“மாடத்தி (2019)” தமிழ் சினிமாச்சூழலுடன் ஓர் ஒப்பீட்டுப்பார்வை

கவிஞரும் சுயாதீனத் திரைப்பட இயக்குனருமான  லீனா மணிமேகலையின் மாடத்தி(Maadathy)திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்புகிட்டியது.இயக்குனரின் தெளிவான பார்வையும் முதிர்ச்சி நிலையும் தமிழ் சமூகத்திற்கு புதுமையானதும் அத்தியாவசியமானதும் கூட.

உண்மையில் சாதியம்,தீண்டாமை பற்றி பேச முனைபவர்கள் பெண்ணிலிருந்து ஆரம்பிப்பதே அறம் என்பது என் நிலைப்பாடு.ஒரு பெண் எந்த வர்க்கத்தில் ஜாதியில் பிறந்தாலும் அவள்  இடம் சூத்திரருக்கும் கீழ்தான்.ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்றொரு தனியரை பாலின அடிப்படையில் ஒடுக்கும் எல்லைக்கு போவது குறித்து பிரக்ஞைப்பூர்வமாக இருக்க, ஒடுக்குதலின் கீழ்மையயையும் அதன் அரசியலையும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டிய தேவை இந்தியச் சூழலில் நிலவுகிறது.இங்கு சாதிய ஒடுக்குமுறையிலிருந்து மேலே வர எத்தனிப்பவர்கள்,தாங்கள் “ஆண்” என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து,நிறுவி அதன்மேல் ஏறி நின்று அரசியல் பேசி,தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனைக்கிறார்களே ,ஒழிய யாரும் பாலின உடைப்பை நிகழ்த்தி,ஆணாதிக்கத்தை களைந்து விட்டு  அரசியல் பேச முன்வருவதில்லை.இங்குதான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கென குரல்கொடுக்கும் இடத்தில் பெண்ணிற்கான இடம் புறந்தள்ளி விடப்பட்டு,அது தனியாக இங்குள்ள ஆண்மையச் சிந்தனைவாதம் கொண்டவர்கள் சொல்வது போல் பெண்ணியம் என்ற ஆடம்பர வார்த்தைக்குள் சிக்குண்டு “பெண்ணியம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல், பெண்ணியம் வன்புணர்விற்கு எதிரான குரல்,” என்னும் கருத்தியல் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.இவை சரியாகப் புரிந்து கொள்ளப்படாத பட்சத்தில் மாறி மாறி அதிகாரத்தை உள்வாங்கி வன்முறைகளாகவே சமூகத்தில் பரிணமித்துவிட வழி கோலப்படுகின்றன.இன்னும் ஜாதி, மதம்,இனம்,மொழி,ஆடைக் கலாச்சாரம் போன்ற இன்ன பிறபெயர்களைக் கொண்டு  பெண்களை வன்புணர்ந்து விட்டு (patriarchy) “ஆணாதிக்கம்” என்னும் பதம் ஆண்மையச்சமூகாத்தால் லாவகமாக பதுக்கிப் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.

மாடத்தி திரைப்படத்தில் பேசப்படும் அரசியல் ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான குரலாக இருக்கும் அதே வேளை வேறு பட்ட படிநிலைகளில் புரையோடிக்கிடக்கும் ஆணாதிக்க மனோநிலை காட்டமாக விமர்சிக்கப்படுகிறது.இன்னும் ஜாதியப் படி நிலைகளில் மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள புதிரை வண்ணார் சமூகத்தின் அவலத்தை வெளிக்கொணர்கின்றது.

தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியிலுள்ள பெண்குறித்து பேச முனைந்தால், “சாதியப்பிரச்சனைகள் அத்தனையையும் எப்படி பாலியல் வன்முறைக்குள் இந்தப் பெண்கள் சுருக்கி விடுகின்றார்கள்? “என்று வெகுண்டெழுகின்றனர் எதிர்ப்பரசியலை மட்டுமே நாடி நிற்கும் ஆண் போராளிகள்.வன்புணர்விற்கு எதிரான குரல் மனித ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல் இல்லையா? இவ்வாறான கருத்தியல்கள் பொதுவெளியில் மிக பிற்போக்குத் தனமான உளவியலைக் கட்டமைப்பதுடன் பாலியல் வன்முறைகளைப் பெண்களின் பிரச்சனைகளாக புறவயப்படுத்தி சாதாரணமயப்படுத்துவதாகத் தோன்றுகின்றது.

ஒரு நபர் கையாலாகாத நிலையில் பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டு, வன்புணரப்பட்டு,கொல்லப்பட்டு, அந்நபரின் சுவடே அழிந்துவிடுவதைவிட ஏதேனும் உச்சகட்ட  வன்மத்தை யாராலும் சகித்துக்கொண்டு,அல்லது அதைப் புறந்தள்ளிவிட்டு எதை முன்நிலைப்படுத்திப் பேச முற்படுகிறார்கள்  எனத் தெரியவில்லை.இப்படியான கேள்விகளே வன்புணர்வுக் கலாச்சாராத்திற்கு வித்திடுபவை தான். 

வர்க்கவேறுபாடு, ஜாதிய ஒடுக்குமுறை,மத,இன,மொழி வன்முறைகள் அனைத்தும் மிகச்சாதாரணமாகத் தன் வெறுப்பையும் வன்மத்தையும் இலகுவாக கட்டவிழ்க்கும் இடம்தானே பெண்களும், குழந்தைகளும்? போர்க்காலங்களில் ஒரு ஆட்சியை வீழ்த்தி இன்னொரு ஆட்சியைக் கைப்பற்ற,உளவியல்ரீதியாக,சூழலியல் ரீதியாக அச்சுறுத்தலை நிகழ்த்தி ஒரு குழு பிற குழுக்கள் மீது வெறுப்பைக் கக்க கைக்கொள்ளும் யுக்தியில் பிரதானமானது வன்புணர்வு.இதுவரை நிகழ்த்தப்பட்ட எந்தப் போரிலாவது பெண்களின் இடம் குறித்து அவர்களின் துன்பியல் குறித்து முன்நிலைப்படுத்திப் பேசப்பட்டிருக்கிறதா என்றால்,அது பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளாக பார்க்கப்படுகிற அதே வேளை அதில் தலையீடு செய்து ஆவணப்படுத்துவதும் பெரும்பாலும் பெண்களாகவே இருந்துவிடுவதுடன் அது குறித்த உரையாடலும் மிக சொற்பமாகவே நிகழ்த்தப்படுகின்றன.

அதேநேரம் ஒரு நாட்டை கைப்பற்ற ஒரு ஆட்சியை வீழ்த்த நிகழ்த்தப்படும் மன்னனின் அல்லது போராளிகளின் வீரதீர செயல்களையும் சாகசங்களையும் பார்த்து பூரித்துக் கொண்டாடிக்கொண்டிருப்போம்.“War Rape” குறித்த ஆவணப்படங்களைப் பார்க்கும்போது இவற்றின் படிநிலைகள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் .“எந்த அரசும் வன்புணர்வு செய்யச் சொல்லித் தூண்டுவதுமில்லை, அதே வேளை  பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டால் அவற்றை ஒரு பொருட்டாகக் கண்டுகொள்வதுமில்லை” War Rape குறித்த ஒரு ஆவணப்படத்தில் வன்புணரப்பட்டு மீண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கூற்று இது.இப்படியொரு நிலையில் தான்  தற்கால இந்திய சமூகத்தில் வன்புணர்வின் நிலை இருக்கின்றது.

ஜாதிய ஒடுக்குமுறையின் ஒரு பாரிய ஆயுதம் வன்புணர்வு.“அப்படியாயின் நாம் தற்போது யுத்தக்களத்தில் இருக்கிறோம் என்பதை நினைவூட்டிக்கொள்கிறேன்.

மாடத்தி திரைப்படத்தை நோக்கினால்,கட்டுக்கடங்காமல் சுதந்திரமாக பறந்து திரியும் யோசனா கதாப்பாத்திரத்தின் பறத்தல் குணம்தான் ஒட்டு மொத்தப்பெண்களின் வேட்கையாக இருக்கும்.ஒரு பெண் சுதந்திரமாக  நடமாடுவதே நம் சமூகத்தை நிலை குலையவைத்து கொலைகாரர்களாகவும், வன்புணர்வாளர்களாகவும் மாற்றிவிட போதுமானதாக இருந்து விடுகிறது.

ஆணின் உடல் கட்டு,நிர்வாணத்தின் ஈர்ப்பில் ஒரு பெண் காதலில் விழும் யதார்த்தகாட்சி தமிழ் சினிமா சூழலுக்கே மிகப் புதுமையானது.இங்கே ஓர் பெண்ணின் தெரிவுச்சுதந்திரம் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலும் தமிழ் சினிமாக்களில் பெண்கள் பெரும்பாலும் பிற ஆண்களால் துரத்தித் துரத்திக் காதலிக்கப்பட வேண்டியவர்களாகவே காண்பிக்கப்படுகின்ற அதேவேளை தனக்கான உடலீர்ப்போ,காதலோ சமூகத்தில் பெண்களாகவே ஆண்களிடம் அணுகுவதோ நுகரப்படுவதோ மிகவும் அரிது.அவ்வாறு ஆணின் மீதான உடலீர்ப்பில் ஒரு பெண்  அவனை அணுக நேரிட்டால் அதை காதலாக அல்லாமல் கீழ்மையான (pervert) மன நிலையிலேயே ஒரு பெண்ணுக்கான பிம்பங்களையும் மதிப்பீடுகளையும் கட்டமைப்பர்.

எவ்வித குற்றவுணர்வுமின்றி பாலியலைக் கொண்டாட, ஆணுடலை ரசிக்க  பெண் தயாரக இருக்கிறாள் என்பதே ஆண்களுக்கு பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் தோற்றுவித்து விடுகின்றன.

திரைப்படத்தில் நிர்வாணமாய் அருவியில் நீந்தும் அந்த ஆணின் விறைக்காத குறியும் இயல்பான கருமை நிற உடல்கட்டும் தமிழ் சினிமாச்சூழலில் ஒரு பாய்ச்சல்.அவ்வளவு அழகியலுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இன்னும் எதேர்ச்சையாக அவ்வாணுடலை பார்க்க நேரும்  யோசனாவின் முதல் பதட்டமும் அதை இயல்பாக ரசிக்கும் விதமும் இயற்கையுடன் பின்னிப்பிணைந்தது.

தமிழ் சினிமாச்சூழலில் ஒரு பெண்ணை,பெண்ணுடலைப் பார்த்து ஆண் காதல் கொள்ளும் தருணங்களை நினைவு கூர்ந்து பாரத்தால்,pervert மன நிலையுடன் குளிக்கும் போது மறைந்திருந்து பார்ப்பது ,குளியலறையில் எட்டிப் பார்ப்பது, ஓட்டை ஒடுக்குகளைத் துளைத்துப் பார்த்து காமம் மேலோங்கி காதல் கொள்வதாகவும் , தனக்குத் தெரிந்த/நெருங்கிய ஆண் நண்பர்களிடம் அப்பெண்ணுடல் தோற்றம் குறித்து வர்ணிப்பு என்னும் பெயரில் பாலியல் புனைவை கூட்டாகப் பகிர்ந்து கொள்வதாகவும் காண்பிக்கப்படும்.இன்னும் தமிழ் சினிமாவில் எந்தப் பெண்ணும் ஆணின் உடல் கட்டைப் பார்த்து  காதல் வயப்படமாட்டாள்; மாறாக ஆண் நடிகர்கள் அப்பெண்ணிடம் தன் வீரத்தையும் திறமையையும் நிறுவ  நான்கைந்து ரவுடிகளைத் தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டியிருக்கும், அல்லது ஏழை எளியவருக்கு உதவ வேண்டியிருக்கும்.அத்தகைய ஒரு வீரமிக்க  ஆணிடம் தான் ஒரு பெண்ணுக்கு  பாதுகாப்பும் காதலும் உருவாகும் என்பது சங்ககாலம் தொடங்கி இன்றுவரை நீளும் மரபு.இதையே தொடர்  பேசு பொருளாக வைத்து தமிழ்ச்சூழலில்  காதலைக் கட்டமைப்பது  எத்தகைய போலித்தனங்கள்?.

காதலிக்கும் ஒரு பெண்ணுடலை pervert ஆக காட்சிப் படுத்துவது தமிழ் சினிமாவின் மிகப் பெரும் சிக்கலான போக்கு.அதுவே தொடர்ச்சியாக ஒட்டுமொத்தப் பெண்களையும் பார்க்கும் சமூகமாக தமிழ்ச் சூழலைக் கட்டமைத்து விடுகின்றது.கடந்த அறுபது எழுபது வருடகாலமாக இந்தியர்களது காதலும் காமமும் இந்திய சினிமாக்களிலிருந்து கற்றுக் கொண்டு உள்வாங்கப்பட்டவை  தான்.தமிழ் சினிமாவில் காதலிக்கப்படும் பெண்ணுடலை அந்தக் காதலனுக்கும் சரி, பார்வையாளருக்கும் சரி தொடர்ச்சியாக pervert மன நிலையைக் கட்டமைப்பதாக காட்சிகளை அமைப்பது தமிழ் வணிக சினிமா நுகர்வுக்கலாச்சாரத்தில் பெரும்பங்காகவுள்ளது.திரைப்படத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படி அணுகுகிறான் என்பது அவனது வாழ்வியல், சூழல் பின்புலங்களைப் பொறுத்து பிற்போக்குத்தனமாகவே இருக்கட்டும்,ஆனால் அந்தப் பெண்ணைக் காட்டும் இயக்குனரின் மன நிலையும்,பார்வையும் ஏன் காதலிப்பவனின் மன நிலையைப் போல  கீழ்த்தரமாக உள்ளது என்பதே கேள்வி.?

தமிழ் சினிமாக்களிலோ அல்லது பிறமொழித்திரைப்படங்களிலோ பெண்ணின் கவர்ச்சி உடலையும் ,நிர்வாணத்தையும் (கதைக் கருவுக்கு அனாவசியமான காட்சியாகவே இருந்தாலும்) பார்த்த மாத்திரத்திலேயே அந்த நடிகைக்கு தீவிர ரசிகர்களாக,வெறியர்களாக மாறும் நம் தமிழ்ச் சூழலில் “ஆணின் நிர்வாணத்தைப் பார்த்து உடலீர்ப்பில் ஒரு பெண் காதலில் விழுகிறாள்” என்பது சங்கடமாகத்தானிருக்கும்.ஏனெனில் “பெண்ணுக்கு ஆணுடலை ரசிக்கத்தெரியுமா என்ன?  ஆணுடலில் ரசிக்கும் கூறுகள் உள்ளதா ?அல்லது ஆணுக்கு ஆணுடலை ரசிக்க வேண்டிய தேவையே இல்லை” என்பதுதான் தமிழ் சமூகத்தின் ஆண்மைய எண்ணப்போக்கு.ரசிக்க கூடவேண்டாம் ஆணின்  இயலப்பையும் இருப்பையும் வெளிக்காட்டுவத்தில் தான் தமிழ் சினமா ஜாம்பவான்களுக்கு எவ்வளவு கஞ்சத்தனம்.?பெண்ணுடலை முழுக்க முழுக்க பண்டமாகவே காட்டிப் பழக்கப்பட்டு, அதற்கான ரசிகர்களையும் சம்பாதித்துக்கொண்டவர்களுக்கு ஒரு பெண்ணின் பார்வையில் ஆணுடலை எப்படி அணுகுவது என்பது புதிரானவிடயம் தான்.இங்குதான் இயக்குனர் லீனா பெண்பற்றிய ஆணின் புனைவுகளை உடைத்தெறிகிறார்.

மாடத்தி திரைப்படத்தில்  ஆண்களின் இருப்பு மற்றும் பாலியல் அணுகுமுறை மீதான விமர்சனம்  மிகப் பிரதானமானது.“Man is just a Man” என்ற நெடுங்காலப் பழங்கூற்றை நிறுவும் வகையில் எவ்வித சமரசமும் இன்றி நேர்த்தியாக பேசபட்டிருக்கிறது.உதாரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதியில் உள்ளவன் மேல் ஜாதி ஆணைப் பழிவாங்க அவனது மனைவியைக் கடத்தி வன்புணர வேண்டும் என்று கூறுவது,அதே நேரம் பார்வையால்கூட தீண்டத்தகாத அடி மட்டத்திலுள்ள புதிரை வண்ணார் சமூகப் பெண்ணை ஜாதியப் படிநிலையில் தாழ்த்தப்பட்ட ஆண்கள்  கூட்டமாக சேர்ந்து வன்புணர்வது.மேல் ஜாதியில் உள்ளவன் பார்க்கக்கூடாத பெண்ணை அவளது கணவன் இருக்கும்போதே வன்புணர்வது, இவ்வாறாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்ணுக்கான இருப்பையும் ஒட்டு மொத்த ஆண்சமூகத்தின் பெண்கள் மீதான பார்வையும் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

பார்க்கவோ தீண்டவோ தகுதியற்ற  பெண்கள்  வன்புணர மட்டும் தேவைப்படுகிறாள் என்றால் ஆண்களின் பாலியல்புனைவுக்கு பெண்கள் இங்கே வெறும் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட்டு பலியாக்கப்படுவதனை அவதானிக்கமுடியும்.

 தமிழ்த் திரைப்படங்களில் வன்புணர்வு பற்றிய பார்வைக்கும் அதைக் காட்சிப்படுத்தும் விததத்துக்கும் மறைமுகமாக வன்புணர்வை ஒரு பாலியல் அணுகுமுறையாக காட்டும் தோரணையுண்டு.எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்த  திரைப்படங்களில்  புடவையை இழுத்து உரிதலும்,உள்ளாடைகளைக் கிழித்து எறிதலுமாக வன்புணர்பவனின் பார்வைக்கோணத்தில் pervert உளவியலுடன் இயக்குனரின் ஆண்மையப் பார்வையிலிருந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இதன் பிரதிபலனாக பார்வையாளரிடம் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் மிக வன்மமானது.Rape revenge  திரைப்படங்கள் பற்றிய தேடலில் தமிழ் சினிமாக்களில் Rape ஐ எவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர் என்று தேட முற்பட்ட போது “Tamil hot rape scene” எனும் தலைப்பில் யூட்டியூப்களில் தமிழ்சினிமா வன்புணர்வுக் காட்சிகள் தேடப்பட்டும்,பதிவு செய்யப்பட்டும் வந்திருக்கின்றன.எத்தகைய ஒரு பின்தங்கிய, வக்கிரமான புரிதல் தளத்தில் தமிழ் சமூகம் இருக்கின்றது? வன்புணர்பவனுக்கே திருமணம் செய்து வைத்தல், வன்புணர்ந்தால் குழந்தை உருவாகிவிடுவதாக காட்சிப்படுத்தல்,இன்னும் வன்புணர்வு நகைச்சுவைகளை வைத்து அதனை சாதாராணமயப்படுத்தல் போன்றவை தமிழ் சினிமாவின் ஆணாதிக்க மனநிலை மற்றும் பிற்போக்குத் தனங்களின் உச்சங்கள்.உதாரணமாக தமிழ் சமூகம் பிரம்மாண்டமாகக் கொண்டாடித் தீர்த்த  “வரலாறு” திரைப்படத்தில் “நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ?”என்று கேட்டதற்காக கதாநாயகியை வன்புணர்ந்து விட்டுவருவார் கதாநாயகன் அஜித்.இதே மன நிலையில் தான் இன்றைய தமிழ்  சமூகம் இருக்கின்றது.ஆணாக வீர தீரச் செயல்களை நிறுவுவதில் வன்புணர்வது அடிப்படைப் பண்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மாடத்தி திரைப்படத்தில் சலவைத்துணியுடன் வரும் வேணி  கதாப்பாத்திரம் உயர் ஜாதி ஒருவரால் வன்புணரப்படும் காட்சி,கேமராக்கோணம் Victim pont of view விலிருந்து  புரிந்துகொள்ளக் கூடியதாக வேணி கதாப்பாத்திரத்திரத்தின் முகத்திற்கு கீழ்ப்பகுதியிலிருந்து மேல்நோக்கியிருக்கும்.இது வன்புணர்வைக் காட்சிப் படுத்துவதில்  குறிப்பிடத்தக்க ஒரு பார்வையாக இருந்தது.

எழுபது,எண்பதுகளில் உருவான அமெரிக்க Rape Revenge திரைப்படங்களில் Gange Rape குறித்து ஒரு பார்வை தொடர்ச்சியாக இருக்கும்.ஐந்து ஆறு ஆண்கள்  வன்புணர எத்தனிக்கிறார்கள் எனில் அதில் ஒரு ஆண் அச்செயலிலிருந்து பின் வாங்க முயற்சிப்பான்.அத்தகைய ஒருவனை பிற ஆண்கள், வன்புணர எங்களுடன் இணைய வில்லை என்றால் நீ எல்லாம் ஒரு ஆணா? என்கிற நிலைப்பாட்டில் அவனை மட்டம் தட்டி “குறி இருப்பவன் வன்புணரவேண்டும்; இல்லையெனில் நீ ஒரு ஆண் அல்ல, எங்களின் இனமல்ல, வீரமற்றவன்,பொட்டை” என்பதாகஆணாதிக்கச் சிந்தனையை வலுப்படுத்தி அவனைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கி வன்புணரத்தூண்டுவர்.

ஆண்கள் அனைவரும் ஒரே விதமான போக்கைக் கொண்டவர்களல்லர் என்பதையும், ஆண் என்பது பெண்ணுக்கு எதிரான இன்னும் toxic musculinity யையும் காண்பிக்க முயல்வதாக இருக்கும்.உதாரணமாக I spit on your grave (1978)  திரைப்பபடத்தில் இத்தகைய போக்கைக் காணலாம்.இத்தகைய கூட்டு வன்புணர்வில் ஒரு நபரை வேறுபட்டவராக காட்டும் போக்கின் தோற்றுவாய் Igmar bergman இன்   the virgin spring(1960).திரைப்படத்தில் வன்புணர்பவர்களில் ஒருவர்  மாத்திரம் சிறுவனாக இருக்க,அவர்களைப் பழிவாங்கும் தந்தை பாரபட்சமே பார்க்காமல்  சிறுவனையும் கொன்றுவிடுவார்.அதனைத் தொடர்ந்த  The last house on the Left (1972) திரைப்படத்தில் வன்புணரும் ஆண்களுடன் ஒரு மூர்க்கத்தனமான பெண் இணைந்திருப்பாள்,அவள் பிற பெண்கள் வன்புணரப்படும்போது எவ்வித எதிர்ப்போ முகம்சுளிப்போ காட்டாமல் அவர்களுடன் இணைந்து துணை போகக்கூடியவளாக இருப்பாள்.இன்னும் அவளும் பாரபட்சமின்றி பழிவாங்கப்படுவாள்.

 தனியாக வன்புணர்வில் ஈடுபடுபவர் மனநிலையும்  கூட்டு வன்புணர்வில் ஈடுபடுபவர் மன நிலையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.அவ்வாறு வன்புணர எத்தனிக்கும் குழுவிலுள்ள  வேறுபட்ட மன  நிலையுடைய ஒருவரின்  இடத்தை மாடத்தி திரைப்படத்தில் இயக்குனர் வழங்கவில்லை.இன்னும் அத்திரைப்படத்தில் வரும் எந்த ஆண் கதாப்பாத்திரமும் பெண்கள் விடயத்தில் நேர்மையானவராக காட்சிப்படுத்தப்படவில்லை.இவற்றை ஒரு விமர்சனப்பார்வையாக அணுக முற்பட்ட போதிலும், இதுவரை சமூகத்தில் கூட்டு வன்புணர்ச்சி நிகழும்போது அதில்   ஈடு பட நாட்டமற்ற  எவரும் தானாக முன்வந்து,வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை  என்கிற நிதர்சனத்தை எதிர்கொள்கின்ற நம் சூழலில் அவ்வாறு காட்சிப்படுத்தியது  இயல்பானதே என்னும் முடிவுக்குத் தள்ளி விடுகின்றது.இன்னும்  பொதுவெளியில் வன்புணர்வு குறித்த உரையாடல்கள் நிகழும் போது மீண்டும் மீண்டும்  பலியாள் பழித்தல் (Victim blame), இழிமகள் இகழ்ச்சி (Slut shame) செய்வதுமாக ஆண்மையச் சமூகத்தின்  நிலைப்பாடு Potential Rapist மன நிலையை வெளிப்படுத்துகிறது.வன்புணர வாய்ப்புக் கிடைக்காதவரை “பெண்களின் கலாச்சார பாதுகாவலர்” என்னும் பெயரில் லாவகமாகப் பதுங்கிக்கொள்ளபவராகவே இருந்துவிடுகின்றனர். தமிழ் சினிமாக்களில் வன்புணர்வு  நிகழ்கின்றதென்றால்,அந்தப் பெண்ணைக்  காப்பாற்ற ஒரு கதாநாயக பிம்ப ஆணை நிறுவியிருப்பார்கள்.அவ்வாணின் வீரதீர செயல்களும்,சிந்தனைப்போக்குகளும் இவ்வாறான அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் “நல்ல ஆண்” என்கிற கதாநாயக  பிம்பமும் தமிழ்த் திரைப்படங்களில் கட்டமைக்கப்படும்.

இயக்குனர் மாடத்தி திரைப்படத்தில் சமரசங்கள் ஏதுமின்றி,வழக்கமான ஆண்கள் இயக்கும்  Exploitation,Entertainment,Violence  வகையறாக்குள் அடக்காமல், இன்னும் Rape revenge திரைப்பட வகை கோரும் வழக்கமான கூறுகளிலிருந்து விலகி ,பாதிக்கப்பட்டவரின் (victim) இடத்திலிருந்து தனியரின் குரலாக (Individual Voice) கதையை நகர்த்துகிறார்.

திரைப்படம் வெறுமனே ஒட்டுமொத்த ஆண்களை மட்டுமல்லாது உயர்வர்க்க/ உயர் ஜாதிய பெண்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து எவ்வித புரிதல்கள்,கரிசனைகளுமற்று தங்களுக்கான சிறப்புத் தனிச்சலுகைகளை அனுபவித்துக் கொண்டு அவர்களைப் புறந்தள்ளிவிடும் போக்கையும் இயக்குனர் விமர்சிக்கத்தவறவில்லை.வேணி கதாப்பாத்திரம் உயர் ஜாதிப் பெண்களின் குருதி தோய்ந்த மாதவிடாய்த் துண்டுகளைத் திட்டிக்கொண்டே துவைப்பது இயக்குனரின் குரலாகவே ஒலிக்கின்றது.

திரைப்படம் குறித்த தனிப்பட்ட ஒரு உரையாடலில் எழுந்த கேள்வியாக,

“புனிதம் முதல் சாக்கடை வரை  பெண்ணிற்கான  அத்தனை பரிமாணங்களும் ஆண்மையச் சமுதாயத்தால்  கட்டமைக்கப்பட்டு மதிப்பிடப்பட்டு வருகின்ற அதே வேளை, ஆணின் ஆதிக்க  இருப்பு மற்றும்  பெண்ணின் பாதுகாப்பு ஆண் இடத்திலேயே  தக்கவைத்துகொள்ளகூடியவாறு கட்டமைக்கப் பட்டுள்ளது.திரைப்படத்தின் இறுதியில் யோசனா கதாப்பாத்திரம் கடவுளாக அவதரித்து அந்த சமூகத்தைப் பழிவாங்குவது போல ஓவியத்தில் புனைவாக்கப்பட்டுள்ளது,பெண்ணுக்கு கடவுளுக்கான அந்தஸ்த்து கொடுத்து உயர்த்தப்பட்டடு காட்சிப்படுத்தப்படுகிறதா ?இவ்வகை பரிமாணத்தின் நோக்கம் புனிதத்துவத்தைக் கட்டமைப்பத்தாக  அல்லது இவ்வன்புணர்வுகான எவ்விதப் பிரக்ஞையுமற்ற இன்னும் தீர்வுகள் ஏதுமற்ற நம் சமூகத்தில் அதற்கான பழிவாங்கலுக்கு மாத்திரம் புனைவாக்கப்பட்டுள்ளதா?”

அதற்கான  இயக்குனரின் பதிலாக,

“நாட்டார் கதைகள் தான் மாடத்திக்கு உந்துதல். சிறுதெய்வங்கள் நம்மிடையே வாழ்ந்த சாதாரண மனிதர்கள் தாம். ஏதோ ஒருவகையில் தாம் வாழ்ந்த சமூகத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்கள். அவர்களின் ரெளத்திரத்திற்கு அஞ்சி அவர்களையே வழிபாட்டுக்குரிய காவல் தெய்வங்களாக மாற்றிக் கொள்வது நம் மரபு, வரலாறு. வர்ஜின் ஸ்பிரிங்கில் மானபங்கப் படுத்தி கொல்லப்பட்ட பெண் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து நன்னீர் ஊற்று வருவது old testament கதைகளின் தன்மையுடையது. அநீதி இழைக்கப்பட்ட ஒரு தீண்டா  வண்ணாத்திப் பெண்ணின் ஆன்மா சொல்லும் கதையாக படைக்கப்பட்டிருக்கிறது மாடத்தி. இன்றும் தமிழக கிராமங்களில் வழிபாட்டுத் தலங்களாக இருப்பது கழுமரங்களும், நடுகற்களும் தான். நாம் தொழும் அம்மன்கள் நம்மடையே வாழ்ந்தவர்கள், நமது கதைகளை நமக்கு திரும்ப திரும்ப சொல்லி நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் அடங்காத ஆன்மாக்கள்.”

உண்மையில் பல்வேறு கலாச்சாரங்களால்,மத, மூட நம்பிக்கைகளால்  பிணைக்கப்பட்ட நம் பழம் பெரும் வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ள   புராணக்கதைகளின்(Myth) பின்னால் ஒரு ஆய்வை நிகழ்த்துவது, எதிர்வாசிப்பு செய்து உடைத்து விமர்சிப்பது அத்தியாவசியமான ஒன்று.தூத்துக்குடி பன்னாம்பறையில் மாடத்தியம்மன்  என்னும் நாட்டார் தெய்வக் கோவிலும் அதன் பின்னுள்ள நானூறுவருடப் பழமைவாய்ந்த  தொன்மக் கதைகளையும் உள்வாங்கி சிறுபான்மை நாடோடிச் சமூகமாகச் சிதறிக்கிடக்கும் புதிரை வண்ணார்களின் கதையுடன் ஒரு புனைவை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர்.கவிதையின் நீட்சியாக சினிமாவை அணுகும் இயக்குனர் லீனாவின் மாடத்தியின் போக்கில் கவித்துவத்தின் சுவடுகளை அவதானிக்கமுடியும்.

திரைப்படத்தில் செம்மலர் அன்னம் (வேணி கதாப்பாத்திரம்) மற்றும் அஜ்மினா காசிம் (யோசனா கதாப்பாத்திரம் ) மற்றும் பிரதான ஆண்  கதாப்பாத்திரத்தின்  நடிப்பு மிகச்சிறப்பு.விளிம்பு நிலை மக்களின் மொழி வழக்கு,வார்த்தைப்பிரயோகங்கள் யதார்த்தமானவை. இன்னும் திரைக்கதையில் பங்காற்றிய கவிஞர் யவனிகா ஸ்ரீ ராம் மற்றும் ரபீக் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.ஆண்மையச் சிந்தனைகள் புரையோடிக்கிடக்கும் தமிழ் சினிமாச்சூழலில் நேர்த்தியான சிந்தனைப்போக்கும் கருத்தியல்களும் கொண்ட இயக்குனர் லீனா மணிமேகலையின் கூருணர்ச்சியுடன் கூடிய  மாடத்தி திரைப்படம் ஒரு பாய்ச்சல்.

2 thoughts on ““மாடத்தி (2019)” தமிழ் சினிமாச்சூழலுடன் ஓர் ஒப்பீட்டுப்பார்வை”

  1. ரெம்ப நாள் கழித்து உங்களின் சிறப்பான கட்டுரை புல்..புல் ..🙌🙌

  2. Slut shaming என்பதை இழிமகள் பழித்தல் அப்படினு சொல்லியிருக்கிறீங்க
    அதை வேசி ஏச்சு அப்படினு எளிய மக்களோட வழக்கில் நாட்டார் வழக்கில் சொல்லலாம் அப்படினு எனக்கு தோனுது
    ஒருவேளை வேசு அப்படினு புழங்குறது பெண்ணிய பார்வைக்கு ஒவ்வாத்து அப்படினு நீங்க நினைச்சால் அதில் தப்பிருந்தால் மறுமொழிங்கள்
    நான் உடனே திருத்திக்க ஏதுவா இருக்கும்
    இந்த படத்தை எங்க பார்ககுறது அது பத்தி சொன்னால் நல்லா இருக்கும்
    ரொம்ப நாளாய் எனக்கு பெண் உடல் குறிச்சு அவளது அம்மணம் குறிச்சு இருந்த “ அப்படி பார்ககுறது தப்பு ஏன் அம்மணத்தை ஈர்பபுக்குரியதாக பார்ககணும்” அப்படிங்கற இந்த எண்ணம் நம்ம திரைப்படங்கள் பெண்ணுடல் குறிச்சு ஊட்டிய pervert படிமங்களோட எதிரொளிப்பு தான் அப்படிங்கறது இன்னைக்கு ஓரளவு தெளிஞ்சுருக்கு
    நாம என்னத்தான் நம்மளோட வாழ்க்கை சூழலை மாற்றிக்கிட்டாலும் அம்மணம் குறிச்ச ஈர்பபு நம்ம படிமலர்சசி (evolution) தடத்தில் ஆழப்பதிஞ்ச ஒன்னு அப்படிங்கறது உரைச்சிருக்கு. இன்னைக்கு முலைகள, பெருசோ சிறுசோ அது சுரக்குற பால் அளவு ஒன்னு தானு அறிவியல் விளக்குனாலும் அல்குல் ( hip) சிறுத்திருந்தாலும் தாயும் சேயும் உசுருக்கு சேதமில்லாம் காப்பாத்துற மருத்துவம் இப்ப வளர்ந்திருந்தாலும் அத்துவான காட்டில் வாழ்ந்த ஆண்களின் ஒட்டுமொத்த மூதாதி பெரிய முலைகள் நிறைய பால் சுரக்கும் அதனால் தாம்பிள்ளைகள் தான் வேட்டைக்கு போய் திரும்பி வரும் வரை பசியில்லாமலிருக்கும் அப்படினு எண்ணியிருக்கலாம் அல்குல் பெருசா இருந்தால் குழந்தை தலை மாட்டிக்கிடாம வெளிய வரும்னு அவனோட பட்டறிவு கத்துக்கொடுத்திருக்கலாம் இதை அவன் ஆழுணர்வாலும்(subconscious) தன்னிச்சையாக புரிஞ்சருந்திருக்கலாம். அது வழிவழியாக அம்மண ஈர்பபு உளவியலாக கடத்தப்பட்டிருக்கலாம். இப்படி இருந்தால் அம்மண ஈர்ப்பு இந்த வகையில் இந்த காலகட்டத்துக்கு எந்த பயனையும் கொடுக்காது அப்படினாலும் அது இயல்பான ஒன்னு படிமலரச்சி எச்சம்அப்படிங்கற தெளிவு வந்திருக்கு அதை ஒரு pervert பார்வையோட ஒதுக்க தேவையில்லனு நான் நம்ப இந்த கட்டுரை உதவியுருக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *