“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”.
கீழைத்தேய
நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை
மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெற்றோர்
மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று
கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும்.
ஐரோப்பா
செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே.
இன்னும்
தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும்
பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை
அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி.
அடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை.
இத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நிகழும்.
ஒரு
மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement)
செய்வதும், குற்ற உணர்வை(guilty)
மேலோங்கச்செய்து
வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான
பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்?” என்னும் கேள்விகள்
மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும்
கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே!ஆனால் இங்கே நிகழ்வது என்ன ? அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும்
பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது.
சமூகத்திலுள்ள
ஒவ்வொருவரும் தங்களுக்கான அனுபவ பின்புலங்களையும் அறிவுமட்டத்தையும் கொண்டு பிற
மனிதனை மதிப்பீடு செய்து விமர்சித்து காழ்ப்புணர்வை கொட்டவே தம் வாழ்நாளை
அர்ப்பணிக்கின்றனர்.
இங்கு
விமர்சிக்கப்படும் தனிமனிதன் யார் யாருக்கோ பதில் கூறவும் தன் பக்க நியாயங்களை
நிரூபிக்கவும் கடமைப்பட்டுள்ளதாகவே இச்சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய
அடக்குமுறையின் உச்சத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்தையும் விட்டு குறித்த நபர்
தனித்து விடப்படுகிறார்.தன்னை மதிப்பீடு செய்யாத, தன் செயல்களுக்கு
குற்றவுணர்வை ஊட்டாத நபர்களை தன் சார்ந்த தனக்குரிய சமூகமாக கட்டமைத்துக்கொள்ள
வெளியேறுகிறார்.
இங்கு
குடும்பம் மற்றும் இன்ன பிற உறவுகள் அனைத்தும் தொலைந்து போய்விடுகின்றன.குடும்பத்திலிரிந்து
முற்றுமுழுதாக பிரியவேண்டும் என்ற அவாவோ குறிக்கோளோ இங்கு ஏதுமில்லை.
ஆனால்
பெண்களுக்கு வெறுமனே திருமணத்தையும் சந்ததிப்பெருக்கத்தையும் மாத்திரமே நோக்காக கொண்ட குடும்ப மற்றும் சமூக கட்டமைப்பில் இருந்து தப்பித்து வாழ தனித்து விடுதலை பெறுவதைத்தவிர வேறு வழியேதுமில்லை.
குறிப்பாக
ஒரு பெண் சுய பிரக்ஞையுடன் தன் விருப்பின் பேரில் செய்யும் கேள்விகள் ஏராளம்.
ஒரு
தனி மனிதனை எந்த வித கேள்விகளும் விமர்சனங்களும் இன்றி ஏற்றுக்கொள்ள இங்கு எத்தனை
பேர் தயாராக உள்ளனர்? தனிமனிதனது
சுயம் சார்ந்து எழும் கேள்விகள் தான் இங்கே மிகவும் அருவருப்பாக இருக்கின்றன.
குடும்ப
உறவு மற்றும் தன் சார்ந்த சமூகங்களின் விமர்சனங்களால், தன் பிள்ளைகளுக்கு
வீட்டுக்குள் நிகழ்த்தும் வன்முறைகள் தான் முஸ்லிம் சமூகத்தில் ஏராளம்.இதையெல்லாம் நம்ப முடியுமா
என்று வெளி சமூகத்தில் இருந்து கொக்கரிப்பவர்களுக்கு தெரியாது பெரும்பாலான
முஸ்லிம்பெண்களுக்கு பேசுவதற்கான குரல்கள்களே இங்கு இல்லை என்பது.
தற்காலத்தில்
சமூக ஊடக வலைதளங்களின் பரவலில் மக்கள் அதிகமாகவே சிந்தனை விருத்தியடைந்து
கற்றுக்கொள்கின்றனர். பிற நாகரீக கலாச்சாரத்திற்குள் எளிதில்
உள்வாங்கப்படுகின்றனர்.
காலங்காலமாக
முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கெளரவ கொலைகளும்,குடும்பத்திலிருந்து
தனித்து பிற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழும் பெண்களின் நிலையும்
மோசமானது.
இறுதியில் கலாச்சார சமூக விழுமியங்களை மீற முற்படுகையில் பெண் அந்த சமூகத்தை சார்ந்தவள அல்லாதவராகவும் அனைத்தையும் விட்டு நீக்கப்பட்டவளாகவும் ஆகிடுவிடுகிறாள். இதை யாராலும் தடுக்க இயலாது.
இங்கு பெண்ணின் உணர்வுக்கும் யோனிக்கும் பூட்டுப்போடவே சமூக கலாச்சாரங்கழும் மதங்களும் பதறியடித்துக்கொண்டு திரிகின்றன.அத்தகைய ஐரோப்பிய தாரளவாதம் கொண்ட சமூகத்தில் வாழ்ந்தாலும் சரி, மத கலாச்சாரங்களால் நிரம்பிய சமூகங்களில் வாழ்ந்தாலும் சரி,இயற்கையான மனித காம, காதல் உணர்வுகளை இங்கு யாரும் பூட்டுப்போட்டு தடுத்து விடமுடியாது.
What will people say (2017) Directed By Iram Haq