“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி

‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகிய முதல் வாரத்தில் அதற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மிஷ்கினின் அதிக வசூல் திரைப்படமாகவும் இது உருமாற வாய்ப்புள்ளதோ என்று தோன்றுகிறது.இங்கு வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாக்களின் மத்தியில் ‘சைக்கோ’ கையாண்டிருக்கும் கதைக்களம் வேறெந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிட இயலாத ஒரு தனியிடத்தைக்  கோருகிறது. வெற்றிப் படங்களை உருவாக்குகிறேன் என்கின்ற பேர்வழியில் திரும்பத் திரும்ப வழமைக்கு மாற்றமில்லாத ஒரே மாதிரியான திரைப்படங்களை உருவாக்கும் மசாலா நடைமுறையிலிருந்து சைக்கோ எந்தளவிற்கு தூரம் சென்றுள்ளது என்பதில் சந்தேகம் உள்ளது. அதாவது, கதைக்கருவின் மையத்தின்பால் பார்வையாளர்கள்  கடுமையாக ஈர்க்கப்பட்டதனாலோ என்னவோ முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் படத்தின் இதர பகுதிகளை படக்குழுவினர் மேம்போக்குத்தனத்துடன் கையாண்டிருப்பதனைப் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்கள் உண்மையிலேயே கவனிக்கவில்லையா அல்லது அவர்கள் கண்டும் காணாதது போல பாவனை செய்கின்றனரா எனத் தெரியவில்லை.

இத்தகைய வழக்கமான தமிழ் சினிமாப்பாங்கில் சற்றும் அடிபிரளா காட்சிகள்  முதல் பாதியில் ஏராளம். நாயகர் கவுதமுக்கும் தாகினிக்கும் இடையில் காதல் உருவாவதை காண்பிக்கும் காட்சிகள் முதற்கொண்டு,தாகினி கடத்தப்படும் இடம் வரை காட்சிப்படுத்தப்பட்டவைகள் யாவுமே மிஷ்கின் கோரும் மாற்று/ஆத்தேர் சினிமா ரகத்துக்கு எந்த அளவுகோல்களிலும் பொருந்தாதவை.

தமிழ் சினிமாவில் காலங்காலமாக தூக்கிப்பிடிக்கப்படும் பெண்ணுடற் பண்டமாக்கலை முன்னிறுவித்தான் பார்வையாளர் மனங்களில் நாயகியின் அழகை இயக்குனர் பதிய வைக்கிறார். ஒரு நூலகத்திற்குள் ஸ்லீவ்லஸ் ஆடையை  அணிவித்து, இடுப்பை இங்குமங்குமாக ஆட்டி ஆட்டி அவரை நடக்கச் செய்து என இவற்றையெல்லாம் கண்டு ஆர்ப்பரித்த பார்வையாளர் கூட்டத்தை இறுதியில் காயடிக்கும் விதமாக, நாயகியின் தந்தையை விட்டு “என் பொண்ணு தான், உட்காரு!” என்ற வசனத்தைச் சொல்லும்படி வைக்கிறார். இது பார்வையாளரை பகடி செய்யும் காட்சி தான். அதற்காக, இங்கு பதிவு செய்யப்படும் நாயகியின் அழகு ,திரைப்படம் முன்னே செல்லச்செல்ல, இயக்குனர் காட்டமுனையும் பேரழகெனும் பிம்பம் சைக்கோவில்லனால் சிதைக்கப்பட்டுவிடுமோ என்று பார்வையாளர்களின் அச்சத்தை மேலோங்கச்செய்யவும் உதவுகிறது.

சைக்கோக்கொலைகாரனைத் தேட முனையும் காவல் துறையினருக்கென  இயக்குனர் ஒதுக்கியிருக்கும் வசனங்களும் அவை நடித்து வெளிக்கொணரப்பட்ட விதமும், பல இடங்களில், திரையில்  பார்த்தமாத்திரத்திலேயே பார்வையாளர்களுக்கு அச் சம்பவம் குறித்து இயல்பாக எழும் பாமரத்தனமான கேள்விகளின்  பிரதிநிதிகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன.இது இயக்குனரின் பார்வையாளர்கள் குறித்த மேலோட்டமான மதிப்பீட்டின்  வெளிப்பாடாகவுள்ளது. இதை தனது திரையாக்கல் யுக்தியெனவே தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்.உதாரணமாக ‘துப்பறிவாளன்’ வெளிவந்த போது  டாக்டர் வாட்சன் கதாப்பாத்திரத்தில் பிரசன்னாவை நடிக்க வைத்திருப்பார் மிஷ்கின். அவரைப் பொறுத்தவரை வாட்சன் என்பவன் சாதாரண பார்வையாளருக்கு ஷெர்லாக் குறித்து எழும் கேள்விகளை பிரதிநிதித்துவப்படுத்துபவன். பிரசன்னா துப்பறிவாளன் படத்தில் எழுப்பும் கேள்விகளைக் கண்டால் (ஒரிஜினல் ஷெர்லாக்கை படித்த எவருக்கும் இது விளங்கியிருக்கும்) “வாட்சன் இவ்வளவு முட்டளாக எந்த கதையிலும் இடம்பெற்றதில்லையே?!” என்று நிச்சயம் தோன்றியிருக்கும்.மிஷ்கின் தனது வசனங்களுக்கென ‘பார்வையாளர் கருத்து’ அல்லது ‘பார்வையாளர் அறிவு’ என்ற அளவுகோலொன்றை நிர்ணயம் செய்கிறார் அல்லவா, அதன்மூலம் பார்வையாளர்கள் என்கிற மாபெருந்திரளையும் தன்னளவில் கீழ்மையானவொரு இடத்தில் வைத்து மதிப்பிட்டே அவ்வசனங்களை அவர் எழுதுகிறாரோ என்று நம்மை எண்ணச் செய்கின்றது. 

‘சைக்கோ’ திரைப்படத்தில் தாகினி கடத்தப்பட்ட பின் போலீஸ் அதிகாரியான ராம், ‘அவன் எதுக்கு அந்த தாகினியக் கடத்தணும்?’ என்று  கேட்டதற்கு காவல் உதவியாளரான பவா செல்லத்துரை கதாப்பாத்திரம் “அந்தப்பொண்ணு பாக்குறதுக்கு லச்சணமா இருக்குறாய்யா” என்று பதில் சொல்லுவார்.இவ்வாறாக போலீஸ் எழுப்பும் கேள்விக் காட்சிகள் யாவும்  பார்வையாளரை மட்டந்தட்டுதலுக்கான உதாரணமாக விளங்குகின்றன. 

அதுமட்டுமல்லாமல், பெண்களைக் கடத்தும் சைக்கோவில்லன் கதாப்பாத்திரம் தொடர்ச்சியாக மேல்வர்க்கப் பெண்களையே கடத்தி வருகிறது. அதற்கென அவர்  பயன்படுத்தும் யுக்திகள் மேல்வர்க்கப் பெண்களின் ஆதர்சமாக இருக்கும் “வெளிநாட்டு நாய்களை”க்கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றன.இக்கடத்தல் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் அப்பெண்கள் கடத்தப்படுவதில் இருக்கும் பதைபதைப்பு ,பயம்,பதற்றத்தைக் காட்டிலும், “ஒரு வெளிநாட்டு நாயைக் காண்பித்தால் போதும் மேல்வர்க்கப் பெண்கள் அகப்பட்டுவிடுவார்கள்” என்கிற  நையாண்டித்தொனியில் உருவாக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

இதே போலத்தான் ஒரு twitter id ஹேக்கர் கதாப்பாத்திரம் அணுகப்பட்டுள்ளது. தலை நிறைய முடி வளர்த்துக் கொண்டு, தடியான கண்ணாடியொன்றை அணிந்தவாறு, நீண்ட ஸ்ட்ராவில் எதையோ குடித்துக் கொண்டிருப்பார். மிகவும் செய்றகையான நடிப்பில் உருவாக்கப்பட்ட காட்சிக் கோர்வையாக அது இருந்தது. சைக்கோவில்லனால் ஹேக்கர் குத்தப்பட்ட பிறகு ஒரு போஸ்டரை முத்தமிட்டவாறு அவர் கீழே விழுந்து இறந்து போகிறார். இறக்கும் தருவாயிலும் அந்த இளைஞனின் தேவை அதுவாகவே உள்ளதாக இக்காட்சி செல்கிறது. அதற்கொரு ஹ்யூமர் எலிமன்ட்டும் இருந்திருக்கலாம். எதுவாயினும் இது சமகால இளைஞர் வாழ்வியலின் மீதான மிஷ்கினின் விமர்சனமாகவே திரையில் வெளிப்படுகிறது.

படத்திற்கு ஆதரவாகப் பேசும் பலர், இப்பகுதிகளை முக்கியத்துவமிக்கதாகக் கருதுவதில்லை. கருதப்போவதுமில்லை. தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களைக் கண்டு பழகியவர்களுக்கும் இக்காட்சிகள் பிடிக்காமற் போகுதல் ஒருபுறம் நிகழ்ந்தாலும், மறுபுறம் ஒரு நல்ல திரைப்படமென அவர்கள் அடையாளங்காணுவதற்குள் இது  போன்ற காட்சிகள் இடம்பெற்றாலும் பரவாயில்லை என்று கூறிக்கொண்டு, அக்காட்சிகளை மட்டும் தன் மனதளவில் நீக்கிவிட்டு, படத்தின் மையத்தை வைத்து மட்டுமே இவர்கள் திரைப்படம் குறித்த முழுமையான மதிப்பீட்டை நிகழ்த்துவதை என்னவென்று கூறுவது.

மேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது மிஷ்கின் தனது எண்ணற்ற நேர்காணல்களில் கூறுவது போல, “தமிழின் கமர்ஷியல் சினிமா” என்று அறியப்பட்டவையின்  காட்சிப் படிமங்களுக்கு இயக்குனர் தன் வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் காட்டும் எதிர்ப்பிற்கு முற்றிலும் நேர்மாறாகவே அவரின் திரைப்படங்களில் அப்படிமங்களின் பயன்பாடு அமைகின்றன.உதாரணமாக சைக்கோத் திரைப்பட, ஆரம்பத்தில் பெண்ணை கவர்ச்சிமிக்கவொரு பண்டமாக காட்சிப்படுத்தல், நாயகரின் ‘பின்தொடர்தல்’ (stalking)மனோபாவம், ஒரேயொரு இளையராஜா பாடலைப் பாடி பெண்ணை காதலில் விழச் செய்தல் போன்றவை கமர்ஷியல் சினிமாவில் நாம் கண்டு பழகியவை தானே!

இங்கு நிகழ்வது என்னவென்றால் இந்தப் பிற்போக்குத் தனமான திரைப்பட நடைமுறையை பலவந்தமாக உடைத்து, ‘தான் அதிலிருந்து மேலெழுகிறேன் பார்’ என்ற சுயநீட்சி மிஷ்கினுக்கு அவசியமாக உள்ளது. தமிழ் கமர்ஷியல் சினிமாக்கூறுகளுடன் மிஷ்கினின் திரைப்படங்கள் ஒப்பிடப்படும் பொழுது மட்டுமே அவை சற்று செழுமை மிக்கவையாக தோன்றுகின்றனவே தவிர தான் கூறும் உலகளாவிய கலை அல்லது மாற்று சினிமாப் படைப்புகளுடன் ஒப்பிடும் பொழுது  அவற்றால் போட்டியிட இயலாமல் போய்விடுகின்றன.

‘துன்பச் சூழலில் இருந்து மட்டுமே ஒரு உண்மையான கலை பிறக்கும்’ என்று மற்றுமொரு நேர்காணலில் இயக்குனர் கூறியிருப்பார். அதாவது அப்படியொரு உயர்ந்த கலை உருவாக்குவதற்காகவே துன்பம் அச்சமூகத்தில் நிலவுதல் வேண்டும் என்று எண்ணும் மனப்போக்கு. அதே போலத்தான் மிஷ்கின் வெறுப்பதாகவும் மறுவுருவாக்கம் செய்வதாகவும் கருதிக்கொண்டிருக்கும்  கமர்ஷியல் திரைப்படப் பாணி உயிர்ப்புடன் இருத்தலே அவரின் படைப்புகளை மட்டும் பிரித்துக் காண்பிக்க உதவுகின்றன.

ஆக, மிஷ்கினின் வித்தியாச (!) படைப்புகள் தொடர்ச்சியாக கமர்ஷியல் திரைப்படப் பாணியின் கோரமுகத்தை மறைமுகமாகவேனும் தக்கவைத்துக் கொண்டேதானிருக்குமே தவிர அவர் வெறுப்பதாகக் கூறும் அந்தத் தமிழ் கமர்ஷியல் திரைப்படப் பாணியை அவரது திரைப்படங்கள்  இதுவரை எந்த இடத்திலும் உடைத்ததேயில்லை.

படத்தில் அதிகப் பாராட்டுக்குள்ளாக வேண்டியவர் சைக்கோவில்லனாக நடித்திருக்கும் ராஜ்குமார். திரைப்படத்தின் தலைப்பு ‘சைக்கோ’வாக இருந்தாலும் இந்தக் கதாப்பாத்திரத்தைத் தொடர்ச்சியாக  “சைக்கோவில்லன்” என்று அடையாளப்படுத்த நமக்கு போதுமான காரணங்கள் உள்ளன. உளவியல் இலக்கியம், உலகத் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன் அனுபவங்கள் பலருக்கும் (Psychosis) மனநோயால் பாதிக்கப்பட்டோரின் சித்திரம் எப்படியிருக்கும் எனும் யோசனையை வழங்கியிருக்கும். அதன்படி மனநோயால்  பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கூச்ச சுபாவமுடையவர்கள், வெளியுலகத்தில் அதிக நேரம் கழிக்காதவர்கள், மிகக் கடுமையான குற்றவுணர்ச்சியால் பாதிப்புக்குள்ளானவர்கள் (இப்படத்தின் கான்டெக்ஸ்டுக்கு ஒற்றுப் போவதை மட்டும் வழங்குகின்றோம்). மிஷ்கின் காண்பித்திருக்கும் சைக்கோ பல முரண்களை தாங்கி நிற்கிறார்.

சைக்கோஸிஸ் நோயாளியால் தான் நிகழ்த்தும் psycho Actஇல் மட்டுமே தனது முழுமையான சுதந்திரத்தையும் சக்தியையும்(power) அனுபவித்து உணரமுடியும். அங்கு மட்டுமே அவரால் எவ்வித சந்தேகங்களும் கூச்ச நாச்சங்களுமின்றி தனது இருப்பை முழுமையாக வியாபித்துக் களித்திட இயலும். மற்ற வெளியிடங்கள் அல்லது வாழ்வியல் சூழல்களில் அவரின் இருப்பு ஒரு பூஜியமாகவே இருக்கும். 

நிற்க.இப்படத்தின் நோயாளியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கதாப்பாத்திரத்தை முழுமைப்படுத்தும் Act அவர் கடத்திவரும் பெண்களின் தலையை துண்டித்துக் கொல்வது அல்ல.படத்தின் பிந்தைய பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கிறித்துவ மூலத்தாலான சடங்கே இந்த நோயாளியை முழுமைப்படுத்தும் நடவடிக்கை.இங்கு மிஷ்கின் வேண்டுமென்றே பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். 

ஏன் வெண்தோலுடைய மற்றும் தொழிற்துறையில் முன்னணியிலிருக்கும் பெண்களை கடத்த வேண்டும்? நோயாளி தனது கிறித்துவ கான்வென்ட் படிப்பில் சுயமைதுனத்தில் ஈடுபட்டு, தனது டீச்சரிடம் சிக்கிக் கொண்டது அவரை மனதளவில் பாதிப்புறச் செய்கிறது. சற்று ஆழமாகச் சென்றோமெனில், சைக்கோவிற்கு தன்னை வசைப்பாடிய டீச்சரின் குரல் மீது வெறுப்பு ஏற்பட்டது என்றும், அதனாலேயே தான் கடத்தும் பெண்களின் கழுத்தை வெட்டி எறிகிறார் என்றும் இயக்குனர் மிஷ்கின் இந்த சைக்கோ செய்முறைக்கு ஒரு விளக்கம் வழங்குகிறார். சைக்கோவிற்கு தமது வெறுப்புக்கு உள்ளாகிய பெண்மணியை (டீச்சரை) கொல்ல இயலாததால் அந்த வெறுப்புணர்வை அதே போல இருப்பதாக அவன் எண்ணும் இதர பெண்களின் மீது project செய்கிறான்.

அதே சமயம் இதன் நீட்சியாக நோயாளிக்கு பாலியல் அனுபவம் போய், சிறுவயதில் டீச்சர் வழங்கிய தண்டனை அனுபவமே பின்னாளில் அவனது  இன்பத்தூய்ப்பின் மையமாக மாறிவிடுகிறது. ஒருவகையான சாடோ-மசோகிஸ்ட்டிக் (Sado-Masochistic) பாலியல் திரிபு நிலை. இந்தக் கதாப்பாத்திரத்தின் சைக்கோஸிஸ் நோய்-மூலம் இதுவே. ரேச்சல் டீச்சரை தன் கஷ்டடியில் வைத்துக்கொண்டு  அவன் டீச்சரிடம் பெறப்போகும் பிரம்படிகளும் சாடல்களும் பாவனைகளுமே அவனுக்கான இன்பத்தூய்ப்பாயிருக்கிறது. அந்தச் சாடலை உறுதி செய்து கொள்ளவும் அவன் கொலை செய்து அந்தத் தலைகளை டீச்சரின் இருக்கைக்கு பின்னால் வைத்து அழகு காணக் கூடும்.  டீச்சரை அவன் தனது வாழ்கையிலிருந்து தூக்கியெறிய விழையும் அதே சமயம் டீச்சரால் அவனுக்குக் கிடைக்கும் பிரம்படிகளாலான குற்றவுணர்ச்சிகளும் அவனுக்குத் தேவையாக உள்ளன.இந்த அடிப்படை உளவியல் முரணே அவனது சைக்கோஸிசை உயிர்ப்புடன் வைத்திருந்து நோய்க்கூறாக மாற்றுகிறது.

சரி, சைக்கோஸிசை சரிசெய்யும் விதமாக இதற்கு மிஷ்கின் வழங்கும் தீர்வு என்ன? ஒரு நேர்காணலில் அவர் இவ்வாறு கூறிகிறார்: கொலை செய்யும் அறையிலிருந்த  இரத்தத்தை தாகினி துடைத்துச் சுத்தம் செய்வதைப் பார்த்தவுடன்தான் (சைக்கோ)அங்குலிக்கு தான் இத்தனை காலம் செய்து வருவது ஒரு மாபெரும் தவறு என்று தோன்றுகிறது. ‘தனது தவறை தானே உணரத் துவங்கும் பொழுது ஒருவன் புத்தனாகிறான்’ என்கிறார் மிஷ்கின். இது மிகவும் வெளிப்படையான உளவியல் கோட்பாட்டுத் திருட்டு. கோட்பாட்டை தனது தேவைக்கென உண்மைக்குப் புறம்பாக பயன்படுத்திக் கொள்ளும் தன்மை. காரணம், சைக்கோஸிஸ் நோயாளியோ அல்லது வேறெந்தவகையான மனநலம் பாதிக்கப்பட்டவருக்கோ தான் புரியும் செயல் தவறானதுதான் என்பது தொடர்ச்சியாக எல்லா சமயமும் அவர்களின் மனதிற்குள் வேரூன்றிக் கிடக்கும் ஒரு உணர்வு.இந்தக் குற்றவுணர்ச்சியே மனப்பிறழ்வை ஏற்படுத்துவதில் கணிசமான பங்கை வகிக்கவும் செய்யும். அவர்களுக்கு தாம் செய்யும் காரியம் தவறு என்று தெரியும்;அதே நேரம் அவர்களால் அதைச் செய்யாமலும் இருக்க இயலாது.மிஷ்கின் காண்பிக்கும் சைக்கோ கதாப்பாத்திரத்தில் தென்படும் இரண்டாவது முரண் இது.

இங்கு படத்தின் சைக்கோக் கதாப்பாத்திரம் ஏதோ  அதுவரை தான் செய்து வந்தவை குற்றச் செயல்களென அவர் உணராதது போலவும், தாகினி தான் அவற்றை குற்றங்களென அவருக்குப் புரிய வைக்கிறார் என்றவாறு மிஷ்கின் விவரிப்பதை இங்கு  துளியளவும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மிஷ்கின், சைக்கோவின் கண்களில் தன்னைத் துன்புறுத்திய டீச்சரின் வெவ்வேறு பிரதிநிதிகளாகவே தான் கடத்தும் பெண்களை பார்க்கிறார் என்ற கருத்தை முன்வைக்க முயற்சிக்கிறார். கதையில் சைக்கோ நடந்து கொள்ளும் விதமும் பட்டப்பகலில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுகையில் அவனுக்கிருக்கும் தெளிவு ஆகியவை மிஷ்கினின் கருத்துக்கு நேரெதிராக உள்ளன. ஒன்று, இது சைக்கோவின் உளநிலை குறித்த தவறான  மதிப்பீடாக இருக்க வேண்டும். இல்லாவிடில், அது சைக்கோவின் கதாப்பாத்திர வடிவமைப்பில் நிகழ்த்தப்பட்ட தவறாக இருக்க வேண்டும். இரண்டில் எது என்று இயக்குனரைத் தான் கேட்க வேண்டும்!

மேற்கூறியது போல இந்தக் கதாப்பாத்திரத்துக்கு வெளியுலகம் சார்ந்த கூச்சமோ தயக்கமோ எதுவுமேயில்லை. இதர சைக்கோ கொலைகார திரைப்படங்களை போன்று இரவில் பெண்களை கடத்துவதாக காண்பித்திருந்தாலும் கூட, இருட்டில் மட்டுமே அக்கதாப்பாத்திரத்தால் தன்னை வெளிக் காண்பித்துக் கொள்ள இயல்கிறது போலும் என்ற முடிவுக்கு நம்மால் வந்திருக்க முடியும். ஆனால் இங்கோ இக்கதாப்பாத்திரம் பட்டப்பகலில் பெண்களை கடத்திச் செல்கிறது. அத்தகைய பிறரை விஞ்சிய அதிகாரத்தொனிமிக்கதாக  (superior) அக்கதாப்பாத்திரம் உணருமிடத்து, படத்தின் சடங்குக் காட்சியில் சைக்கோ கதாப்பாத்திரத்துக்குக் கிடைக்கும் உளவியல் ஆசுவாசம், மற்றும் அந்த ஆசுவாசத்தால் உதிக்கும் சுதந்திர உணர்வு, கேள்விக்குரியதாகிவிடுகிறதே ?

சைக்கோ தன் சிறுவயதில் காவல் அதிகாரி ஒருவரால்  பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் இடம்பெறுகிறது. (Sexual trauma)பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட ‘ஊறுறு’ எவ்வளவு முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. அதை மிஷ்கின் தொட்டிருப்பதும்  வரவேற்கத்தக்கது.ஆயினும் சைக்கோதான் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவனையே கடத்திக் கொண்டு வந்து துன்புறுத்திக் கொன்று விட்டானே! இதற்குக் காரணமானவன் தன் முன்னாலேயே சாவதைக் காணும் பொழுது பலாத்காரத்தால் உருவான traumaவின் இறுக்கம் ஓரளவிற்கேனும்  குறையத்தான் செய்யும் என்கின்றன உளவியல் படிப்பினைகள்.அப்பொழுது பலாத்காரம் செய்யப்பட்ட சைக்கோ அந்த பாலியல் வன்புணர்வு Traumaவிலிருந்து வெளிவந்து விட்டார் என்றால், எதற்காக அதை எந்தவித முகாந்திரங்களுமின்றி, பார்வையாளர்களை குழப்பும் விதத்தில் ஒரே  காட்சிக்கு ஒற்றை வசனமாக மாத்திரம் வைக்க வேண்டும?! 

பாலியல் வன்புணர்வு (Rape)  இத்திரைப்படத்தில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருப்பது இரண்டு தளங்களில் வேலை செய்கிறது: 

ஒன்று:குற்றம் புரியும் சைக்கோவின்  நடத்தைக்கான காரணத்தை விளக்குவதாக அமைவது.தன்னை ரேப் செய்தவனை பிடித்துக் கொன்றுவிடுவதன் மூலமே அந்த trauma விலிருந்து தன்னால் (ஓரளவிற்கேனும்) வெளியேறிட முடியும் என்றிருக்கையில், சைக்கோ தொடர்ச்சியாகப் புரியும் பெண்  கொலைச் சம்பவங்களுக்கு தனக்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்த “பாலியல் வன்புணர்வு”(rape) ஒரு காரணியாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகின்றது.

இரண்டு:இந்த பாலியல் வன்புணர்வுச்சம்பவம்  சைக்கோவைப் புரிந்து கொள்ளவும்,அவர் மீது பார்வையாளர்கள் அனுதாபப்படவும் பயன்படுத்தப்படுவது. இவ்வாறு திரைப்படங்களின் பாலியல் வன்புணர்வுச்சம்பவங்கள் வெறுமனே அனுதாபத்தை தூண்டுவதும்  சுவாரஷ்யம் கருதி பார்வையாளர்களைச் சுரண்டும் நோக்கையும் ‘Sexual violence and Exploitation’ எனும் வகைமாதிரிக்குள் பொருத்தி வன்மத்தை மையாமாக கொண்ட Rape Revenge மற்றும் இதர ஜானர்களுள்  வைத்து உலகளாவிய திரைப்படக் கருத்தியலாளர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.இங்கே சைக்கோவைப் புரிந்துகொண்டு அவனை மன்னிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒற்றை வரியில் Rape பற்றிய சம்பாஷனை முடிந்து விடுகிறது.இனி இயக்குனர் நாட்டப்படி நாம் மன்னிக்க வேண்டியது கடமை.

சைக்கோஸிஸின் இந்த அரைகுறைத் தன்மைக்குக் காரணம், அதன் இயல்புகள் முழுமையாக இப்படத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. நியாயமாக இந்த ஒட்டுமொத்தத் திரைப்படமே அந்த சைக்கோ கதாப்பாத்திரத்தின் case-studyயாக இருந்திருக்க வேண்டும். மிஷ்கின் காண்பித்திருக்கும் சைக்கோ கதாப்பாத்திரமோ வெறும் மனநலம் பாதிக்கப்பட்டவரல்ல; மாறாக, பௌத்த மதப் படிப்பினையும், கிருத்துவத் தீய சக்தி என வரையறுக்கப்பட்டிருப்பவையின்  இயல்புகளுக்கொத்த சில உளவியல் பின்புலங்களை கொண்டிருக்கும் ‘தமிழ் சினிமா வில்லன்.அவ்வளவே! அக்கதாப்பாத்திரத்தின் காட்சியமைப்பில் அதன் உளவியல் சிக்கல்கள் திரையில் இடம் பெறாத சமயங்களில் அதன் வில்லத்தனம் திரையை நிரப்பிவடுகின்றன.

ஒரு மனநலம் பாதித்த சைக்கோவை ‘வில்லனாகச்’ சித்தரித்ததில் என்ன தவறு? என்ற கேள்வி இங்கு எழலாம். வில்லன் என்பவர் தனிநபர் அல்லது சமூகத்தின் அறவியலுக்கு (morality) எதிரானவர் (இவர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்).இவர் அச்சமூகத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும் சமூக-பொருளாதார மற்றும் சமூக-உளவியல் பொதுத் தன்மைகளுக்கு குந்தகம் விளைவிப்பவராவார். இதனால், தமிழ் சினிமா என்று மட்டுமல்ல, உலகளாவிய திரைப்படங்களிலும் வில்லன் என்பவர் சமூகச் சீர்கேட்டுக்கு வழிவகுப்பவராகவும், கேங்க்ஸ்டராகவும், நல்லவர்கள் என்று கருதப்படுவோரை கொலை செய்யும் நெஞ்சுரம் கொண்டவராகவுமே சித்தரிக்கப்படுவதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். 

எப்பொழுது இந்த வில்லத்தனம் மறையும் என்றால், படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில்  (grey) வடிவமைக்கப்படும் பொழுது, இதர கதாப்பாத்திரங்களிலிருந்து வில்லன் தனியாக தெரிய வாய்ப்பில்லாமல் போகும் பொழுது, இங்கு வில்லன் என்ற கதாப்பாத்திரப் படிமம் கரைந்து போவது மட்டுமல்லாமல், அது மக்களால் புரிந்து கொள்ளப்படும் தெளிவிடத்திற்கும் சென்றுவிடும்.

பெரும்பான்மையான அமெரிக்கத்திரைப்படங்கள் “சைக்கோத் தனங்கள் மனிதப்புரிதலுக்கு அப்பாற்பட்டது” எனும்  பிம்பத்தை பல தசாப்தங்களாக உலகை நம்பவைத்தும் அதை ஒரு சமூக உண்மையாக கட்டமைத்தும் வருகிறது. மிஷ்கினின் பாணி அதிலிருந்து துளியும் விலகவில்லை.

குற்றம் புரியும் மனிதனின் வாழ்வியலை  நெருங்கிப் படம் பிடித்து காட்டுவதன் மூலம் மட்டும் தான் “அவன் சாமான்ய மனிதருக்குள் ஒருவன்,அவன் புரிந்து கொள்ளப்படவேண்டியவன்” என்ற எண்ணம் சக மனிதருக்குள் எழும். 

உலகளாவிய ரீதியில்  பெயர் பெற்ற ஜப்பானிய இயக்குனர் koji wakamatsu வின் Serial Rapist(1978) திரைப்படம்  முதற்கொண்டு, சமகாலத்தில் ஒவ்வொரு திரைப்பட விழாக்களிலும் பிரம்மிப்பை ஏற்படுத்திவரும் ஜேர்மனிய இயக்குனரான  Fatih Akin இன் அண்மையில் வெளியான Golden Glove (2019) திரைப்படம் வரை தொடர்ச்சியாக பெண்களை கொலை செய்துகொண்டிருக்கும் ஒரு சைக்கோவின் வாழ்வியலை படக்குழுவினர் அவ்வளவு யதார்த்தத்துடன் காட்சிப்படுத்தியிருப்பர்.திரைப்படத்தின் பிரதான கதாப்பத்திரமே  (சைக்கோ)இவர்கள் தான். எது நல்லது? எது கெட்டது? என்ற கோட்பாட்டுக் கருத்தியல் நெருக்கடிகளையெல்லாம் இயக்குனர் பார்வையாளர்களிடம் திணித்துவிடவில்லை.இங்கு இவர்கள் எங்கு வாழ்கிறார்கள் ? பெண்களை எவ்வாறு நடாத்துகின்றார்கள் ?பிற ஆண்களுடன் எவ்வாறு உரையாடுகிறார்கள் ? இனி எப்படிக் கொலை செய்து   அதற்குள் வாழ்கையை கொண்டு செல்கின்றார்கள்? என்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இக்கதாப்பாத்திரங்கள் பார்வையாளர்களால்  புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமே தவிர  அக்கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் கற்பிப்பப்பதாகவோ தீர்ப்பு வழங்குவதாகவோ அவ்வியக்குனர்களின் பார்வை இருந்துவிடாது.“சைக்கோ கதாப்பாத்திரங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” என்ற இடத்தில் இதுவே சிறந்த அணுகுமுறையாகக்  கருதப்படுகின்றது.

மிஷ்கின் தனது சைக்கோ கதாப்பாத்திரத்துக்கு, புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் (பௌத்த மூலக் கதையை அடிப்படையாகக் கொண்டு), ஒரு தீய குணத்தையும், பொதுக்கருத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘வில்லன்’ படிமத்தையும் வலிந்து திணிக்க வேண்டிய தர்மசங்கட நிலைக்கு உள்ளாகியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டோரை புரிந்த கொள்ள வேண்டும் எனும் பொழுது அவர்களை முதலில் ‘வில்லன்’ என்று மதிப்பீடு செய்து, பொதுமக்களிலிருந்து பிரித்து  வைத்து அணுகுவது, உலகளாவிய மனிதத்தை முன்வைக்கும் கலைஞன் ஒருவனின் நிலைப்பாடாக எப்படி இருந்துவிட முடியும்?.

கிம்கி டுக் புராதன பௌத்த தத்துவத்தை சமகால வாழ்வியலுக்கு ஏற்றாற்போல தகவமைப்பதை கலை என்று நம்மால் ஏற்க இயலும். காரணம் அதில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பொழுது அவர் மக்களுடன் மக்களாகவே தன்னையும் இணைத்துக் கொள்கிறார். ஆனால், இங்கோ, பௌத்த தத்துவத்துக்குள் பொருந்துவதற்காகவே சமகால வாழ்வியல் அம்சங்களும், மக்களின் குணாதிசியங்களும்  வலிந்து ஒரு திரைக்கதையாக சுருக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மனநலம் பாதித்தவரை தம்மில் ஒருவராக பாவிக்கவில்லை; மாறாக சைக்கோவின்  பிரச்சனைக்குத் தீர்வு வழங்கும் இடத்தில் தன்னை நிறுவிக் கொள்கிறார். இந்தக் காரணங்களால் இந்த “அபலையை ஏற்றுக் கொள்ளுங்களேன்” என்னும் தொனியில் சைக்கோவுக்காக பார்வையாளர்களிடம் மன்றாடுகிறார். துவக்கக் காட்சியில் கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் ‘ஏய் கடவுளே!’ என்று உணர்ச்சிப் பூர்வமாகக் கத்துவார். அந்த ஓலம் கடவுளுக்கானதல்ல; ஏன், பார்வையாளர்களுக்கும் அல்ல. அது இயக்குனர் மிஷ்கினை நோக்கியே! சைக்கோ கொலைகாரரின் புத்திப் பேதலிப்புக்கு ஒரு காரணத்தை நிறுவியும், அதற்கொரு பாசாங்கான தீர்வை முன்வைத்ததும் மிஷ்கின் தனது படைப்பில் தன்னை கடவுளாக நிர்ணயம் செய்து கொள்கிறாரோ என்ற முடிவுக்கே நம்மை தள்ளுகின்றது.மனநலம் பாதித்தவரை மக்களிலிருந்து பிரித்து வைத்து அவருக்கு அறபோதனையை வழங்க வேண்டும் என்ற கீழோரிடத்துக்கருணை காட்டுகின்ற  (condescending) தொனியில் கடவுளால் தான் இருக்க முடியும்; ஒரு கலைஞனால் எப்படியிருக்க முடியும்?

மிஷ்கின் பௌத்த மூலக் கதையின் பல்வேறு அம்சங்களை திரைப்படத்திற்கென மாற்றியமைத்துள்ளார். அவற்றில் முதன்மையானது தாகினி கதாப்பாத்திரம். மூலத்தில் அங்குலிக்குக் கருணையை உணர்த்தும் இடத்திலிருந்த புத்தர், திரைப்படத்தில் கௌதம் கதாப்பாத்திரமாக இருப்பதைக் காட்டிலும், தாகினி கதாப்பாத்திரத்தின் மூலமே அதிகம் வெளிப்படுகிறார். சைக்கோ வில்லனுக்குக் கருணையை வழங்குமிடத்தில் – புத்தரின் இடத்தில் – தாகினியை பொருத்தியது இதையே உணர்த்துகிறது.இதனால் மிஷ்கினின் இப்படைப்பு பெண்மையெனும் சமூகக் கட்டமைப்புக்குச் சாதகமானதாக இருக்கலாமேயொழிய அது பெண்களுக்குச் சாதகமானது அல்ல. இது  மறைமுக பெண் வெறுப்பை ப்போதித்துவிட்டுச்செல்கிறது.பெண்களை இலகுவாக சைக்கோவினால் கடத்திவிட முடிகிறது.ஆரம்பத்திலிருந்தே கடத்தப்பட்ட பெண்கள் “வன்புணரப்படாமல்” தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்பதே “ அந்த சைக்கோ யாரையும் ரேப் செய்யவில்லை தானே ஆக அவனை மன்னித்துவிடலாம்” என்ற இயக்குனரின் மகா மனிதத் தன்மையை ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் தமிழ் சமூகத்திற்கு பொருந்துமாறும் அக்கதாப்பாத்திரம் வழிநடாத்தப்படுகிறது.

இதுவே கடத்தப்பட்ட பெண்கள் அனைவரும் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் தாகினியைக்கூட வன்புணர்ந்து விட்டு தன் கஷ்டடியில் உயிருடன் வைத்து அவனது சிக்கல்களை ஒவ்வொன்றாக கண்டறிய வைத்திருந்தால், இதே தாகினியைகொண்டு அதற்கும்  மன்னிப்பு வழங்கக் கோரும் வகையில் இயக்குனரால் கதை எழுத முடியும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. Stockholm syndrome இல் தாகினி உள்வாங்கப்பட்டு அவளை அந்த சைக்கோ ஏன் கடத்தியிருக்கிறான் அவனது நியாயம் என்ன என்பதை புரிந்து கொள்வதெல்லாம்  சரி ,சைக்கோவை தாகினி மன்னித்தருளும் தொனியானது , இப்படி ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவன் ஒரு பெண்ணைக்கடத்தி வன்புணர்ந்து விட்டாலும் கூட அவனை புரிந்து கொண்டு மனிதத்தை நிலை நாட்ட அவனை அப்பெண் மன்னிக்க வேண்டும் என்பதுதான். புத்தரின் வழியாக இயக்குனர் மறைமுகமாகக்  கோருவதும் இதனைத்தான்.

அடுத்து திரைப்படத்தில் எந்த இடத்திலுமே பெண்களுக்கான தனித்துவமான இடம் கொடுக்கப்பவில்லை.சைக்கோ பெண்களை நடாத்துவது ஒரு புறமிருக்கட்டும்.சைக்கோ கடத்த நினைக்காத  இடத்தில் இருக்கும் பெண் கதாப்பாத்திரங்களை இயக்குனர் எப்படி நடத்துகிறார் என்பதே இங்கு கேள்வியாக உள்ளது.

கலைக்குள்ளும் கனவுகளுக்குள்ளும் பாலியல் வெளிப்பாடுகள் குறியீட்டுத் தன்மையுடன் வெளிப்படும் விதங்கள் குறித்த படிப்பினைகள் நாம் அறிந்ததே. அதிலும் தன்னை  தீவிர வாசிப்பாளராக காட்டிக்கொள்ளும் மிஷ்கினும் இது குறித்து அறிந்திருப்பார் என்றே நினைக்கின்றோம்.அதாவது, நிஜத்தில் பெண்ணுடலாக இருக்கும் ஒருவரின் பாலியல் உணர்வுகள், கனவிலும், கலையிலும் அதே பெண் வசிக்கும் அறையாகவோ வீடாகவோ சித்தரிக்கப்படும்  (இயக்குனர் ரோமன் போலான்ஸ்கியின் Repulsion திரைப்படத்தில் இதன் சீரிய வெளிப்பாட்டைக் காணலாம்).இதற்குள் அனுமதியின்றி எவரும் நுழைவாராயின்,அது ஒரு பெண் உடலுக்குள் அனுமதியின்றி  ஒருவன் நுழைய முயலும் உடல் பலாத்காரத்துக்கு இணையான கலைப் பிரதிபலிப்பாகும்.

‘சைக்கோ’ திரைப் படத்தில் வரும் பெண் கதாப்பத்திரங்களில் தாகினி, கமலா தாஸ், ரேச்சல் டீச்சர் ஆகியோர் முதன்மையானவர்கள். படத்தின் ஆரம்பப் பகுதிகளில்  கௌதம் தாகினியை பின்தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்; இடையில் கமலா தாஸின் அறிமுகக் காட்சியில் கெளதம் அனுமதியின்றி அவர் அறைக்குள் நுழைந்தது மட்டுமல்லாமல், தனக்கு உதவ முன்வரவில்லையென கமலா தாஸ் கன்னத்தில் அறைந்து விட்டு  செல்கிறார்; இதுதவிர கமலா தாஸுக்குத் தாயாக நடித்திருக்கும் ரேனுகா கதாப்பாத்திரத்தை கமலா தாஸ் நடத்தும் விதமென்ன என்று படம் பார்த்த அனைவருக்கும் புரிந்திருக்கும்.ரேச்சல் டீச்சரோ வெளிப்படையாகவே சைக்கோ வில்லனுக்குத் தீங்கிழைத்தவர்,அதனால் திரைப்படத்தில் அவரின் சிறை இருப்புக்கு கதைக்குள்ளேயே ஒரு நியாயம் இருப்பதென மிஷ்கினால் முன்வைக்க முடியும்.

நமது கேள்வி என்னவென்றால்,

படத்தில் இடம்பெறும் பெண் கதாப்பாத்திரங்கள் யாருக்கும்,கதாநாயகனோ சைக்கோவில்லனோ உட்புகாத, தனியிடம் (privacy), indivduval space என்று எதுவுமேயில்லை.அவர்களின் தங்குமிடங்கள் தொடர்ச்சியாக வெளியாள் ஒருவனால் பலவந்தமாக உட்புகப்படுகிறது. அது ஒன்று நாயகர் கௌதமால் நிகழ்த்தப்படுகிறது, இல்லாவிடில் சைக்கோவால் (அவர்தான் சைக்கோ வில்லனாயிற்றே) நிகழ்த்தப்படுகிறது. படத்தின் முழுமையில் இதன் பெண் கதாப்பாத்திரங்களை கணக்கிலெடுத்துக் கொண்டால், ஒரு புறம் மிஷ்கின் அப்பெண்களை புனிதப்படுத்துவதும், உடல்/உள ஊனங்களை மீறுபவர்களாக சித்தரித்தும், மறுபுறம் இலக்கியக் குறியீட்டு ரீதியாக அப்பெண்களுக்கென தனிப்பட்ட புழங்கிடத்தையோ சிந்திக்குமிடத்தையோ வழங்கிடாமல் இருப்பதும், ஒருவேளை வழங்கப்பட்டாலும் அவ்விடம் வெளியாள் ஒருவரால் பகிரங்கமாக உட்புகப்படும் வகையிலும் சித்தரிக்கப்படுவது ஒரு முரண்.

சைக்கோ தான் கடத்தும் பெண்களின் கழுத்தை – குரல் வளையை – அறுத்து கொலை செய்வது குறித்து முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு ஏற்றாற்போல படத்தில் சைக்கோ, கடத்தும் பெண்கள் அவர்தம் தொழிலில் முன்னணியில் இருப்பவர்கள் எனும் குறிப்பும் இடம்பெறுகிறது. இங்கு நமக்குக் கிடைக்கும் சைக்கோவின் பெண் தேர்வு குறித்த பாய்ச்சற்கோட்டுப் படம் இவ்வாறாக உள்ளது: டீச்சர் மீதான வெறுப்பு -> டீச்சரின் குரல் -> தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் இளம்பெண்கள் (!?) அல்லது குரலை பயன்படுத்தித் தொழில் புரியும் பெண்கள் -> டீச்சரின் பிம்பத்தை அவர்களின் மீது படர்த்தி அவர்களைக் கொல்லுதல். இந்தச் சங்கிலி அதனளவிலேயே பல போதாமைகளைக் கொண்டது என்பதை அறிய பெரிய உளவியல் கோட்பாட்டாளர்களின் உதவி நமக்குத் தேவையில்லை. இதன் உச்சபட்ச முரணாக குரல் குறித்த சைக்கோவின் வெறுப்பையும், அவர் கடத்தும் பெண்களின் தொழில் ரீதியிலான முன்னேற்றத்தையும் இணைக்கும் பாலம், மிஷ்கினின் மனோபாவத்தைத் தோலுரித்துக் காண்பித்து விடுகிறது: பெண்கள் அவர்தம் குரல்கள் – பேச்சு – மூலமே அவர்கள் புரியும் தொழிலில் முன்னேற்றம் அடைகின்றனர் எனும் நிலைப்பாடே இதன் சிந்தனையியல் முடிவிடமாக அமைகிறது.

இவற்றை கொண்டுதான் மிஷ்கினின் படங்களில் – சைக்கோவில் – மறைமுக பெண் வெறுப்பு மற்றும் பெண் உளவியல் அத்துமீறல்கள் பொதிந்துள்ளன என்று கூறுகிறோம். அவர் இதுவரை எடுத்திருக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் இந்த மறைமுக அத்துமீறலை நம்மால் கோடிட்டுக் காட்ட இயலும்.

என்னதான் மிஷ்கின் அவரைப்பொறுத்தவரையில் தேர்ந்த கதைச் சொல்லல் பாணிகளை கடைப்பிடித்து ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருந்தாலும், ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் அம்சங்க்ளை இடம்பெறச் செய்திருந்தாலும், அவரின் உணர்வியல் அடிப்படைகளும், உலகப் பார்வையும், இதுவொரு சினிமாட்டிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பிற்போக்குவாத படைப்பு என்ற தீர்மானத்திற்கே நம்மைத் தள்ளுகின்றன.

கீழ்மையான கமர்ஷியல் படங்களும் மசாலா படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் இப்படியொரு உளவியல் பின்புலத்துடன் வெளிவரும் படைப்பு, இன்று நிகழ்வதைப் போல, பல்வேறு விதமான உரையாடல்களுக்கு இட்டுச் செல்லும் அதே சமயம் அப்படைப்பு மதிப்பிடப் பட அதன் ஒப்பீட்டுக் கூறுகளாக உலகின் இதர உளவியல் கலைப்படங்களை வைத்தல் தான் நியாயமே தவிர, மசாலா/கமர்ஷியல் படத் தன்மையை தம் இஷ்டம் போல ஒப்பீட்டுக் கூறுகளாகக் கொண்டு ஒரு படத்தை சிறப்பானது என்று தூக்கிப் பிடித்தல் ஒரு பகட்டுத் தன்மையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.

அந்த வகையில் ‘சைக்கோ’ தேர்ந்த கலை யுக்திகளையும் சினிமா தொழில்நுட்ப அம்சங்களையும் (கலை, இசை ஆகியவை) கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் பிற்போக்கு  வாதப் படைப்பு; பெண் பாலினத்தின் இருப்பையே ‘தாய்மை’ எனும் ஒற்றைப் பதத்திற்குள் சுருக்கும் typical ஆணாதிக்கவாத மனோநிலையின் உளிவயல் வடிவம்.

ஒரு மனநோயாளி புரிந்து கொள்ளப்பட வேண்டியவரே அன்றி மன்னிக்கப்பட வேண்டியவரல்ல; குழந்தையின் செய்முறைகளை ஒத்து அவரின் செய்முறைகளும் இருக்கிறதேயன்றி அவர் குழந்தையல்ல.

இந்நேரம் ஃப்ராய்டும் யூங்கும், ஏன் ஹிட்ச்காக்கும் கூட, படத்தைப் பார்த்திருந்தால் கல்லறைக்குள்ளேயே தம் தலையிலடித்துக் கொண்டிருப்பார்கள்.

பிரதீப் பாலு, அத்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *