ஏகாதிபத்திய அரசுகளின் ஒற்றுமை (Der Baader Meinhof Komplex -2008)

தற்சமயம் இந்தியாவில் நிகழ்ந்துவரும் அரச வன்முறை உலக அரசியல் நடைமுறைக்கும் மானுட வரலாற்றுக்கும் புதியதல்ல. அதிலும் சிஏஏ/என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களின் பின்புலத்தில் இங்கிருக்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைக் கொண்டு சேர்க்கும் இடம் குறித்த எந்த விதக் கவலையும் இந்திய அரசுக்கிருப்பதாகத் தெரியவில்லை.வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்திய வலதுசாரி மற்றும் இந்துத்துவக் கருத்தியலை பின்பற்றுபவர்கள் இந்திய நாட்டை ஒரு  ஏகாதிபத்திய (Imperialist) அரசாகப் புனையத் துவங்கியுள்ளனர். மண்ணின் வரலாற்றை மிகைப் பிரகடனம் செய்தல், மன்மோகன் சிங் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிகப் புழக்கத்துக்குள்ளாகியிருந்த ‘ஜிடீபி’ என்ற சொல், உலகில் அச்சமயம் இந்தியா வெளிப்படுத்தியிருந்த மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி மற்றும் அண்டை நாட்டு உறவுகளை குழந்தைமை ததும்பும் முதிர்ச்சயின்மையுடன் அணுகுதல், என ஒட்டுமொத்த உலகில் ‘தம் இருப்பே மகத்தானது’ என்று மார்தட்டிக் கொள்ளும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் தான் இந்தியா தற்பொழுது உலகின் கண்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேசப்பற்று எனும் பூடகச் சொல்லுக்கு சுயநியாயம்  கற்பித்தவாறே தனது முரட்டுத் தனத்தை அதுவரை அண்டை நாடுகளின் மீது வெளிப்படுத்தி வந்த இந்தியா, அவ்வாறு நடந்து கொள்ள அந்நாடுகளும் தற்பொழுது போதிய பின்புலங்களை வழங்காமல் இருப்பதன் விளைவாக, இப்பொழுது அதே வன்மத்தையும் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டவர்கள் மீது செலுத்த இவ்வரசு துளியும் தயங்காமல் இருப்பதை நம்மால் கிரகிக்க இயலும்.

சென்ற வருடம்  ஜாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும்  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை, மற்றும் அரசுக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கருத்தோ கேள்வியோ முன்வைக்கும் அனைவரையும் தொடர்ச்சியாக தேச விரோதிகள் என்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் (இதுவொரு அன்றாடக் குற்றச்சாட்டாகவே இன்று ஆகிப் போயுள்ளது) வகைப்பிரிப்பது நிகழ்ந்து வருகின்றது. எதனால் இந்திய அரசு தான் வீழ்த்துவதற்கெனவே ஒரு பிரத்யேக எதிரியை புனைவுலகத்தில் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது? எதனால் இந்த அரசுக்கு ‘ஆளுதல்’ என்பதைக் காட்டிலும் ‘வீழ்த்துதல்’ என்ற சொல் முக்கியத்துவமிக்கதாகத் தோன்றுகிறது? ஆகிய கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆளும் கட்சி தனது என்று கடைப்பிடிக்கும் கருத்தியல் அதனளவில் ஒடுக்கும் குணம் கொண்டிருப்பதை நாமனைவரும் அறிவோம். அதிலும், பாரபட்சமின்றி, எந்தவொரு வீரியமிகு கருத்தியலாயினும் அது அரச இயந்திரத்தைத் தன் வசம் வைத்திருப்பது சாமானியர்களை அச்சுறுத்தவே செய்யும் எனும் பொழுது, நிகழும் அத்துமீறல்களுக்குப் பொறுப்பேற்க ஆளும் அரசின் கருத்தியலை குற்றஞ்சாட்டுவதா அல்லது அரச இயந்திரத்தை (State) குற்றஞ்சாட்டுவதா என்ற தர்மசங்கடமான இடத்திற்கு இந்தியர்கள் இன்று வந்து சேர்ந்துள்ளனர். இந்தப் பின்னணியில் தான் 2008ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியான ‘பாதர்-மைன்ஹோஃப் காம்ப்லெக்ஸ்’ (Der Baader-Meinhof Komplex) திரைப்படத்தை விவரிக்க விரும்புகிறேன்.

1960-70களின் ஜெர்மனி கதைக்களம். 1967 – அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஒற்றுண்ணியாக இருந்து வந்த மேற்கு ஜெர்மனிய அரசாங்கம் நாடெங்கிலுமிருந்த இடதுசாரி மாணவ அமைப்புகளால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த காலம். ஒருபுறம் வியட்னாம் யுத்தத்திற்கு மேற்கு ஜெர்மனி மறைமுகமாக ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கையில், மறுபுறம் உலகெங்கும் சமத்துவம் பேசப்பட்டு வந்த காலத்தில் மன்னராட்சி புரிந்து குடிமக்களை கொன்று குவித்த ஈரான் நாட்டின் ஷா முகம்மது ரேசா பாலவி (Mohammed Reza Pahlavi) மற்றும் மனைவி ஃபாரா (Farah) (அதற்குப் பிறகு ஈரானை ஆள வந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிடும் பொழுது இவரின் ஆட்சிக் காலம் சற்று தளர்ந்ததாக இருந்ததாகவே கருதப்படுகிறது1) இருவரும்  மேற்கு ஜெர்மனிக்கு ஒன்பது நாள் சுற்றுப் பயணமாக வருகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனிய நிலப்பரப்பு நேச நாடுகளின் இரண்டு மிகப்பெரும் அரசாங்கங்களால் துண்டாடப்பட்டது. கிழக்கு ஜெர்மனி ரஷ்ய அரசின் தூண்டுகோலுடனும், மேற்கு ஜெர்மனி அமெரிக்காவின் தூண்டுகோலுடனும் ஆளப்பட்டன.அப்போது இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் புத்துயிர்ப்புக்கென அமெரிக்கா ஒதுக்கியிருந்த பணவுதவி முதற்கொண்டு  (மார்ஷல் திட்டம்2) பிந்தைய 60கள் வரையில் அமெரிக்க மற்றும் ஆளும் ஜெர்மனிய கூட்டாட்சிக் குடியரசின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்குக் கடும் அதிருப்தி நிலவி வந்தது. மா சே துங், ஹோ சி மின் ஆகியோரின்பால்  அவ்வமைப்புகள் ஆட்கொள்ளப்பட்டன.

சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஷாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆயுதமில்லா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பெர்லினில் ஒன்று கூடுகின்றனர். அங்கு ஷாவின் ஆதரவாளர்கள் சிலரையும் காண முடிகிறது. ஷாவும் அவரது மனைவியும் வந்து இறங்கியவுடன் அவர்களுக்கெதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. இருவரும் சென்றபிறகு, ஷாவின் ஆதரவாளர்களுள் ஒருவன் அற வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவன் ஒருவனின் தலையில் தான் கையில் வைத்திருந்த பதாகையை கொண்டு அடிக்கிறான். மாணவர்கள் காவல்துறையின் உதவியை நாடுகின்றனர். காவலர்கள் கள்ள மௌனம் கொள்கின்றனர். ஷாவின் ஆதரவாளர்கள் கையில் கம்புடன் மாணவர்களை மேன்மேலும் தாக்குகின்றனர். வலி தாங்க இயலாமல் சிதறி ஓடுகின்றனர். காவல்துறையினர் ஓடும் மாணவர்களை குதிரையில் ஏறி விரட்டி அடிக்கின்றனர். இவ்வளவு களேபரத்துக்கிடையில் ஆர்ப்பாட்டக் களத்தில் ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது (நிஜத்தில் இரண்டு சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது3). மேற்கு ஜெர்மனியின் பல்கலைக்கழமொன்றில் பயின்று வந்த பென்னோ ஊனசார்க் (Benno Ohnesorg) எனும் மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டான் (அதுவே அவன் பங்கு கொண்ட முதல் அரசியல் ஆர்ப்பாட்டம். அவன் இறந்த பொழுது அவனுக்கொரு கர்ப்பினி மனைவி இருந்தார்4).

இது திரைப்படத்தின் முதல் காட்சி. இந்தச் சம்பவத்தை அடித்தளமாகக் கொண்டு தான் மேற்கு ஜெர்மனியின் இடதுசாரி மாணவர் அணியொன்று தீவிரவாத இடதுசாரி குழுமமாக உருமாறியது. இக்குழு பல மாணவர்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், வீட்டிலேயே குண்டுகளை தயாரித்து மேற்கு ஜெர்மனியின் முதலாளித்துவ பகுதிகளைத் தகர்க்க முயன்றது. ஒரு சாதாரண பொருள் அங்காடியை தகர்த்தது துவங்கி, இவர்களது  போராட்டம் குறித்துப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் வகையில் செய்தி வெளியிட்ட ஸ்பிரிங்கர் (Springer) நாளிதழின் அலுவலகம், பின்னர் மேற்கு ஜெர்மனியின் காவல் நிலையம் ஆகியவற்றில் குண்டுவெடிப்பை மேற்கொண்டது. இன்னும்  இவற்றுக்கொரு படி மேல் சென்று, 1970களில், அச்சமயம் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த இவ்வியக்கத்தின் மூலகர்த்தாக்களான  ஆந்த்ரியாஸ் பாதர் (Andreas Baader), உல்ரிக்கே மைன்ஹோஃப் (Ulrike Meinhof) மற்றும் கூத்ரூன் என்ஸ்லின் (Gudrun Enslin) ஆகியோரை விடுவிக்கக் கோரி ஸ்வீடன் நாட்டிலிருந்த ஜெர்மன் தூதரகத்தை கைப்பற்றி அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாகக் கொள்ளும் அளவிற்கு பல்வேறு தீவிரவாத செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். வெளிப்படையாக தங்களை நகர கொரில்லாக்களாக அடையாளப்படுத்திக் கொண்ட இவர்கள் சில காலம் ஜார்டனில் பிரத்யேக ஆயுதப் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

இறுதியாக, 1977ம் ஆண்டு ஜெர்மனிய முதலாளிகள் சங்கத்தின் தலைவரான ஹான்ஸ் மார்ட்டின் ஷ்லெயெர் (Hanns Martin Schleyer) கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்த காலத்தில் பாதர் – மைன்ஹாஃப் குழுவினர் அனைவரும், தமது திட்டங்கள் அனைத்தும் வீணாக, சிறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டு இறந்தனர். இந்தச் சம்பவத்துடன் மேற்கு ஜெர்மனியின் முதல் தலைமுறை ஆர்.ஏ.எஃப் (RAF – Red Army Faction) முடிவுக்கு வருகிறது.

சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் அரசியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவொரு தீவிர ஈடது சாரி இயக்கமொன்றை பற்றிய உண்மைச் சம்பவங்களை திரைக்கதையாக மாற்றுகையில், குறிப்பாக இந்த திரைப்படமாக்கல் செய்முறையின் வழியாகவே, இயக்குனர் தனது தனிப்பார்வையை வழங்கும் வாய்ப்பேற்பட்டுவிடுகிறது. மாணவர்களின் அரசியல் வருகை நன்மையா தீமையா, இவ்வயதில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடுதல் தானே உசிதம் போன்ற பிற்போக்குவாத – கிழட்டுத்தனமான – மதிப்பீடுகள் எவற்றிலும் இயக்குனர் ஈடுபடவில்லை. மாறாக, இந்த இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பு மற்றும் அதன் நடைமுறையிலிருந்த குதர்க்கங்கள், அரசு (state) எவ்வாறு தனக்கென ஒரு விரோதியை தானே வலிந்து உருவாக்கிக் கொள்கிறது?, போன்ற நவீன அரசியல் ஊன்றுகோல்களைப் பற்றிக் கொண்டே இக்கதையை முன்நகர்த்திச் செல்கிறார் அவர்.

உல்ரிக்கே மைன்ஹோஃப் ஒரு ஊடகவியலாளர். ஜெர்மனியின் சமூக நிலை, மற்றும் அரசுக்கெதிரான தனது காத்திரமான விமர்சனங்கள் என தொடர்ந்து இடதுசாரிக் கருத்தியல்கள் குறித்து எழுதி வருபவர். அந்தக் குழுமத்தின் மற்ற இரண்டு முக்கிய அங்கங்களை வகிப்பவர்கள் ஆந்த்ரியாஸ் பாதர் மற்றும் கூத்ருன் என்ஸ்லின். இவர்கள் அனைத்து வகைகளிலும் ஆளும் அரசை குலைத்தல் மற்றும் வன்முறையின் உதவி கொண்டு ஆட்சியை கைப்பற்றுதல் எனும் கொள்கையை கடைப்பிடிப்பவர்களாவர்.

திரைக்கதையின் படி, இம்மூவரும் ஒருவருக்கொருவர் தமது கருத்துகளை பரிமாறிக் கொண்டும், கோட்பாட்டுத் தெளிவுக்கேற்ற அரசியல் செய்முறையில் ஈடுபடும் பொழுதும் இவர்களின் வன்முறைச் சம்பவங்களுக்கு அரசிடம் பயமும், பொதுமக்களிடம் ஆதரவும் இருப்பதாகக் காண்பிக்கப்படுகிறது. ஆட்சியைக் குலைத்து ஒரு மாற்று இடதுசாரி அரசை உருவாக்க முயலும் நோக்கு. ஆனால், இது வெகுகாலம் தொடரவில்லை. இங்கு இத்திரைப்படத்தில் மேற்கு ஜெர்மனியின் உள்துரை அமைச்சகத்தின் பிரதிநிதி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ப்ரூனோ கான்ட்ஸின் (Bruno Ganz) நடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் இக்குழுமத்தை, மக்களுக்குள் மக்களாக இருக்கும் இவர்களை எவ்வாறு தேடிப் பிடிப்பது என்று அரசாங்கம் திக்குமுக்காடிப் போகிறது. அப்பொழுது ப்ரூனோ கான்ட்ஸின் கதாப்பாத்திரம் ஒரு யோசனை சொல்கிறது. குடிமக்களின் அடையாள அட்டையை புதுப்பித்தல் – அதாவது அதுவரை காகித வடிவிலிருந்த அடையாள அட்டைகளை கணப்பொறியில் பதிவேற்றுதல் எனும் யோசனையை அரசுக்கு வழங்குகிறார் அவர். இப்பணி நிறைவடைந்தால் எரிவாயு, மருத்துவக் காப்பீடு, வாகன ஓட்டுனர் உரிமம் போன்ற அத்தியாவசிய உரிமைகளை இந்தப் புதிய அடையாள அட்டையைக் கொண்டிருப்போரால் மட்டுமே பெற்றுக் கொள்ள இயலும். போராட்டக்காரர்கள் பொதுவாக தங்களின் அடையாளங்களை அரசிடமிருந்து மறைத்து வைத்துக் கொள்ள முனையும் பொழுது, இச்செய்முறையால் மறைந்திருப்பவர்களை மிக எளிதாகக் கண்டு பிடித்துவிட இயலும் என்கிறார் அவர். (முன்பு ஆதார் அட்டையின் தோற்றம் மற்றும் தற்பொழுது குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றின் அமல்படுத்தல்கள் இதனுடன் முழுமையாக ஒற்றுப் போகின்றன. இத்திரைப்படத்திற்கும் இந்திய நிலைக்கும் இடையிலிருக்கும் ஒற்றுமை குறித்து பிந்தைய பகுதியில் காண்போம்.)

அரசின் இந்தக் கெடுபிடிகள் பாதர் – மைன்ஹோஃப் குழுமத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. புறவய அழுத்தம் தாளாமல், தனிநபர் வெறுப்பால் பூசி மொழுகப்பட்ட கருத்து முரண்கள் அவர்களுக்குள் தோன்றத் துவங்குகின்றன. அதுவரை கொள்கைப் பிடிப்புடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அரச எதிர்ப்பு தற்பொழுது வெறும் கட்டுப்பெட்டித் தனமான அரச எதிர்ப்பாக உருமாறுகிறது. குழுமம் உடையும் வாய்ப்பேற்பட்டு அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த இடத்தில் தான் புரட்சிகர இடதுசாரி கருதுகோள்களைக் கொண்டிருந்த குழுமம் வெறும் அராஜகவாதக் (Anarchism) குழுமமாக மாறும் விதத்தை இயக்குனர் படம் பிடித்துக் காண்பிக்கிறார்.

இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகள் அரசைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்து மிகவும் விலாவரியாக எழுதியுள்ளார் லெனின். அரசமைப்பை கிடைக்கும் எந்தவித ஆயுதத்தையும் கொண்டு எதிர்த்து, தளர்த்தி, வீழ்த்தி அந்த அமைப்பை தன்வசம் கொண்டு தன்னை ஒடுக்கியவர்களை அதே ஆயுதம் கொண்டு எதிர் ஒடுக்குமுறை செய்ய வேண்டும் என்று ‘அரசும் புரட்சியும்’ (State And Revolution) புத்தகத்தில் விவரிக்கிறார் அவர். அவ்வாறு செய்த பிறகு, அரசு எனும் அமைப்பு தானே உதிர்ந்து விழும் என்றும், விழுந்த இடத்திலிருந்து சமத்துவ (Socialist) அரசின் முதல் பரிமானம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்5. அவர் தம் காலத்து ரஷ்ய அராஜகவாதிகளுடன் (anarchists) முரண்படும் இடமும் இதுவே. காரணம் உடைப்பட்டு விழும் இடம் வரையிலேயே அராஜகவாதிகளின் நோக்கங்கள் மையப்படுத்தப்படுகின்றன. அதற்குப் பிந்தைய பகுதிகளில் இருக்கும் குழப்பம் அவர்களை அதிகாரச் சந்தர்ப்பவாதிகளாக மாற்றிடும் அபாயம் உள்ளதாகக் கருதினார் லெனின்.

இயக்குனர் தாம் படமாக்கும் கதை குறித்தத் தெளிவைப் பெற்றிருக்கும் அதே சமயம், அக்கதையின் உணர்ச்சிப் படிமத்தை மிகைப்படுத்த அக்குழுமத்தின்பால் எவ்வித மிகை ஞாயத்தையும் கற்பிக்கும் இடத்திற்குச் செல்லவில்லை. உள்ளது உள்ளபடியே, நிஜச் சம்பவங்களின் அறவியலை எந்தக் கலப்படமுமின்றி திரைக்குத் தகவமைத்துள்ளார். அதன்படி தேர்ந்த லெனினியக் கோட்பாட்டையும் கடைப்பிடிக்கிறார்.

இந்திய நிலைக்கு வருவோம். இந்தியா அமல்படுத்த முயலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பொதுமக்களென பல்லாயிரக்கணக்கானவர்கள் தினமும் போராடி வருகின்றனர். அதிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி/பல்கலைக்கழக வட்டங்களில் இப்பிரச்சனை குறித்தத் தெளிந்த பரப்புரைகள் அவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைதி வழியில் அனுமதி பெற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஏபிவிபி என்றொரு வலதுசாரி மாணவர் அமைப்பு மாணவர்களின் போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எவ்வித மாற்றுக் கருத்துக்களையோ, உரையாடல் தளத்தையோ உருவாக்கவில்லை; மாறாக லத்தியையும் பிரம்புகளையும் கொண்டு வருகின்றனர். போராடும் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். காவல் துறை வேடிக்கைப் பார்க்கிறது. மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். உயிரிழப்பேதும் ஏற்படாததுதான்  இதற்கும் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் காட்சிக்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் (ஸ்டெர்லைட் போராட்டம் இதன் கோர முகம்).

ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசுக்கும் இந்திய வலதுசாரி பாஜகவுக்கும் ஓராயிரம் வித்தியாசங்கள் இருக்கும் அதே சமயம், இரண்டு வெவ்வேறு அரசாங்கங்கள் தனது அரச இயந்திரத்தை வைத்து மேற்கொள்ளும் செய்முறைகள் மத்தியில் இத்தனை ஒற்றுமை ஏற்பட என்ன காரணமாக இருக்க முடியும்?! அச்சமய ஜெர்மன் அரசு அமெரிக்காவின் ஊதுகுழலாகவே அதிகம் செயல்படுகிறது; இந்தியாவோ (இதுவும் சில மேல்நாட்டு அரசுகளுக்கு ஊதத்தான் செய்கிறது) தனக்கெனவொரு ஏகாதிபத்திய கொள்கையை பின்பற்றி வருகிறது. இவ்விரண்டு நாடுகளும் ஒரு அரசாக (State) இருக்க வேண்டிய தேவையின் காரணத்திற்காகவே, சில வெளிப்படையான குறியீட்டுச் செயற்பாடுகளில் அவை ஈடுபட்டாக வேண்டியுள்ளது. அரசின் இருப்பு குறித்து லெனின் முன்வைக்கும் கருத்து இத்தகையது:

“வர்க்க முரண்களை புறநோக்குப் பார்வையில் சரிசெய்ய இயலாமல் போகும் இடத்தில், அவ்வியலாமையின் வீரியத்திற்கேற்ப அரசிற்கான தேவை எழுகிறது. மறுதலைபட்சமாக, அவ்வர்க்க முரண்களை சீர் செய்ய இயலாத தன்மையின் குறியீடாகவும் அவ்வரசின் இருப்பு விளங்குகின்றது.”6

இக்கருத்தின் பின்னிருக்கும் வர்க்கப் பார்வைகளை மீறியும் மீறாமலும், அரசிற்கான தேவை என்ன என்று நம்மால் யூகித்துக் கொள்ள இயலும். அது, முரண்களை உயிர்ப்புடன் வைத்திருத்தலே ஆகும். அம்முரண்களை அரசாங்கங்கள் கையாளும் விதமே அவற்றின் சக்தியை நிர்ணயிக்கிறது. ஆதார் அட்டை, குடியுரிமைச் சட்டம் இன்னபிற இந்தச் சக்தியின் அளவுகோல்களே தவிர வேறன்று.

சமூகங்கள் பொருளாதார ரீதியிலோ, தனிமனித ரீதியிலோ எந்த வகையான முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், மனித முரண்களையும் வேற்றுமைகளையும் அழியாமல் காத்துக் கொள்ளுதல் இன்னமும் ‘அரசின்’ மூலாதார நோக்கங்களுள் பிரதானமானதாகவே இருந்து வருகிறது. இதனால் இருநூறு வருடங்களுக்கு முன்பு எங்கோ நிகழ்ந்தவொரு சமூக வன்முறைச் சம்பவத்துடனும் கூட தற்போழுது இந்தியாவில் நிகழுபவற்றை நம்மால் ஒப்பிட்டு ஒற்றுமை காண முடிகிறது.

கருத்தியல் ரீதியாக தமது எதிர்கால நோக்கமென்ன என்பதில் சிறிதும் குழப்பமின்றி இருப்போரின் (இந்துத்துவ அரசியல்) கைகளில் இவ்வரசு செல்லும் பொழுது, அதன் புறவய தாக்கம் அச்சமூகத்தில் இன்னும் பலமாக உணரப்படுகிறது. தனது கருத்தியலின் வெற்றிக்காக எதையும் செய்து அரச அதிகாரத்தை அடைந்து விட வேண்டும் என்ற எத்தனிப்பில், இந்திய கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் இந்துத்துவ சக்திகள் லெனினிய நடைமுறையை கடைப்பிடிப்பது போல் தோன்றுவது மகா துரதிரஷ்டம்.

ஆட்சிகள் எப்பொழுதெல்லாம் தம்மையொரு கட்டுக்கடங்காத ‘போக்கிரி அரசாக’ (rogue state) காண்பித்துக் கொள்கின்றனவோ, அப்பொழுதெல்லாம் அதற்கிணையானவொரு எதிர்ச்சக்தியின் தோற்றுவாய்க்கு அவையே காரணிகளாகின்றன. 2008ம் ஆண்டு வெளியான திரைப்படத்திற்கு  1967ல் உருவாகிய ‘பாதர் – மைன்ஹாஃப்’ குழுமம் பொருத்தப்பாட்டுடன் விளங்குவதற்கு இதுவே காரணம். இக்கதைகள் இன்னும் இருபது வருடங்கள் ஆனாலும் இதே அரத்தமிகுதியுடன் தான் இருக்கும். முதல் தலைமுறை தீவிரவாதிகள் அழிவதும், அடுத்தத் தலைமுறை தீவிரவாதிகள் உருவாவதும் என்பதாக திரைப்படத்தின் இறுதிக் காட்சி அமைந்திருப்பது இதைத்தான் உணர்த்துகிறது.

இரண்டு விதமான நெருக்கடிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன: ஒன்று, ஆளும் அரசின் பிரிவினை வாதக் கருத்தியல்; மற்றொன்று, அக்கருத்தியலின்பால் இந்து தேசியவாதிகளுக்கு இருக்கும் தெளிவு ஏற்கனவே மக்கள் விரோதமாக இருந்து வரும் அரச இயந்திரத்தின் செயற்பாடுகளுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கிடும் போக்கு. இந்தப் பல்முனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அவ்வயதிற்கேயுரிய வேகத்துக்கும் எதிர்கருத்துக்கும் வடிகால் அமைத்துத் தர வாய்ப்பளிக்காமல், பாராளுமன்றச் சட்டவியலின் வாக்கியப் பல்புரிதல்களுக்குள் சிக்கி இளைஞர்கள் அலைக்கழிக்கப்படுவதில் தான், 30/40 வயதுவரை வெகுஜன அரசியல் போராட்டங்களிலேயே தனது வாழ்நாளை அர்ப்பணித்து, புத்திப் பேதலித்து, வாழும் பெருவாரியான இளைஞர்களால் நிரம்பிய ‘நரம்பியல் நோய் பீடித்த’ குடியரசாக இந்தியா தோற்றமுற்று வருகிறது.

குறிப்புகள்:

  1. “50 years ago: How the Shah of Iran’s visit impacted German history”, இணைப்பு – https://www.dw.com/en/50-years-ago-how-the-shah-of-irans-visit-impacted-german-history/a-39096262
  2. “HISTORY OF THE MARSHALL PLAN”, இணைப்பு – https://www.marshallfoundation.org/marshall/the-marshall-plan/history-marshall-plan/
  3. “German Red Army Faction, students protests, Baader Meinhof – A media perspective” இணைப்பு – https://youtu.be/EdxIOSPw_ks
  4. “Spy Fired Shot That Changed West Germany”, இணைப்பு – https://www.nytimes.com/2009/05/27/world/europe/27germany.html
  5. Chapter 5 – The Economic Basis for the withering away of the State, “The State and Revolution”, V. I. Lenin, Penguin Books.
  6. “The state arises where, when and to the extent that class contradictions objectively cannot be reconciled. And conversely, the existence of the state demonstrates that the class contradictions are irreconcilable.” Chapter 1 – Class Society and State, Ibid.
2020 பெப்ரவரி மாதம் படச்சுருள் இதழில் பிரசுரமான கட்டுரை

-ப்ரதீப் பாலு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *