள் கும்பலாக தெருவில் அமர்ந்து  ‘யாரவது செல்வந்தர்கள் தங்களை வந்து அழைத்துக்கொண்டு போகமாட்டார்களா?’ என்றுவீட்டுவேலைக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். அப்போது அந்த பிரஞ்சு முதலாளிபெண் அவர்களுக்கு முன்னால் நடந்து அவர்களில் யாரைத்தெரிவு செய்வதென்று நோட்டமிடுவார். அப்போது திடீரென அமர்ந்திருந்த அத்தனை பெண்களும் “என்னை எடுத்துக்கொள்ளுங்கள்”என்று கூவியவாறு அந்த முதலாளிப்பெண்ணை சுற்றி கையை நீட்டி நீட்டி நச்சரிக்க ஆரம்பித்ததும் Diouana மாத்திரம் அமைதியாக ஓரத்தில் அமர்ந்திருப்பாள்.அவளது அமைதியான இரு ப்பைப்பார்த்து பணிந்து போகக்கூடிய குணம் என்றெண்ணி பிடித்துப்போய்த்தான்    (Submissive)   அவளையே தெரிவு செய்வாள்.


அடுத்து அவளுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கான எந்தவித சாத்தியப்பாடுகள் இல்லாதபோதிலும்  தன்னிடமுள்ள ஆடை ஆபரணங்களை அணிந்து வெளியில் செல்வது போல தன்னை அலங்கரித்துக்  கொண்டே வீட்டு வேலைகலைச் செய்ய ஆரம்பிப்பாள்.அதைப்பார்த்து அவளது பெண் முதலாளி பலதடவைகள் வெறுப்பாக கூச்சலிட்டும் அதை அதை அணிந்து கொண்டே வேலைகளை செய்வாள்.இதிலிருந்து தான் வார்த்தைகளால்  வெளிப்படுத்த முடியாத தன் உணர்வுகளை செயற்பாடுகளில் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறாள்.அதாவது ‘தன்னை வெளியில் அழைத்துச்செல்ல வேண்டும்’ என்பதையே  தனது ஆடை அலங்கரிப்பின் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.

இன்னுமொரு காட்சியில் வீட்டிற்கு வந்த விருந்தினர்களில் ஒரவர் உணவருந்திக்கொண்டிருக்குபோது திடீரென எழுந்து “நான் இதுவரை கறுப்பின பெண்களை முத்தமிட்டதே இல்லை  உன்னை முத்தமிட்டுக்கொள்கிறேன்” என்று கூறி அவளது அனுமதி கேட்காமலே அவளை முத்தமிடுவார்.அந்த சந்தர்ப்பத்தில் கூட அவளால் அதற்கு எப்படி முகம்கொடுப்பது என்று தெரியாமல் அமைதியாக முத்தத்தை வாங்கிக்கொண்டு  பாசாங்குகளின்றி சமையலறை நோக்கி நகர்வாள்.இக்காட்சியில் அப்பட்டமாகவே ஒடுக்கப்பட்ட மக்களின் மீது திணிக்கப்படும் இன வெறி வெளிப்படுத்தப்படும்.

அவளது குடும்ப உறுப்பினர் மற்றும் மற்றும் தான் அறிந்த சொந்த ஊரில் இருக்கும்போது அவளது முக வெளிப்பாடு மற்றும் உடல் மொழி சுதந்திரமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தவள் பிரான்ஸ் சென்றதும் அவளது முதுகெலும்பு உடைந்து வீழ்வதைக்காணகூடிதாகவிருக்கும்.

Diouana அவளது நாட்டிலிருந்து வந்து ஒரு அடையாளச்சின்னமாக நிற்கும்போது, அவள் வேலை பார்க்கும் செல்வந்த குடும்பம்,அவள் சமைக்க மற்றும் சுத்தம் செய்தல் போன்றவைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கின்றது.”அயல்நாடு” (Exotic) மற்றும் ”கறுப்பினப்பெண்” என்ற அவளுக்கான அடையாளங்களை வைத்தே senegal நாட்டின் பாரம்பரிய சமையல் வகைகளை சமைத்துப்பெற்றுக்கொள்ள,வீட்டுவேளைகளைச்செய்விக்க என்றவாறு அமைதியாக தங்கள் இன வெறியைக் கொண்டு பழிவாங்கல்களாக  நிகழ்த்தப்பட்டு விடுகின்றன.

இங்கு பிரதானமாக கவனிக்கப்படவேண்டிய விடயம் அவள் உடலியல் ரீதியாக தாக்கப்படவோ காயப்படுத்தப்படவோ இல்லை.ஆனால் ,ஒருவருவருக்கொவர் செலுத்திக்கொள்ளும்  தொடர்ச்சியான“அன்பற்ற”உறவுநிலையானது,வன்முறையின் ஒரு பிரதிபலிப்பாக வெளிப்படுத்தப்பட்டு பெரியதாகி அவளது அடையாள உணர்வுகளை நசுக்கி ஒரு அடிமைத்தனத்துக்குள்ளேயே அவளைச்சிறிதுசிறிதாக செலுத்தி விடுகின்றது.

அவள் வேலை பார்க்கும் குடும்பம் தனக்காக கொடுக்கும் இடம்தான் அவளது இருப்பைத் தீர்மானித்து அவளை அடிமையாக உணரச்செய்தது.இங்கு “உடலுக்கும் உடல்மொழிக்கும் உள்ள தொடர்பினை,ஒடுக்கப்பட்ட மக்களின் உடல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன;ஆனால் அவர்களின் மனிதத்துவம் எண்ணங்களிலோ வார்த்தைகளிலோ விடாப்பிடியாக தொடர்கின்றது” என்பதை இயக்குனர் அடையாளப்படுத்துகிறார்.மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் உடல்களை தாராளமாக கட்டுப்படுத்தலாம் என்னும் அதிகாரவர்க்க எண்ணம் இத்திரைப்படத்தில்  விமர்சிக்கப்படுகிறது.

கருப்பு வெள்ளை என்னும் நிற வேறுபாட்டை திரைப்படம் முழுவதும் குறியீடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.திரைப்படம் கூட கறுப்பு  வெள்ளைகளில் அமைந்திருக்கும். Diouana அணியும் ஆடை,அவள் வேலை செய்யும்  அந்த வீட்டின் நிறம்,அவளது அறை,அவள் தூங்கும் விரிப்பு முதற்கொண்டு அனைத்திலும் கருப்பு வெள்ளை நிற வேறுபாடு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.இன்னும் அவள்குடியிருக்கும் வீட்டிலிருந்து சாளரத்தை திறந்து பார்க்கும்போது பிரான்சின் முழு நகரமும் இரவின் கருமையால் சூழ்ந்திருக்கும்.

அவர்கள் சுதந்திரமாக வாழும் அந்த அபார்ட்மென்ட் Diouanaவிற்கு சிறைச்சாலையாகவும் வெற்றிடமாகவும் மூச்சுத்திணறலாகவுமே மாற அந்த இடத்தை விட்டு எப்படி வெளியாவது என்பது பற்றி கூட யோசிக்காமல்  தன் இறுதி முடிவுக்குள் வருகிறாள்.

Senegal சுதந்திர நாடாக இருந்த போதிலும் காலனித்துவத்தின் அதிகரிப்பினால் சொந்த நாட்டிலேயே கூலியாகவும், உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமலும் கல்வியறிவில் பின்தங்கிய அடிமையாகவும் இப்பிரதேச மக்களின் வாழ்வியல் காணப்படும்.சுதந்திர நாடு என்பதை விமர்சிக்கும் வண்ணம் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். சொந்த இடமான Dakar இல் குழந்தைப்பராமரிப்பு வேலை கிடைத்தவுடன்  தாயுடன் சந்தோஷமாக கொண்டாடும் Diouana ஒரு தடவை பிரான்ஸிற்கு செல்வது பற்றி  தன் காதலனுடன் பேசிச்சுற்றிக்கொண்டிருந்த போது  ‘சுதந்திரம் கிடைத்த தருணம்  மரியாதை செலுத்தக்கூடிய  நினைவுச்சின்னம்’ மீது ஏறித்திருந்து விளையாடிக்கொண்டிருப்பாள்.அப்போது காதலன் கீழிருந்து  “இது மிகவும் பாவமான செயல்,யாராவது பார்க்க முன்னர் இறங்கி விடு” என்று கூறுவான்.
Diouanaவின் காதலன்  காலனித்துவத்தின் நயவஞ்சகத்தன்மை பற்றி அறிந்து அரசியல் ரீதியாக ஈடுபாடு கொண்டவன்.ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு நிலையான பாதிக்கப்பட்ட மனநிலையை  உருவாக்குவதன் மூலம் எவ்வாறு தனி மனிதன் குறைத்து மதிப்பிடுதலுக்குட்படுத்தப்படுகிறான் என்பது பற்றி Diouana விற்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்துகொண்டுமிருந்தான்.

படம் முழுவதும் இவ்வாறன பிளாஷ்பேக் சிதறடிப்புகள் மூலம் தொடர்ந்தும் தம் இருப்பையும் உரிமையையும் இழந்து கொண்டிருப்பது  நினைவூட்டப்படுகிறது.மேலும் ஒரு நாடு சுதந்திரம் அடைந்தவுடன் காலனித்துவமும் அதன்  கட்டமைப்பு சார் மனநிலையும் உடனடியாக சிதைத்துவிட முடியாது என்பதையும்  அறிவுறுத்துகின்றது.

Dakar இல் நிகழும் இறுதிக்காட்சியானது ஒரு முகமூடியை சுற்றியே நிகழ்த்தப்படும்.அந்த முகமூடியானது அவர்களது புராதன ஆபிரிக்கப்  பண்பாட்டு அம்சங்களில் மதிப்பு மிக்க  ஒன்றாகவும் கருதப்படுகிறது.

அம் முகமூடியானது   Diouana தனது முதலாளிக்கு பரிசாகக் கொடுத்தது. முகமூடி கூட திரைப்படத்தின் உள் நின்று இயங்கும் பொருளாக செயற்படும்.அது ஒரு குறியீட்டளவில் மட்டுமல்லாது ஏதோ ஒரு தெய்வீகத்தன்மை கொண்டதாக காட்சிப்படுத்தப்படுகிறது.முதலாளியிடம் பரிசாக கொடுத்த அந்த முகமூடியை ஒரு தருணத்தில் சண்டையிட்டுப்பறித்து வைத்துக்கொள்வாள்.

தன்னுடைய உரிமையைப் பறிப்பது போன்ற உணர்வு அத்தருணத்தில் அவளுக்கு ஏற்படும். இன்னுமொன்று அவர்களது பண்பாட்டுச்சிறப்பு மிக்க அந்த முகமூடி பற்றிய புரிதல்கள் இல்லாமல் அதை தன் வீட்டு சுவரில் வெறுமனே மாட்டி வைத்திருப்பது பிற கலாச்சாரம் மற்றும்  பண்பாடு பற்றிய புரிதலற்ற மன நிலையையும் தெளிவு படுத்துகின்றது. 

அதே நேரம் இறுதியாக dakar இற்கு அதை திருப்பிகொடுக்க முனையும் போது அந்த 
முகமூடியின் முன்னைய உரிமையாளனான அந்த பகுதியைச்சேர்ந்த சிறுவன் முகமூடியை அணிந்து கொண்டு  அந்த முதலாளியை நோக்கி பார்த்தபடி பின்னால் செல்வான்.இறுதிக்காட்சியில் முகமூடி பார்வையாளர்களை நோக்கிப்பார்க்கும்.இவ்வாறாக இந்த முகமூடி ஆபிரிக்கப்பழங்குடினரின் பண்பாட்டுச்சின்னமாக இருந்து கொண்டு தனக்கான பாரம்பரிய அடையாளத்தைகொண்டே அனைவரையும் மிரட்டிவிடுகிறது.  இக்காட்சியிலிருந்து சினிமாவினூடாக மெளனமாகவும்  குரல் கொடுக்கக்கூடிய ஒரு நோக்கம்  உள்ளடக்கப்பட்டுள்ளதனைக் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.ஒரு கண்ணோட்டத்தில் வார்த்தைகள் மட்டும்தான் தான் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றால்,BlackGirl திரைப்படம் பிரச்சாரத்தால் சாதிக்க வேண்டியதை விட பலமடங்கு அதிகமாகவே பேசிவிடுகிறது.இது குறிப்பிட்ட சூழலைக் கோடிட்டுக் காட்டுவதோடு இறுதியில் சத்தமாகவோ ,தெளிவாகவோ பேசுவதற்கு வார்த்தைகள் கூட தேவையில்லை என்பதை நிரூபித்து விடுகின்றது.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *