குறியீட்டுவாதத்தின் எதிரி

1984ம் ஆண்டு இலண்டனில் ஐரேனா ப்ரெஸ்னா என்ற பெண்ணுக்கு இயக்குனர் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி வழங்கிய நேர்காணல்.

நேர்காணல் அறிமுகம்:புல்புல் இஸபெல்லா,ப்ரதீப் பாலு

நேர்காணல் தமிழில் மொழி பெயர்ப்பு:ப்ரதீப் பாலு

நேர்காணல் குறித்து ஒரு பார்வை/அறிமுகம்

இன்றைய உலகின் தலைச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவராகக் கருதப்படுபவரான ஆந்த்ரே தார்கோவ்ஸ்க்கி, மனித வாழ்வியலின் பல்வேறு ஆழங்களிலும், சில மானுட உண்மைகளுக்குள்ளும் தனது பிரத்யேகத் திரைமொழியைக் கொண்டு இலாவகமாக பயணித்து அவற்றைத் திரையில் காண்பித்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் (Roger Deakins) உட்பட உலகில் தற்பொழுது வாழ்ந்து வரும் பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் தார்கோவ்ஸ்க்கியுடன் ஒரு திரைப்படத்திலாவது பணி புரிய வாய்ப்பு கிட்டியிருக்க வேண்டுமென தங்கள் ஆர்வங்களை பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய நேர்த்தியான மற்றும் தனித்துவமான திரை மொழிகளினூடே திரைப்படங்களை உருவாக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியூட்டிய தார்கோவ்ஸ்க்கி, திரைப்படங்களில் வெளிக்கொணர்வது போன்றே தனது தனி வாழ்கையிலும் வீரியமிக்க ஆன்மீகப் பார்வைகளை கொண்டிருப்பவர்.கிறித்துவ மத நாகரிக வளர்ச்சியில் ரஷ்ய நிலப்பரப்பு வகித்த இடத்தைப் போலவே, தார்கோவ்ஸ்க்கியும் மேற்குக் கலாச்சாரத்திற்கும் கீழைத்தேய கலாச்சாரத்துக்கும் இடையிலொரு நடுப்புள்ளியாகவே திகழ்கிறார். அதையொத்த புராதன மானுடத் தத்துவவியல்களின் பிரதிநிதியாக அவர் தன்னை நிறுவிக் கொள்கிறார். இதற்குக் காரணமில்லாமல் இல்லை.

ரஷ்ய கம்யூனிச புரட்சிக்குப் பிறகு நிகழ்ந்த பொதுமக்களின் தொழில்துறை உயர்வுகள், அவர்களது ஆன்மீக உயர்வுகளுக்கு வித்திடவில்லை. ரஷ்ய நாட்டில் தூக்கியெறியப்பட்ட முதலாளித்துவ மற்றும் பூர்ஷுவா வர்க்க அறங்களை, கிறித்துவ மதம், ரஷ்ய மக்களின் மனங்களில் மீண்டும் துளிர்விடச் செய்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். அதனால் பொது இடங்களில் மத வெளிப்பாடு தடை செய்யப்படும் இடத்திற்கு ரஷ்யாவின் அரசியல் நடவடிக்கைகள் சென்றன. கிறித்துவ மதம் முதலாளித்துவ பூர்ஷுவா குணங்களை வரவேற்றாலும், அதற்குள் மக்கள் அனைவருக்குமான பொது இறையியல் மற்றும் சகோதரத்துவ பண்புகள் உள்ளன என்றும், அம்மதங்களை முழுமையாகத் தூக்கியெறியும் பொழுது அதோடு மக்களுக்குத் தேவையான இந்த ஆன்மீக முனைப்பும் சகோதரத்துவமும் கூட தூக்கி வீசப்படுவதை தார்க்கோவ்ஸ்கி அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறார். உலகப் போருக்குப் பிறகு ரஷ்ய நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்னதான் அசுர வேகத்தில் வளர்ந்தாலும், அதை வளர்க்க உறுதுணையாக இருக்கும் மக்களுக்குள் ஒரு அகண்ட ஆன்மீகக் வெற்றிடம் உருவாகியிருப்பதை அவர் உணர்ந்தார். ரஷ்ய சினிமாவில் தார்க்கோவ்ஸ்கி தேர்வு செய்த திரைப்படப் பாதைக்குள்ளிருக்கும் சூட்சமம் ரஷ்ய சமூகத்தில் கம்யூனிசத்துக்கும் மதத்துக்கும் இடையில் நிலவிய முரண்பட்ட ஊடாட்டத்திலிருந்து தான் துவங்குகிறது.

1970களில் ஐரோப்பாவில் நிகழ்ந்த புதியக் கருத்துக்கள் மற்றும் தத்துவங்களின் பின்னணியில், அவை பிற்போக்கு வாதங்களாகவும், கட்டுடைக்கப்பட வேண்டிய கிறித்துவ இறையாண்மைகளாகவும், மதமும் புராதன வாழ்கை முறையும் வளர்த்தெடுத்த “ஆண்” எனும் ஆதிக்க பாலினக் கட்டமைப்பின் மீதான விமர்சனங்களாகவும் கருதும் அனைத்திற்குள்ளும் கச்சிதமாகப் பொருந்தும் தார்கோவ்ஸ்க்கி, அதே காலகட்டத்தில் தான் அவரொரு மாபெரும் தனித்துவம் வாய்ந்த இயக்குனராகவும், சினிமாவில் ஒரு புதுமையான திரைமொழியைத் தோற்றுவித்தவராகவும் திகழ்கிறார்.

இந்த முரண் ஒரு புறம் இருந்தாலும், இதன் நீட்சியாகவே, இன்று, 21ம் நூற்றாண்டில் வளரும் பலருக்கும் தார்க்கோவ்ஸ்க்கியின் படங்கள் ஒரு கிரகிக்க இயலாத முரணியக்கத்துக்கு இட்டுச் செல்கிறது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டின் வாழ்வியல், சமூகவியல் மற்றும் வெகு மக்கள் அரசியல் ஈடுபாட்டில் அங்கம் கொள்பவர்கள் பலருக்கு, தார்க்கோவ்ஸ்க்கியின் படைப்புகள் ஒருவித மாய மந்திர உணர்வைத் தருவதைத் தாண்டி வேறெதையும் நிகழ்த்தவில்லையே என்று தோன்றலாம்; அல்லது தார்க்கோவ்ஸ்க்கியின் படங்கள் நமக்குள்ளேயே நம்மை ஒருமுறை திரும்பிப்பார்க்கச்செய்வதால், நவீன நகரவியல் வாழ்க்கையைச் சேர்ந்த நமது உள்ளங்களுக்குள் கடந்த காலம் என்றும் குழந்தைப் பருவ உணர்வுகள் என்றும் எதுவுமே இல்லாமல் இருப்பது, அப்படங்கள் மீதொரு பதட்டத்தை ஏற்படுத்துகிறதா என்று சந்தேகிக்கலாம்.

எதுவாயினும் தார்க்கோவ்ஸ்க்கி தனதாக்கிக் கொண்ட புனைவுலகம், இன்றைய இளையதலைமுறை வாழ்ந்து வரும் உலகத்திற்கு நேரெதிரானது. பழமைவாதத்திற்கும் அரசியல் முற்போக்குவாதத்திற்கும் இடையில் நிகழும் போராகவே சமகாலத்தில் தார்க்கோவ்ஸ்க்கியின் திரைப்பட வாசிப்பு அமைந்துள்ளது. 

இந்த நேர்காணலை மொழிப் பெயர்க்க முனைந்ததற்கான நோக்கம், தார்க்கோஸ்கியின் படைப்புகள் குறித்தான வாசிப்பொன்றை நிகழ்த்த முற்பட்ட போது, பல நேர்காணல்களில் தொடர்ச்சியாக ஒரே வகையான கேள்விபதில்களுமாக நிரம்பியிருக்க, அவற்றுள் ஐரெனா என்னும் பெண்மணி இந்நேர்காணலில் கேட்கும் கேள்விகளும் அதற்கு இயக்குனர் தார்கோஸ்க்கி அளிக்கும் பதில்களும் ஒன்றுக்கொன்று அந்நியமாகவும், சமநிலையற்ற தன்மையாகவும் துருத்திக்கொண்டு நிற்பது, அது குறித்து அவதானத்தைச் செலுத்த தூண்டியது.

குறிப்பாக சுதந்திரப்போக்குடைய பெண்ணின் பார்வையில் ஒரு படைப்பாளி எப்படி இருக்கிறார்? இன்னும், அவர் பார்வையில் சுதந்திரமான பெண் என்பவள் யார்? பெண்ணுக்கான தனி உலகம் என்பது என்ன? மற்றும் ஆன்மீக உணர்வு கொண்ட பெண் எப்படியிருக்கவேண்டும்? என்பவை சார்ந்த தார்க்கோவ்ஸ்கியின் கருத்தியல்கள் ஆண்மையச்சிந்தனை கொண்டவையாக இருந்து அதிர்ச்ச்யூட்டுகின்றன. ஒரு படைப்பாளியின் சிந்தனைப் பார்வைக்கோணங்கள் பாலின ரீதியாக பிற பாலினத்தவர்களை மட்டுபடுத்துவதாகவோ அல்லது தனக்கான உலகத்தினுள் சுருக்கி குறைவாக மதிப்பிடுவதாகவோ இருக்கும் பட்சத்தில், அப்படைப்பாளியை எவ்வித கேள்வியும் விமர்சனமுமின்றி தூக்கிக் கொண்டாடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்வது அவ்வளவு நியாமானதாக த்தெரியவில்லை. அது, ஒரு படைப்பாளியின் தனித்துவ படைப்பூக்கம் என்பதைத் தாண்டி சக பாலினத்திற்கு இழைக்கும் அநீதி என்ற அடிப்படைச் மானுடச் சிக்கல்களுள் ஒன்றாக உணர முடிந்தது.அத்தகையவொரு படைப்பாளியைப் பின்பற்றும், அவரை ஆர்த்மார்த்தமாக உள்வாங்கும் அவருக்குப் பிந்தைய படைப்பாளர் சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாக இவர் தோன்றிவிட பல சாத்தியக் கூறுகள் உள்ளன.

நேர்காணலை நிகழ்த்தும் ஐரெனா தனக்கெனவொரு சுதந்திரமிக்க உலகைக் கொண்ட பெண்ணாக இருந்து கொண்டும், தார்க்கோஸ்க்கியின் படைப்புகளுடன் முழு ஈடுபாடு கொண்டும் அவரிடம் கேட்கும் சில கேள்விகள் சமகாலத்திற்கு மிகவும் முக்கியமானவை. அதற்கு தார்க்கோவ்ஸ்க்கி வழங்கும் குறிப்பிடத்தக்க சில பதில்கள் (குறிப்பாக பாலினம் குறித்த பார்வை) முற்றிலும் எதிர்த்துப் புறந்தள்ளக் கூடியவையாகவே இருக்கின்றன. சில சமயங்களில் இயக்குனர் டாரன் அர்நோப்ஸ்க்கியின் (Darren Aronofsky) Mother! (2017) திரைப்படக்கரு கண்முன் நிழலாடிவிட்டுச் செல்கின்றன. உலகம் போற்றும் அற்புதமானவொரு தலைச் சிறந்த படைப்பாளிக்கு ஒரு கண்ணியமான தாய்மைக் குணமுடைய ஒழுக்கமான பெண் வேண்டும். அவள் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டும், அவளுக்கென தனி உலகம் ஏதுமின்றி தன் கணவனையோ காதலனையோ மட்டுமே தனது உலகமாகக் கொண்டும், அவனுக்குள்ளேயே காதலில் கரைந்துகொண்டும் (அவன் அவளுக்குள் கரையவேண்டிய தேவை இல்லை ஏனெனில் அவனொரு ஆண் படைப்பாளி), இன்னும் அவன் சிறந்த படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே அவனைச்சுற்றியே வாழ்ந்து அழிந்து மாய்ந்து விடவேண்டுமென்ற ‘சிறந்த’ படைப்பாளிகள் என்று போற்றப்படுபவர்களின், தனிவாழ்க்கை மீதான அப்பட்டமான விமர்சனக் கருத்தியலை மெய்ப்பிப்பதாக, அல்லது அதனுடன் பல்வேறு ஒற்றுமைகளை கொண்டிருப்பதாகவே இயக்குனர் தர்கோஸ்க்கியின் நிலைப்பாட்டில் இருந்துவரும் பார்வை இவ்வுரையாடலில் கிட்டியது. பெண்ணைக் காதலின் குறியீட்டுடன் சுருக்கியும், துணைக்கு மேரிமாதா இயேசுவைப் பெற்றெடுத்த தியாக குணத்தை பொருத்திப் பேசுவதும், ஆணிடம் முழு பக்தியைப் பேணும் பெண்ணிடமே ‘கண்ணியம்’ உருவாக வாய்ப்புக் கிட்டுமெனக் கூறுதல் மிகவும் பழமையான ஆண்மையச் சிந்தனையையே பறை சாற்றுகின்றன.

அதே சமயம், சமகால இளைஞர்கள் சமூகவியல் மற்றும் அரசியல் தளத்தின் மூலம் இது தான் உலகம் என்று தன்னையே நம்பவைத்துக் கொண்டிருக்கும் சூழல் குறித்தவொரு பூடக பிம்பத்தின் மீது, தார்க்கோவ்ஸ்க்கியின் உலகம் மற்றும் ஆன்மீகப் பார்வைகள் , அதை உடைக்காவிட்டாலும், ஒரு கீறலையாவது ஏற்படுத்திவிடும் என்பது உறுதி.

நேர்காணல் மொழி பெயர்ப்பு

ஐரெனா ப்ரெஸ்னா: ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி அவர்களே, நீங்கள் சோவியத் ரஷ்யாவில் சிறப்புரிமை பெற்றவொரு கலைஞர்…

ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி: இந்த எண்ணம் முற்றிலும் தவறு. ரஷ்யாவில் எனக்கு எவ்விதச் சிறப்புரிமையும் இல்லை. உதாரணமாக திரைப்பட இயக்குனர் திருவாளர் போன்டார்ச்சுக் (Bondarchuk) அவர்களுக்கு சிறப்புரிமை உண்டு, எனக்கு அப்படி எதுவுமில்லை.

ஐரெனா: ஆனால், நீங்கள் மிகவும் பிரபலானவர், அதுவே உங்களுக்கு ஒரு புறம் நன்மையாகவும் மறு புறம் தீமையாகவும் இருக்கக் கூடும்.

தார்கோவ்ஸ்கி:   இந்தப் புகழையும் நன்மதிப்பையும் நான் உணரவில்லை; அதில் எனக்கு ஈடுபாடுமில்லை. நான் ஒரு போதும் எனது புகழில் சிக்கிக் கொள்ளவில்லை. எனக்கது முற்றிலும் அர்த்தமற்றது.

ஐரெனா: உங்களது திரைப்படப் பணியை சமரசமின்றி மேற்கொள்ள ‘புகழ்’ அதிக வாய்ப்புகளை வழங்குவதில்லையா?

தார்கோவ்ஸ்கி:நிச்சயமாக. தன் படைப்பு தோல்வி அடையவில்லை என்ற புரிதல் ஒரு கலைஞனுக்கு மிகவும் முக்கியம். ஒருவித மன நிறைவை அது அவனுக்கு வழங்கும். சோவியத், ஆங்கிலேய மற்றும் குறிப்பாக ஜேர்மனிய மக்கள் மத்தியில் எனக்குக் கிடைக்கும் கவனம் இதை உறுதி செய்வதாக உள்ளது. அதே சமயம், அதீத நன்மைகள் எதையும் அது கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை; செய்யும் பணியில் நான் சரியான பாதையில் தான் இருக்கிறேன் என்ற உத்திரவாதத்தை மட்டுமே அது எனக்கு வழங்குகிறது. அப்படியொரு உத்திரவாதத்தை வழங்கி, என் தன்னம்பிக்கையை உயர்த்துகிறது தான் என்ற பொழுதிலும், அடிப்படையில் அது வேறெந்த அர்த்தத்தையும் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

ஐரெனா: பெயரும் புகழும் உங்களைத் தொந்தரவு செய்வது போலத் தெரிகிறது. பொதுமக்கள் தொடர்பை தவிர்க்கவே நீங்கள் முயல்கிறீர்கள். உதாரணமாக, நீங்கள் அரிதாகவே நேர்காணல்களில் பங்கு கொள்கிறீர்கள்.

தார்கோவ்ஸ்கி:ஆமாம், நான் சமூக பழக்க வழக்கங்களுக்கு உகந்தவனல்ல. புகழை தனக்கென பயன்படுத்திக் கொண்டு, செய்தியாளர்களுடன் தொடர்பில் இருப்பதை விரும்பும் சிலர் இருக்கிறார்கள். எனக்கு அதில் அறவே விருப்பமில்லை. இதற்குக் காரணம் நான் பலராலும் பாரட்டப்படாத இயக்குனர் என்பதால் அல்ல, அந்த நேர்காணல் கட்டுரைகள் உரையாடலின் பேச்சுப் பொருட்களில் அக்கறை கொள்ளாமல் இருப்பதால் தான். எனது புகழால் மட்டும் ஒருவரின் விருப்பத்துக்கு உகந்தவனாக மாறுவதை நானொரு சுமையாகவே கருதுகிறேன். என்னை அது கோபப் படுத்துகிறது.

ஐரெனா: இதில் எது உங்களைக் கோபப் படுத்துகிறது?

தார்கோவ்ஸ்கி: இதற்கு பதிலளிப்பது சுலபமல்ல. என்னை பொறுத்தவரையில் மக்கள் ஒருவருடன் ஒருவர் கூடிப் பேச, அந்த உரையாடல் ஒருதலை பட்சமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே, அவர்களுக்கு ஏதாவதொரு பொதுத் தளம் இருந்தாக வேண்டும். செய்தியாளர் ஒரு கேள்வியை கேட்கும் பொழுது, வழங்கப் படும் பதிலைக் காட்டிலும் செய்தியாளர் தான் எடுக்கும் குறிப்புகளிலேயே அதிகக் கவனம் செலுத்துகிறார். அந்த உரையாடல் அவரை எவ்வகையிலும் பாதிக்காது, அது அவரது தொழிலுக்கு மட்டுமே பயன்படுகிறது. அதே போல, ஒரு திரைப்படப் பார்வையாளர் என்னுடன் கொள்ளும் உரையாடலும் என்னை கோபப் படுத்தும், காரணம் அவருக்கு என் மேலிருக்கும் ஆர்வமிகுதி. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், அத்தகைய உரையாடல்கள் நேர்மையானவையாக இல்லாமலிருப்பது என்னைக் கடும் சீற்றம் கொள்ளச் செய்கிறது. மக்கள் ஒருவருடன் ஒருவர் நேரம் கழிக்கின்றனர், ஆனால் அங்கு நேர்மையான பரஸ்பர ஆர்வங்கள் எதுவும் இருப்பதில்லை; அவர்கள் சுற்றி வளைத்தே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஐரெனா: நேர்மையான தொடர்பைத்தான் அப்பொழுது நீங்கள் விரும்புகிறீர்களா?

தார்கோவ்ஸ்கி: ஒரு குறிப்பிட்ட அளவில், அனைவரும் அத்தகையவொரு தொடர்பைத்தான் விரும்புகிறார்கள். நாம் புரியும் பல காரியங்களில் பெருமளவில் கள்ளங்கபடமற்ற தன்மை பொதிந்துள்ளது, அதிலும் பொது இடங்களில், பயனற்றவைகளும் அபத்தங்களுமே அதிகம் அங்கலாய்க்கப்படுகின்றன. ஒரு விஷயம் முக்கியமாகப் பேசப்பட வேண்டும் என்று நான் உணராத பட்சத்தில், இத்தகைய உரையாடல்களில் எனக்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் திரைப்படங்களை உருவாக்குபவன் என்பதால், அனைத்தையும் அதன் மூலமே கூறிவிட முயல்கிறேன்.

ஐரெனா: நமது இந்த உரையாடலின் அடிப்படை சற்று எதிர்மறையாக விளங்குவதை எனக்குணர்த்த முயல்கிறீர்களா?

தார்கோவ்ஸ்கி: இது எப்பொழுதுமே இப்படித்தான் இருக்கும். அதில் செய்ய ஒன்றுமில்லை. ‘எதிர்மறையான அடிப்படை’, இதற்கு என்ன அர்த்தம்? நமக்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. என்னை நேர்காணல் செய்ய உங்களுக்கிருக்கும் விருப்பமும், இயைந்த வரையில் அதை எதிர்க்க என்னாலான அனைத்தையும் புரிய எனக்கிருக்கும் விருப்பமும் மட்டுமே இங்கு நிலவுகிறது.

ஐரெனா: அதை என்னால் வலுவாக உணர முடிகிறது.

தார்கோவ்ஸ்கி: இந்தத் தருணத்திலிருந்து நமது உரையாடல் எந்தப் பாதையில் செல்லப் போகிறது என்று பார்ப்போம்: கதே என்று நினைக்கிறேன், இதைக் கூறியது, “உங்களுக்கு அறிவுப் பூர்வமான பதிலொன்று தேவையென்றால், அறிவுப் பூர்வமான கேள்வியை கேளுங்கள்.”

ஐரெனா: திரு. தார்கோவ்ஸ்கி அவர்களே, நம் இருவருக்கும் இடையில் எந்தப் பொது அம்சமும் இல்லை என்று நினைப்பீர்களானால் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்கள் திரைப்படங்களுடன் மிகவும் நெருக்கமாக உணர்ந்ததே தற்பொழுது உங்களிடம் நான் வந்திருப்பதற்குக் காரணம். இந்நேர்காணலே உங்களிடம் மனம் விட்டு பேசுவதற்கென உருவாக்கப்பட்ட சாக்குப்போக்குத் தான்.

தார்கோவ்ஸ்கி:  இதை நீங்கள் எனக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஐரெனா: என்னால் முடியும் என்று நம்புகிறேன். உங்களால் மட்டுமே நான் இலண்டனுக்கு வந்திருக்கிறேன். இதன் மூலம் ஒரு கட்டுரை வெளிவரும் என்பது இரண்டாம் பட்சமானது தான், இருப்பினும் அப்படியொரு கட்டுரை வெளிவரும்.

தார்கோவ்ஸ்கி: அனைத்தையும் ஒன்றோடொன்று இணைத்தக் கொள்ள விரும்புபவர் நீங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஐரெனா: முதலில், உங்களை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம். பிறகு, அதை நிகழ்த்துவதற்காக இந்தத் தடங்கல்கள் அனைத்தையும் நான் எதிர்கொண்டேன்.

தார்கோவ்ஸ்கி:துருதிரஷ்டவசமாக, நீங்கள் அவை அனைத்தையும் தாண்டி வந்து விட்டீர்கள். இதர செய்தியாளர்களைப் போல, நீங்களும் இந்தத் தடங்கல்களால் தடுமாறிவிடுவீர்கள் என்றே நான் நம்பினேன், ஆனால் இறுதியாக வந்து விட்டீர்கள்.

ஐரெனா: ஒரு கோட்டையை போல உங்களை நான் முற்றுகையிட்டு கைப்பற்றிவிட்டேன். இப்பொழுது நான் இந்த இடத்தில் உங்களுடன் இருக்கிறேன், ஆனால் உங்களிடம் எப்படி பேச வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.

 தார்கோவ்ஸ்கி: இயல்பாக பேசுங்கள்.

ஐரெனா: நான் உங்கள் படங்களால் ஆழமாக பாதிக்கப் பட்டுள்ளேன்; பொருட்களின் மீதான உங்களின் பார்வை எனக்கு மிகவும் பரிச்சியமானதாக உள்ளது, ஆனால் ஒரு பெண்ணாக அவற்றில் என்னை இனங்காண இயலவில்லை. உங்கள் படங்களில் பெண்கள் முற்றிலும் பாரம்பரியமானவொரு பங்கையே வகிக்கின்றனர். அவற்றில் ஆண் மைய உலகம் ஆதிக்கம் செலுத்துகிறது, சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆணின் உலகம் மட்டுமே அவற்றில் இடம்பெற்றுள்ளன. ஆணின் பார்வையில் பெண்கள் மர்மமானவர்களாகவே தெரிகின்றனர். அவள் காதலுணர்வை பெற்றவளாக இருக்கிறாள்; ஆணை காதலிக்கிறாள், அவளின் ஒட்டு மொத்த இருப்பும் ஆணுடன் அவள் கொண்டிருக்கும் உறவையே சுற்றி வருகிறது. பெண்ணுக்கென தனிப்பட்டவொரு வாழ்கை எதுவும் அவளுக்கிருப்பதில்லை.

தார்கோவ்ஸ்கி:  இதைப் பற்றி நான் சிந்தித்ததே இல்லை, அதாவது ஒரு பெண்ணின் உள் உலகத்தை பற்றி கூறுகிறேன். ஒரு பெண்ணுக்கான பிரத்யேக உலகத்தை வழங்காமல் இருப்பது கடினமானது தான், ஆயினும், பெண்ணின் இந்த உள் உலகம் தன்னுடன் சம்மந்தப்பட்டிருக்கும் ஆணின் உலகத்துடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இந்தப் புள்ளியிலிருந்து பார்க்கும் பொழுது, தனிப்பட்ட பெண் என்பவள் இயல்புக்கு அப்பாற்பட்டவளாவாள்.

ஐரெனா: அப்பொழுது ஒரு தனிப்பட்ட ஆண், அது இயல்பானதா?

தார்கோவ்ஸ்கி: தனியாக இல்லாத ஆணைக் காட்டிலும் அது இயல்பானது தான். இதனாலேயே என் படங்களில் பெண்கள் முற்றிலும் இல்லாமல் போகின்றனர், அல்லது அவள் ஒரு ஆணின் சக்தியினூடே உருவாக்கப்படுபவளாக இருக்கிறாள். ‘தி மிரர்’ மற்றும் ‘சொலாரிஸ்’ ஆகிய எனது இரண்டு திரைப்படங்களில் மட்டுமே பெண் கதாப்பாத்திரங்கள் உள்ளன. அதிலும் அவள் ஆணை சார்ந்தே இருப்பது வெள்ளிடை. பெண்ணின் இந்தப் பங்கை நீங்கள் நிராகரிக்கிறீர்களா?

ஐரெனா: இதை நான் எப்படி ஏற்க முடியும்? என்னளவில், இதில் என்னை என்னால் காண இயலவில்லையே.

தார்கோவ்ஸ்கி:   ஆக, உங்களுடன் வாழும் ஆண் தனது உலகத்தை உங்களின் உலகுடன் சார்ந்திருக்கும் வகையில் கட்டமைத்துக் கொள்ள வேண்டுமா?

ஐரெனா: நிச்சயமாக இல்லை. நான் என் உலகத்தையும், அவன் தனக்கான உலகத்தையும் உருவாக்கிக் கொள்ளட்டுமே.

தார்கோவ்ஸ்கி:அதற்குச் சாத்தியமே இல்லை. நீங்கள் உங்கள் உலகத்தையும், அவர் அவரின் உலகத்தையும் தனித்தனியாக வைத்துக் கொண்டிருந்தால், உங்கள் இருவருக்குமிடையில் பொதுவான அம்சங்கள் என்று எதுவும் இல்லாமல் போய்விடும். உள் உலகம் இருவருக்குமான பொது உலகமாக மாற வேண்டும். இல்லாவிடில், அந்த உறவுக்கு எதிர்காலமே இல்லை. அது நம்பிக்கையற்றதாகி, இணக்கமற்றுப் போய் அவ்வுறவின் அழிவு உறுதி செய்யப்பட்டு விடும். ஒரு பெண் தன் துணையை மாற்றிக் கொள்வது, எனக்கு ஒவ்வாமையையே ஏற்படுத்தியுள்ளது. அவள் எத்தனை ஆண்களுடன் உறவு கொண்டிருக்கிறாள் என்பதல்ல விஷயம்; அதன் பின்னிருக்கும் மெய்மை குறித்ததே எனது கவலை. பெண் இத்தகைய திருமணங்களை ஒரு உடல் உபாதையை போலவே உணர்கிறாள். அதற்கு அர்த்தம், அவள் முதலில் ஒரு நோயாலும் பின்னர் மற்றொன்றாலும் என தொடர்ச்சியாக அவதிப் படுகிறாள். காதல் ஒரு முழுமுற்றான உணர்வாக இருப்பதனால், அது எந்த உருவத்தை எடுத்துக் கொண்டாலும், அதை மீண்டும் மீண்டும் நிகழச் செய்ய இயலாது; அதன் முழுமையில் காதல் உணர்வை நகலெடுக்க முடியாது. ஒரு பெண்ணால் அழிந்த காதல் உணர்வை மீண்டும் நிகழச் செய்ய இயலுமானால், அது அவளுக்கு முற்றிலும் அர்த்தமில்லாததாகவே இருக்கும். இந்தப் பெண் அதிர்ஷ்டம் இல்லாமலிருந்ததும், தொடர்ச்சியாக தனக்கென மட்டும் வைத்திருக்க முயன்றதுமான தன் உள்ளுலகம் அவளுக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றப் போய், அதுவே வேறொரு அந்நிய உலகுடன் தாம் கரைந்து போக அனுமதியாமல் இருப்பதும், அந்தக் கரைதலைக் கண்டு அஞ்சுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உங்களுக்குப் புரிகிறதா?

ஐரெனா: தனக்கென தனி உலகத்தைக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் சந்தித்ததே இல்லையா?

தார்கோவ்ஸ்கி:   அத்தகைய பெண்ணொருத்தியுடன் என்னால் என்னைத் தொடர்படுத்திக் கொள்ள இயலாது.

ஐரெனா: உங்களை சரியாகப் புரிந்து கொள்கிறேன் என்றால், உங்களாலேயே ஒருப்போதும் ஒரு பெண்ணுக்குள் முழுமையாகக் கரைந்து போக இயலாது, சரியா?

தார்கோவ்ஸ்கி: ஆமாம், என்னால் கரைந்து போக இயலாது. எனக்கு அதற்கான தேவையில்லை. நானொரு ஆண்.

ஐரெனா: ஆயினும், அப்படி கரைந்து போகும் விதமாக உங்களுக்கொரு பெண் தேவை, இல்லையா?

தார்கோவ்ஸ்கி:இயற்கையாக. ஒருவேளை ஒரு பெண் தன் தனித்துவத்தை பாதுகாக்க முயன்றாள் எனில், அந்த உறவுமுறை உயிரற்றதாகிவிடும்.

ஐரெனா: ஆயினும், இந்தக் காதல் உறவில் நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்வீர்கள் தானே?

தார்கோவ்ஸ்கி:  நானொரு ஆண். என் இயல்பு வேறு விதமானது.

ஐரெனா: பெண்ணின் இயல்பை புரிந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

 தார்கோவ்ஸ்கி: உங்களைப் போலவே, எனக்கும் அது குறித்தவொரு அபிப்பிராயம் உள்ளது.

ஐரெனா: ஆனால், நானொரு பெண்ணாகவே இருப்பதால், உள்ளிருந்தே ஒரு பெண்ணாக நான் என்னை அடையாளம் கண்டுகொள்கிறேன்.

தார்கோவ்ஸ்கி:தம்மைத்தாமே மதிப்பிட்டுக் கொள்ளுதல் மக்களுக்கு அறவே இயலாத காரியம். தனது தனிப்பட்ட அந்தரங்க உலகை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் பெண் என்னை ஆச்சரியப் படுத்துகிறாள். பெண்ணின் அர்த்தம், பெண்ணின் காதலுக்குப் பின்னுள்ள அர்த்தம், தியாக உணர்ச்சி மட்டுமே என்று எனக்குத் தோன்றுகிறது. நான் அத்தகைய பெண்ணொருத்தியின் முன் மண்டியிடுகிறேன். அப்படிப்பட்ட பெண்களை எனக்குத் தெரியும்.

ஐரெனா: இவ்வுலகில் அத்தகையவர்களுக்குப் பஞ்சமே இல்லை.

தார்கோவ்ஸ்கி:ஆமாம், அவர்கள் உயர்ந்த பெண்மணிகள். தனது தனி உலகை மட்டுமே வலியுறுத்தி தன் உயர் குணத்தை நிரூபிக்கும் ஒரேவொரு பெண்ணை கூட எனக்குத் தெரியாது. அத்தகைய ஒருத்தியை பெயரிடுங்களேன் பார்ப்போம்.

ஐரெனா: தார்கோவ்ஸ்கி அவர்களே, நான் வாயடைத்துப் போயிருக்கிறேன். ஆக, ஒரு ஆணுடனான காதல் உறவு மட்டும் தானா பெண்ணின் வாழ்வுரிமையை கட்டமைக்கிறது?

தார்கோவ்ஸ்கி:நான் அப்படியா கூறினேன். நாம் ஒரு ஆண்-பெண் உறவை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். மேலும், என்னால் ஒரு கருத்தையும் என் தன்முனைப்பு தாக்கப்படாமல் வெளிப்படுத்துவது இயலாத காரியமாகிவிட்டது.

ஐரெனா: நீங்கள் ஏற்கனவே போதுமான அளவிற்கு பேசி விட்டீர்கள் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

தார்கோவ்ஸ்கி: ஒருவனோ ஒருத்தியோ காதலிக்கும் பொழுது, அவர்கள் தங்களுக்கென வரையறுக்கப்பட்டவொரு தனி உலகத்தை கொண்டிருப்பதற்குச் சாத்தியமே இல்லை என்று தான் நான் கூறினேன்; காரணம், இந்த உலகம் அந்த மற்ற உலகத்தோடு உருகி கலந்து, முற்றிலும் வேறொன்றாக உருமாறிவிடும். இந்த உறவிலிருந்து ஒருவன் பெண்ணை விடுவிப்பான் என்றால், அவன் அந்த உறவையே சிதைக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவான். தன்னையே எழுப்பிக் கொண்டு, அனைத்தையும் களைந்துவிட்டு, ஐந்து நிமிடத்திற்கு பின்பு வேறொரு புதிய வாழ்கையை துவங்கிவிட ஒரு பெண்ணால் இயலாது. பெண்ணின் உள்-உலகம் ஒரு ஆணின் மீதான உணர்வுகளையே சார்ந்துள்ளது. என் அபிப்பிராயத்தின்படி, அவள், அந்த உணர்வுகளையே முழுமுற்றாகச் சார்ந்திருக்க வேண்டும். பெண் காதலின் குறியீடு. காதலே, பொருளியல் மற்றும் ஆன்மரீதியிலான இரண்டு தளங்களிலும், மனிதனுக்குச் சொந்தமாயிருக்கும் உயரிய சொத்து. மேலும், வாழ்க்கைக்கு பெண் அர்த்தம் சேர்க்கிறாள். மேரி மாதா காதலின் குறியீடாக இருப்பதும், அவள் மீட்பரை பெற்றெடுத்ததும் தற்செயலானதல்ல. நான் பெண்களுடன் இந்தப் பொருள் குறித்து பேசும் பொழுதெல்லாம், அவர்கள் ஒரு ஆண் தங்களிடமிருந்து எச்சமயமும் திருடிச் செல்ல விழையும், அதனாலேயே அதீத முக்கியத்துவம் வழங்கிப் பாதுகாத்து வரும், கண்ணிய உணர்வை குறித்து மட்டுமே பேசுகின்றனர். என் பார்வையில், ஒரு ஆண்-பெண் உறவுமுறையில் ஆணின்பால் முழு பக்தியை கொண்டிருப்பதன் மூலமே பெண்ணின் கண்ணியம் பேணப்படுகிறது. இப்பெண்களுக்கு இது புரிவதேயில்லை. பெண் உண்மையாகக் காதலிக்கும் பொழுது, அவள் எதையும் கண்காணித்து பாதுகாத்துக் கொள்வதில்லை, அதனால், உங்களைப் போல அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க மாட்டாள். நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது கூட அவளுக்குப் புரியாது.

ஐரெனா: எதனால் நீங்கள் வேறொருவரிடமிருந்து, குறிப்பாக ஒரு பெண்ணிடமிருந்து, முழுமையான காதலை எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. வேண்டுமென்றால் காதலில் உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொண்டு, அந்தப் பெண் தான் செய்ய விழைவதை செய்யட்டுமே, ஏன் இதை உங்களால் ஏற்க இயலவில்லை?

தார்கோவ்ஸ்கி: நிச்சயமாக அது சாத்தியப்படும் தான். ஒருக் குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொள்ளும்படி நான் எவரையும் பணிக்கப் போவதில்லை.நான் கூறுவதெல்லாம், அந்தப் பெண், தனது முழுமையான ஆன்ம சுயத்தை வெளிப்படுத்த விழையும் தருணத்தில் அவள் தனது உள் உலகத்தையே தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பது தான். இல்லாவிடில் இது தான் நடக்கும்: ‘தயவு செய்து உன் உலகையே நீ வைத்துக் கொள், நான் என்னுடையதை வைத்துக் கொள்கிறேன்…நன்றி வணக்கம்.’

ஐரெனா: இரண்டு சரிசமமான தனிநபர்களால் அதிக பரஸ்பரத்துடன் விட்டுக் கொடுத்து வாழ இயலும் என்று உங்களால் நம்ப இயலவில்லையா? பெண் ஒரு தனி ஆளுமையாக வாழ்வதை நிறுத்திக் கொண்டு, அவள் உங்கள் மூலம் மட்டுமே வாழ்வதில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் விஷயம் தான் என்ன? அதில் உங்களுக்கு என்ன கிடைக்கின்றது?

 தார்கோவ்ஸ்கி: என்னால் அவளின் உள் உலகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் நான் எனது உலகத்தை அவளுக்குத் திறந்து காண்பிக்கிறேன். பெண் ஒரு வேளை தன் உலகத்திலேயே தங்கிவிட்டால் இருவராலும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்ள இயலாது.

ஐரெனா: ஒரு தர்க்கப் பார்வையிலிருந்து பார்க்கும் பொழுது, ஒருவேளை பெண்ணின் உலகம் உங்களுடைய உலகத்துடன் கலந்துவிட்டால், அவளின் உலகம் உங்களால் தனியாக புரிந்து கொள்ள இயலாமல் ஆகிவிடுமே. அங்கு தனக்கெனவொரு தனி உலகம் அவளுக்கில்லாமல் போய்விடுமே. உங்களின் உலகம் மேலும் விஸ்தரிப்பது மட்டும் தானே இங்கு நிகழ்கிறது.

தார்கோவ்ஸ்கி: எதனால் நீங்கள் இப்படி சிந்திக்கிறீர்கள்? மேலும், எதனால் இதே விஷயம் தலைகீழாக நிகழக் கூடாது? குறிப்பாக இந்த நிகழ்வில் நான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறேன். இந்த ஒரு புறத்தை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், இதன் எதிர் துருவத்தை மட்டும் எதற்காக நிராகரிக்கிறீர்கள்?

ஐரெனா: எனது அபிப்பிராயம் என்னவென்றால், காதலிக்கும் அதே சமயம் எனக்கானவொரு தனி உலகத்தை என்னால் கொண்டிருக்க இயலும். அது எனக்கு நிச்சயம் தேவை. நீங்கள் கூறும் பெண்ணுக்கிருக்கும் ஆணின்பாலான முழு பக்தி அவளுக்குப் பெரும் கெடுதியொன்றை தரக் காத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஆணின் மூலம் வாழ்வதை அப்பெண் தேர்வு செய்வாளானால், அவளொரு கையறு நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. இதுவொரு பழமையான, மிகவும் பழமையான கதை. எனக்கது நன்றாகத் தெரியும். இவையனைத்தும் நான் கூறினாலும், காதலுக்குள் முழுமையாகக் கலந்து கொள்ள வேண்டும் எனும் உந்துதல் எனக்குள்ளும் அவ்வபொழுது எழத்தான் செய்கிறது.

தார்கோவ்ஸ்கி: கடவுளே, நன்றி! அதில் பெருமை கொள்ளுங்கள். மேலும், இந்தக் ‘கரைதலை’ நான் பெண்ணிடமிருந்து வலுக்கட்டாயமாக உரிமை கோருவதாக எண்ணி விடாதீர்கள். துருதிரஷ்டவசமாக, எனக்கும் இந்தக் காதலுணர்வு அரிதாகவே வந்து சேரும். மிகவும் அரிதாகவே அது எனக்கு ஏற்படுகிறது, அதனால் அது வேறொருவருக்கு ஏற்படும் பொழுது, அவர் ஆணோ பெண்ணோ, அவரைக் கண்டு நான் பொறாமை கொள்ளவே செய்கிறேன். இது குறித்து நான் பேசும் பொழுது, எவரொருவரது பக்தியும் எனக்கு வலுக்கட்டாயமாகத் தேவை என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. இத்தகைய விஷயங்களை வற்புறுத்திப் பிடுங்கிக் கொள்வது இயலாத காரியம். காதலை பலம் கொண்டு அமல்படுத்த இயலாது. அதனால், என் பார்வை எவருக்கும் அபாயமானதல்ல.

ஐரெனா: காதல் அதுவாக நிகழ வேண்டும், அல்லது அது நிகழாது, இல்லையா?

தார்கோவ்ஸ்கி: ஆமாம். அது நிகழாத பொழுது, அங்கு எதுவுமே இருக்காது, மனிதன் மெல்ல சாகத் துவங்குகிறான். இது என்னுடைய அபிப்பிராயம் மட்டுமே. மக்கள், தன்னையே பாதுகாத்துக் கொள்பவர்கள், மேன்மேலும் சுதந்திரமடைந்து, அவர்கள் ஒருவருக்கொருவர் அக்கறையற்றும் அகங்காரத்துடனும் இருப்பதான உறவுமுறைகள் இயற்கையாகவே பல உள்ளன. இப்பாதை மிகவும் சுலபமானதாக இருக்கிறதோ என்னவோ. அத்தகைய உறவுமுறைகள் நிச்சயம் ஆபத்து குறைவானதும், சவுகரியமானதும் ஆகும். மற்றும் அவை பெண்ணியத்தை ஒத்தவொரு படிநிலையில் செல்கின்றன. என்னைப் பொறுத்தவரை, பெண்ணியத்தின் அர்த்தம், பெண்களுக்கான சமூக உரிமையை உறுதி செய்வது மட்டுமல்ல. பெண்ணின் இன்றைய சமூக நிலை முந்தைய காலங்களில் இருந்தது போல நாடகத் தன்மை பொதிந்தவையாக இல்லை என்ற போதிலும், இன்னும் சில வருடங்களில் பாலினச் சமநிலை என்பது நிச்சயம் அடையப்பட்டு விடும். இதைப் பற்றிப் பேசும் பெண்கள், ஆணுடன் தங்களுக்கிருக்கும் ஒற்றுமைகளை வலியுறுத்துகின்றனரே தவிர, அவர்கள் அவர்தம் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. எப்பொழுதும் இது என்னை பிரம்மிக்கச் செய்துள்ளது, காரணம் பெண்ணின் உள் உலகம் ஆணுலகிலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது. பெண்ணின் இந்தத் தனிச் சிறப்பினால் தான் அவளால் ஆணிடமிருந்து சுதந்திரமாக இருக்க இயலாமல் போகிறது என்று நான் நம்புகிறேன். அவள் ஆணிடமிருந்து சுதந்திரமாக இருக்கிறாள் என்றால், அதற்குமேல் அவள் இயல்பாகவோ உயிர்ப்புடனோ இல்லாமல் போய் விடுகிறாள். அவளால் நிச்சயமாக சமூகத்தில் ஒரு நல்ல நிலையை அடைய இயலும்; அவளால் ஒரு ஆண் செய்யும் பணியை கூட செய்ய இயலும், ஆனால் அதுவா அவளையொரு பெண்ணாக்குகின்றது? நிச்சயமாக இல்லை. ஆணின் பணியைச் செய்வதன் மூலம் ஆண்களுக்குச் சமமாகி விடுவதாக சில பெண்கள் எண்ணுகின்றனர். ஆனால், ஆணுக்குரிய உரிமைகளை கேட்டுப் பெற வேண்டிய தேவை ஒரு பெண்ணுக்கு அறவே இல்லை.பெண் ஆணிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறாள். ஆணிடம் காணப் பெறாதவொரு தனித்துவம், ஒரு முக்கியத்துவம், ஒரு அடிப்படை, பெண்ணிடம் உள்ளது. பெண்கள் சம உரிமையைத் தேடுகின்றனர். 

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று எனக்குப் புரிகின்றது; இதற்குமேலும் பெண்களுக்குத் தியாகம் செய்ய விருப்பமில்லை. எல்லாக் காலங்களிலும் தாம் அடக்குமுறைக்கு உள்ளாவதாக அவர்கள் உணர்ந்து, சமுதாயத்தில் சம உரிமையை கோருவதன் மூலம் தம்மையே விடுவித்துக் கொள்ள இயலும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆணோ பெண்ணோ, தான் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்றவர்கள் விரும்பிவிட்டால், அவர்கள் அதுமுதலே சுதந்திரம் பெற்றவர்களாகிவிடுவார்கள். இது அவர்களுக்குப் புரிவதில்லை. நாமனைவருமே சுதந்திரமான மனிதர்கள் தான், ஆனால் அதற்குக் காரணம் நாமொரு சுதந்திர உரிமை கொண்ட நாட்டில் வாழ்வதால் மட்டுமல்ல. அதுவொரு முக்கியமான காரணமில்லை. ரோமப் பேரரசில் கல் உடைத்தவன் கூட மனதளவில் சுதந்திரமானவனாக இருந்திருக்கலாம்…மனிதன் அடிப்படையிலேயே சுதந்திரமானவன். அந்தச் சுதந்திரத்தை அவன் உணரவில்லை என்றால், அதற்கு அவனே, அவன் மட்டுமே காரணம். சுதந்திரமாக இருத்தல் நிச்சயம் மிகவும் கடினமானது. 

நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தின் சாரத்துக்கு இறுதியாக வந்து சேர்ந்துவிட்டோம். மக்கள் தம்மால் வாழ இயலாமல் போவதற்கு மற்றவர்களை குறை கூறுவது என்னை கடும் கோபம் கொள்ளச் செய்கிறது. ஒருவர்  என்னிடம் தான் சுதந்திரமின்றி இருப்பதாக கூறினால், அது என்னை சீற்றம் கொள்ளச் செய்கிறது. நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினால், சுதந்திரமாக இருங்கள். யார் உங்களை தடுப்பது? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பி, ஆனால் மகிழ்ச்சியற்று இருக்கிறீர்கள் என்றால், அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள். நாம் அதீத உற்சாகத்துடனும் ஆற்றலை வீணடித்துக் கொண்டும் மற்றவர்களுக்கு புரவலர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறோம். மேலும் நாமே அவ்வாறு நடந்து கொள்ளும் விதங்களைத் தவற விடுகின்றோம். ஒருவர் ஒன்றை எதிர்த்து விடாப்பிடியாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் என்றால், முதலில் அவர் அதை நிறுத்திவிட்டு அச்சண்டையை தனக்குள்ளேயே திருப்பிவிட வேண்டும் என்பது என் புரிதல். பெண்கள் உலக நடப்புகளிலிருந்து பெரும்பாலும் விலக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை நான் மறுக்கப் போவதில்லை. சந்தேகத்திற்கிடமின்றி, அது நியாயமற்றது. அதே சமயம், பெண் பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டால் அங்கு அவளுக்கு என்ன ஆகும் என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. நான் அதற்கு எதிரானவன் அல்ல, நான் அதற்கு ஆதரவானவன் தான் என்று அழுத்திக் கூற விரும்புகிறேன், ஆனால் அங்கு அவளால் தன்னைக் கண்டறிய இயலாது என்பது என் நிலைப்பாடு. அவள் அங்கு மன நிறைவை அடைய மாட்டாள்.

ஐரெனா: நான் உங்களுடன் உடன் படுகிறேன். ஆண்களின் அற விழுமியங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வுலகைச் சேர்ந்தவொரு பெண் தனது தொழிலில் வெற்றி பெற அதே அறங்களை தாமும் கையகப்படுத்தி போட்டியிடுதல் என்பது மிகவும் கடினமானது.

தார்கோவ்ஸ்கி: நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய தொழில் வாழ்க்கையில் இருக்கும் பெண்ணைக் காட்டிலும் விரும்பத்தகாத விஷயம் வேறெதுவுமில்லை. ஆண்களின் உரிமைகளுக்காக நான் பயம் கொள்வதாக இதை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் நான் அதை இயற்கைக்கு எதிராக இருப்பதாகக் கருதுகிறேன். இங்கு பெண் தான் தவிர்த்திருக்க வேண்டிய பாதையில் நடக்கத் துவங்குகிறாள். ஆணின் மீதான தனது நெறிதவறிய, போட்டி உணர்வுகளே அவளை அதைச் செய்ய உந்தியது. எதனால் இது ஏற்படுகிறது? ஆணை போல் இருப்பது தான் ஒரு பெண்ணின் தேவையா? ஆணின் திறன்களை தாமும் பெற்றிருப்பதாக நிரூபிப்பது தான் இவ்வுலகில் அவளது நோக்கமா? ஆணின் பணியை ஒரு பெண்ணால் பூர்த்தி செய்ய இயலும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இங்கு, இங்கிலாந்தில், ஒரு பெண் ஒரு மாபெரும் அரசியல் வாழ்க்கையில் பலருடன் சண்டையிட்டு தனது பாதையை உருவாகிக் கொண்டு, தற்பொழுது உலகின் வலிமையான அரசியல்வாதிகளுள் ஒருவராக இருந்து வருகிறார். ஒரு அரசியல் வாதியாக அவர் சரியான விதத்தில் நடந்து கொள்கிறார். பல்வேறு மக்களுடன் மோதலில் இருப்பது, ஒரு அரசியல் வாதியின் வாழ்க்கைக்கொரு நல்ல அறிகுறி. மக்களை இன்பப்படுத்தும் அரசியல் வாதி கேடு விளைவிப்பவராவார். அரசியல் வாதி என்றால் ஒன்றை சாதிக்க வேண்டும், அதற்காக அவர் வழங்கும் விலை கெட்டப் பெயர் பெறுவது தான். ஃபால்கன்ட் பிரச்சனையின் பொழுது இந்தப் பெண்ணை எவருக்கும் பிடித்திருக்காது, ஆனால் ஜெனீவா ஆக்கிரமிப்பின் பொழுது அவரது பார்வை புரிந்து கொள்ளக் கூடியது தான். ஆக, ஒரு ஆணின் பணியை செய்ய முடிந்த பெண்ணொருத்தியின் ஆற்றல் ஒன்றும் அவ்வளவு சிறப்பானதல்ல. நிச்சயம் அதை அவளால் செய்ய முடியும். அது அதைத் தவிர்த்து வேறெதையும் மெய்ப்பிக்கப் போவதில்லை.

ஐரெனா: மார்கிரட் தாச்சரை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். ஆணின் உலகத்துக்குள்ளிருக்கும் ஆண் அறங்களை ஒரு பெண் சுவீகரித்துக் கொள்வது ஒன்றும் பிரம்மிப்பூட்டக் கூடியதல்ல. அவளால் வேறெதையும் செய்ய இயலாது. அவளுக்கு வேறு வழியில்லை. உங்களின் ஒட்டுமொத்த வாதத்தில் பெண்ணின் இயல்பு குறித்த உங்களின் நிலைப்பாடு தான் என் மன அமைதியை கெடுக்கின்றது. பெண்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு ஆண் மைய உலகத்திலேயே வாழ்ந்து வருவதால், அதற்குள் ‘பெண் இயல்பு’ என்றால் என்ன என்று படிகமாக்கி புரிந்து கொள்ளுதலும், பெண்ணுக்கான அறங்களை கொண்டு புதிதாக ஒரு பெண் உலகத்தை உருவாக்குவதும் மிகவும் கடினமாகிறது.

தார்கோவ்ஸ்கி: என்னை மன்னிக்கவும், உங்கள் பெயர் என்ன?

ஐரெனா: ஐரேனா.

தார்கோவ்ஸ்கி: கொஞ்சம் கேளுங்கள் ஐரேனா, இதன் மூலம் நீங்கள் ஏற்கனவே உங்களின் பெண்மையுணர்வோடு ஒவ்வாமை கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்கள்.

ஐரெனா: இல்லை, நீங்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

தார்கோவ்ஸ்கி: ஆனால், இதுகாறும் உருவாக்கப்பட்டு உயிர்பெற்றிருக்கும் ஆண்-பெண் உறவைத் தவிர்த்து வேறொரு மாற்று ஆண்-பெண் உறவுமுறை என எதுவும் இருக்க முடியாதே. காரணம், உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நமது உலகம் இரண்டு பாலினங்களால் ஆனது. ஒருவேளை வேறொரு கிரகத்தில் இருக்கும் ஒன்று அல்லதொரு பஞ்ச பாலின உலகத்தில் வேண்டுமானால் வாழ்க்கையின் தொடர்ச்சியை நிறுவ அத்தகைய பல்பாலினப் பாங்கு தேவையாக இருக்கலாம். ஒருவேளை அங்கு உடலியல் மற்றும் ஆன்ம ரீதியிலான காதல் முழுமைக்கு ஐந்து பாலினங்கள் அவசியப்படலாம். ஆனால் பூமிக்கோ, இரண்டு போதுமானது. ஏதோவொரு காரணத்தினால் நாம் எப்பொழுதும் இதை மறந்து விடுகிறோம். உரிமைகள், நிலைமை, சார்ந்திருத்தல் ஆகியவை குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், ஆணொரு ஆண், பெண்ணொரு பெண் என்ற உண்மை குறித்து நாம் பேசுவதே இல்லை. இந்தக் கருத்துகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருப்பது மட்டும் தான் இதன் மீதான உங்களின் விமர்சனமாக இருக்கப் போகிறது.

ஐரெனா: நீங்களே உங்களை காதலுக்குத் தயார் படுத்தி வைத்திருந்து, தியாகம் செய்யத் திறன் பெற்றவராக இருந்துவிட்டு, பெண்ணை  எப்பொழுதும் ஆணைச் சார்ந்திருக்கும் இடத்தில் மட்டும் போட்டு, அதன் மறுதலையை வரவேற்காமல், பெண்ணின் இயல்பே ஆணின் மீதான காதல் மற்றும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது தான் என்று வரையறுப்பதை ஏற்பது எனக்குக் கடினமாக உள்ளது. ஆனால் சில காரணங்களுக்காக, எது என்று எனக்குத் தெரியவில்லை, இந்த உணர்வுகளை பெற்றிருப்பதற்கான ஆற்றல் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தார்கோவ்ஸ்கி: எனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்கலாம். என்னால் அதை மதிப்பிட இயலாது. உங்களை போல் ஆடம்பரமாக வாக்கியங்களை கட்டமைத்து பேசுவது எனக்குக் கடினமாக உள்ளது.

ஐரெனா: என்னைப் பொறுத்தவரை, பெண்மை என்பது வேறொரு மனிதரைச் சார்ந்திருப்பதில்லை, அதனால் உங்கள் படங்களின் பெண் நாயகிகளுடன் என்னால் ஒன்ற இயலவில்லை. அந்தப் பெண்கள் அனைவரும், கிஞ்சித்தும் சுய ஆற்றலுக்கான சாத்தியமில்லாமல், ஆண் எனும் கிரகத்தை நோக்கி ஈர்க்கப்படும் கோள்களாகவே உள்ளனர்.

தார்கோவ்ஸ்கி: இது விசித்திரமாக உள்ளது. மாஸ்கோவில் நான் இருந்த பொழுது, பல பெண்களிடமிருந்து வந்திருந்த கடிதங்களில் அவர்கள் இதுகாறும் அணுக முடியாததாகவும் ஒளிபுகாதவாரும் இருந்து வந்ததாகக் கருதிய தங்களின் உள் உலகத்தை, நான் ‘தி மிரர்’ திரைப்படத்தின் மூலம் திறந்து, அவ்வுலகங்களுக்குள் வெற்றிகரமாக புகுந்துவிட்டதாக எழுதியிருந்தனர். உங்கள் ஆளுமை கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் வேறாக இருக்கலாம். நீங்கள் உங்களின் மீதே வெவ்வேறு கோரிக்கைகளை விதித்துக் கொள்கிறீர்கள். வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில், நீங்கள் ‘தி மிரர்’ திரைப்படத்தின் தாய்க் கதாப்பாத்திரம் போன்றவரல்ல. அது என் தாயை பற்றியது. அது புனைவு அல்ல; நிஜ யதார்த்தை மையமாகக் கொண்டது. அதில் ஒரேவொரு புனைவுப் பகுதி கூட இல்லை. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம், நீங்கள் தான் அதில் உங்களைக் கண்டடையவில்லையே.

ஐரெனா: குறிப்பாக ‘ஸ்டாக்கர்’ மற்றும் ‘சொலாரிஸ்’ ஆகிய திரைப்படங்களில், அடிப்படையான மனித நிலை மற்றும் அது குறித்த உங்களின் அணுகுமுறை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இப்பொழுது நான் இங்கு உங்களுடன் பேசிக் கொண்டிருக்க அதுவே காரணம். அது மட்டுமல்லாமல், ‘சொலாரிஸ்’ திரைப்படத்தில் காதலை நீங்கள் காண்பித்திருந்த விதம் அழகுணர்ச்சியுடனும் நுட்பமாகவும் இருந்தது. ஆனால், ஹாரி கதாப்பத்திரத்திற்கு காதல் தான் ஒரே சக்தியாகவும் அதே சமயம் தனது அக்கில்லீஸ் குதிகாலாகாவும் இருக்கிறது. அவள் காதலை மட்டுமே கொண்டிருக்கிறாள்.

தார்கோவ்ஸ்கி: மற்றும் உங்களுக்கு அக்கிலீஸ் குதிகால் தேவையில்லை. நீங்கள் பலவீனமற்றவராக இருக்க விரும்புகிறீர்கள்.

ஐரெனா: பெரும்பாலும் ஒரு பெண் தன் காதலுக்கும் ஆளுமைக்கும் இடையில் ஒன்றை தேர்வு செய்யும் குழப்ப நிலையில் தான் தன்னையே பொருத்திக் கொள்கிறாள். ஆணோ துவக்கம் முதலே ஒரு சாத்தியத்தை தான் கொண்டிருக்கிறான், எப்பொழுதும் அது அவனது ஆளுமை மட்டுமே.

தார்கோவ்ஸ்கி: பெண்ணால் ஆணை ஆணின் வழியில் கைப்பற்ற இயலாது.

ஐரெனா: ஒரு திரிபடைந்த சமூகத்தில் மட்டும் தான், நமது இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண் மைய உலகில், ஆளுமை ஒரு பாலினத்தின் சொத்தாக மட்டும் இருக்க முடியும்.

தார்கோவ்ஸ்கி: பெண்ணின் முழுமையான காதல் இல்லையென்றால், ஆண்-பெண் உறவு முறைகள் கணிசமாக மாறியிருக்கும்.

ஐரெனா: ஆமாம், அவை வேறாக இருக்கும்; அது வேறாகத்தான் இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக, தனக்கென அல்லாமல், வேறொருவருக்காகவே வாழச் சொல்லி பணிக்கப்பட்டு, எப்பொழுதும் பிறரின் நலன்களுக்காக தூக்கியெறியப்பட்டு வருமொரு பெண்ணின் இடத்திலிருந்து ஒரு நொடி கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பழுவை உங்களால் உணர முடிகிறதா?

தார்கோவ்ஸ்கி: ஆணுக்கு இது சுலபமாக இருக்கிறதேன்றா நினைக்கிறீர்கள்?

ஐரெனா: நிச்சயமாக இல்லை. நடப்புச் சூழலில், அது இருவருக்குமே கடினமாகத்தான் உள்ளது.

தார்கோவ்ஸ்கி: ஒரு ஆணாக இருப்பது ஒரு பெண்ணாக இருப்பதற்கிணையான அளவு கடினமானது. அந்தத் துயரம் வேறொரு விஷயத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. நாம் வாழும் சமூகத்தில் மனிதனின் ஆன்ம நிலை படுபாதகக் குழியில் உள்ளது. மேலும், இன்று நாம் படுத்துறங்கச் சென்றால் நாளை கண்விழிக்க முடியாமல் போகலாம் என்று நமக்குத் தெரியும்.ஒரு பைத்தியக்காரன் ஒரு பொத்தான் அழுத்திவிட்டால், மூன்றே குண்டுகள் இந்த கிரகத்திலிருக்கும் வாழ்க்கை அனைத்தையும் கொன்றழித்துவிடும். நாம் இது குறித்து பிரக்ஞையின்றி இருப்பதாக நான் கூறவில்லை, ஆனால் இதை நாம் தொடர்ச்சியாக மறந்து விடுகிறோம். ஒரு பிரச்சனையென்று உருமாறவே இலாயக்கற்ற விஷயங்களை நம்மைக் கையாளச் செய்யும் அளவுக்கு நமது ஆன்ம தேவைகள் பொருள்முதல்வாதத்தினால் அடிமைப் பட்டுக் கிடக்கின்றன. சமூதாயம் குறித்த இக்கேள்விகளின் வளர்ச்சி நம் பைத்தியக் காரத்தனமான எதிர்-ஆன்மீகத்தின் விளைவேயன்றி வேறல்ல. ஆன்மீக ரீதியில் முழுமையடைந்தவொரு பெண் ஆணுடனான தனது உறவில் தான் அடிமைப் படுத்தப்பட்டதாகவோ அவமானப்படுத்தப் பட்டதாகவோ எண்ண மாட்டாள். எப்படி ஆன்மீக ரீதியில் முழுமையடைந்தவொரு ஆண் பெண்ணிடமிருக்கும் எதற்கும் உரிமை கோர மாட்டானோ அதைப் போலவே. 

நீங்கள் தான், உங்கள் வாதத் திறமையின் மூலம் என்னை இத்தகைய பதில்களைக் கூறச் செய்திருக்கிறீர்கள். இப்பிரச்சனைகள் குறித்து நாம் பேசுவது நமக்கு அந்நியமாக இருக்க வேண்டும். இவை குறித்து நாம் தற்பொழுது பேசிக் கொண்டிருப்பதன் நிதர்சனம், ஏதோவொன்று ஒழுங்கு தவறி இருப்பதையே காட்டுகின்றது. பிரச்சனை இயற்கையான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே அடைந்துவிட்ட அல்லது அடையவிருக்கும் பெண் உரிமைகள் பெண்களுக்கு சுய-உறுதிப்பாட்டை வழங்காது. மாறாக, அதற்குப் பிறகே ஒரு பெண் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்வாள். ‘ஏன், நான், ஒரு மனிதராக இருந்தும் ஆணிடமிருந்து வேறுபட்டு விளங்குகிறேன், ஏன் நானொரு ஆணின் வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?’ என்று அவள் தம்மையே கேள்விக்குட்படுத்திக் கொள்வாள். இந்தப் பிரச்சனைகள் ஓர் ஆன்மீகமற்ற தன்மையின் அறிகுறிகள். பிரம்மிக்கத்தக்க பெண்களை நான் சந்தித்திருக்கிறேன், அவர்கள் ஆன்மீக ரீதியில் பிரம்மிக்கத்தக்கவர்கள். அப்பெண்கள் இத்தகைய பிரச்சனைகளில் தங்களை தொந்தரவு செய்து கொள்வதில்லை, ஆனால், பெண்களே, அவர்தம் உயரிய உள் செல்வத்தையும், ஆன்மீக மகத்துவத்தையும், வலுவான நெறியையும், மற்றும் ஒவ்வொரு ஆணும் அவர்கள் காலடிகளில் விழுந்து அவமானப்படாமல், கௌரவப் படுத்தப்பட்டதாக உணரச் செய்வதையும் மெய்ப்பித்துக் காண்பித்திருக்கின்றனர். உங்களுக்குத் தெரிகிறதா, இதுதான் விஷயம். நமது உறவுகளை நாம் தெளிவுபடுத்தத் துவங்கினோமானால், ஏற்கனவே நாமொரு தீங்கான பாதையில் செல்லத் துவங்கி விட்டோம் என்று பொருள். அதற்கான ஏக்கம் நமது அதிருப்தியின் அறிகுறியே தவிர, நீதிக்கான தேடல் அல்ல. இவையிரண்டும் இரு வெவ்வேறு பகுதிகளாகும். இன்று பெண்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பது எனக்குத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு உண்மையான, காதலிக்கும் பெண் இத்தகைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க மாட்டாள். அவள் அவற்றில் ஆர்வம் கொண்டிருப்பதில்லை.

ஐரெனா: உண்மையாகக் காதலிக்குமொரு பெண் தனது காதலை ஒரு ஆணுக்குள் சுருக்க மாட்டாள், அவள் அதை ஒட்டு மொத்த உலகத்திற்கும் விஸ்தரிக்கச் செய்வாள். அணு ஆயுத மிரட்டல் குறித்துப் பேசினீர்கள், அது ஆணின் மேலாதிக்கத்தால் தானே உருவாக்கப்பட்டது.

தார்கோவ்ஸ்கி: மேடம் கியூரியும் கூட அதில் பணி செய்தவர் தானே.

ஐரெனா: தார்கோவ்ஸ்கி அவர்களே, உலகையே ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆண் நெறிகள் குறித்து நாம் பேசுகிறோம். பெண் நெறிகளால் ஆட்கொண்டிருக்குமொரு சமூகம் இத்தகையவொரு பேரழிவுக்கு நம்மை இட்டுச் சென்றிருக்காது. இக்கால பெண்ணொருத்தி, பிரபஞ்சப் பேரழிவு குறித்து அறிந்திருந்து, அதில் பொறுப்பற்றும் சம்மந்தமில்லாமலும் இருந்து கொண்டு, ஆனால் ஒரு ஆணின் மீதான முழு காதலின் விளைவாக, அதிலும் இந்த ஆண் இக்காதலின் இதத்தில் திளைத்துக் கொண்டு பின்னர் கிரகத்தையே அழிக்க முற்படுபவான் எனும் பொழுதும், அவனுக்காக அவள் தன்னையே தியாகம் செய்து கொள்வாள் என்பதை எப்படி உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடிகிறது?

தார்கோவ்ஸ்கி: இது அதிர்ச்சியூட்டுகிறது, இது என்னை அதிர்ச்சியூட்டுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. ஆனால் நான் பிரம்மித்துப் போயுள்ளேன் ஐரேனா, ஒரு வேளை ஒரு ஆண் அதே உணர்வுகளாலும் கவலைகளாலும் தொந்தரவு செய்யப்படவில்லை என்று எண்ணுகிறீர்கள் என்றால் நீங்கள் தவறிழைக்கிறீர்கள். இந்தக் கிரகத்தின் கடவுளாக மனிதனே உள்ளான் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் தவறு.

ஐரெனா: அப்பொழுது இந்தக் கிரகத்துக்கு யார் கடவுள்?

தார்கோவ்ஸ்கி: அவன்.

கே: அவன் எங்கிருக்கிறான்?

தார்கோவ்ஸ்கி: (மேலே கைக்காட்டியவாறு) உங்களுக்கு விஷயம் புலப்படுகிறதா? நாம் நிகழ்வுகள் குறித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம், காரணங்கள் குறித்து அல்ல. நாம் மிகவும் முக்கியமானவொரு விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை ஆண் தனது இருப்பில், எந்தக் காரணத்திற்காக தான் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறோம், எதனால் தான் சில பத்தாண்டுகளுக்கு வாழப் போகிறோம், ஆகியவற்றுக்கான காரணங்களை கண்டறியாமல் வாழும் பொழுது தான், உலகம் தற்பொழுது அது இருக்கும் நிலையை வந்தடையும். அறிவொளிக் காலத்திலிருந்து, மனிதன் தான் புறக்கணித்திருக்க வேண்டிய விஷயங்களிலேயே தொடர்ந்து தன் கவனத்தைச் செலுத்தி வருகிறான். அவன் பொருட்களின் பக்கம் திரும்பத் துவங்கினான். அறிவின் மீதான தாகம் அவனை ஆட்கொண்டது, குறிப்பாக ஆண்கள். பெண்கள் ஆண்களின் அளவிற்கு அறிவின் மீது தாகம் கொள்வதில்லை. நல்ல வேளையாக.

ஐரெனா: பெண்கள் இதர பார்வைகள் மீது கூருணரச்சி (sensitivity)   கொண்டவர்களாக இருக்கலாம்.

தார்கோவ்ஸ்கி: நிச்சயமாக சரி. ஒரு வழியாக இதை நீங்கள் உணர்ந்து விட்டீர்கள். ஆனால் என்ன நடந்தது? ஆண் ஒரு பார்வையற்றவனை போல தன்னைச் சுற்றியே ஆடத் துவங்கி விட்டான். அவன் வேறெந்த உறுப்பையும் பயன்படுத்தாமல் வெறும் கைகளைக் கொண்டே உலகத்தைக் கிரகித்துக் கொண்டிருக்கிறான். மகிழ்ச்சியையும் சமநிலையையும் அடைய இவ்வுலகம் போதுமானது என்றெண்ணும் அளவிற்கு, நாம் ஏற்கனவே உலகம் குறித்து நிறைய புரிந்து வைத்திருக்கிறோம். நிதர்சனமோ இதற்கு எதிரானது. எவ்வளவு அதிகமாக நமக்கு ‘இவ்வுலகம் குறித்துத் தெரிந்திருக்கிறதோ’, யதார்த்தத்தில், அதே அளவிற்கு நம்மைக் காட்டிலும் நமது முன்னோர்கள் உலகை இன்னும் ஆழமாக உணர்ந்துள்ளனர் என்ற பார்வையையே வல்லுனர்கள் முன்வைக்கின்றனர். நாம் குழப்பத்தின் சக்திக்குள் இருக்கிறோம். ஒரு வேளை நீங்கள் குருடாக இருந்து, ஒரு குளிரான ரேடியேட்டரை தொட்டுப் பார்த்தீர்கள் என்றால், உங்களைச் சுற்றியிருக்கும் உலகம் அதே போல குளிராகவும், சூடாக இருந்தால் அதன் மறுதலையாகவும் இருப்பதாக உலகை நீங்கள் உணர்ந்து அர்த்தப்படுத்திக் கொள்வீர்கள். அது முக்கியமல்ல. ஆனால், யதார்த்தத்தில் இந்த உணர்தல் உலகத்தின் நிஜத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருப்பதில்லை; தொடு உணச்சியை மட்டுமே இது குறிக்கின்றது. இவ்வாறு வெப்பத்தின் அளவை சார்ந்தே உலகம் குறித்த நமது புரிதல் கட்டமைக்கப்படுதல் மிகவும் பரிதாபகரமானது. நமக்கு இவ்வுலகம் பற்றி நிறைய தெரிந்திருப்பதாக நாமே முடிவு செய்து கொண்டோம். உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது. உலகின் ஒரு சிறிய பகுதி குறித்த நமது குழப்பத்துக்குரிய நிலைப்பாடும், அதன் முழுமையான ஓவியத்தை நமக்கு வழங்காது, காரணம் உலகம் எல்லையற்றது. எனது பார்வையின் படி, மனித இருத்தலின் நோய்க்கூறு அதன் அறியும் சக்தியில் அமைந்திருக்கவில்லை; அது மனிதனின் அறிவுசார் பணியே அன்றி மையப் பணியல்ல. மானுடப் பிரச்சனை என்பது வாழ்க்கையின் அர்த்தத்தை பற்றிய அறிவுடன் வாழ விரும்புவது தான். அந்த உலகத்தை பலரும் ஒரு பயன் நாட்டமுடைய, இலாபகரமான, அனுகூலமான இடத்திலிருந்து காண்பது தான் எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது. நாம் செயற்கையான பொருட்களையே தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் தொழில்நுட்பங்களும் அதை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. குதிரைகளில் பயணித்து சலித்து விட்டதால் தான் நாம் விமானங்களை கண்டுபிடித்தோம். நாம் வேகத்தின் மூலம் வாழ்கையை வளப்படுத்த எண்ணுகிறோம். அது பட்டவர்த்தனமாக நமது கண்களுக்குத் தெரியும் அடிப்படைத் தவறு. அணுக்களை பிளப்பத்தன் மூலம் நாம் புதிய சக்தியை பெறுகிறோம். மற்றும் அந்த சக்தியை நாம் பயன்படுத்தும் விதமென்ன? அணுகுண்டு எனும் தற்கொலை ஆயுதத்தை தயாரித்தோம். நம்மால் இக்கண்டுபிடிப்புகளை சரியாகப் பயன்படுத்த இயலவில்லை என்று கூறுகிறேன். அதற்குக் காரணம் மனிதனுக்கு தான் எதற்காக வாழ்கிறோம் என்றே தெரியவில்லை. விஞ்ஞானி கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதே தனது நோக்கம் என்று நம்புகிறார். அது உண்மையைக் கண்டறிய பயன்படுமொரு நடைமுறைவாத அணுகுமுறை. கலைஞனோ கலைப் பொருட்களை உருவாக்குவதற்கு மட்டுமே உயிர் வாழ்கிறான். அனைவருமே குறிப்பான சில பணிகளை மேற்கொண்டு வாழ்கிறோம், அனைவரும் தங்களின் வாழ்கையின் அந்த ஒரு நோக்கத்தைக் கண்டடைந்து மனநிறைவோடு வாழ்வதற்குப் பதிலாக, அவர்கள்  சமத்துவமின்மையை உணர்ந்து ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொண்டிருக்கின்றனர். அனைவரும் தங்களின் நோக்கம் என்ன என்று கண்டறியும் இடத்தில் யாவரும் சரி தான், அனைவருக்கும் சமமான உரிமைகள் அங்கு உள்ளன; கலைஞர்கள், பணியாளர்கள், பாதிரியார்கள், விவசாயிகள், குழந்தைகள், நாய்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும். வாழ்க்கை குறித்த இந்த உணர்வு நமக்குள்ளே மறைந்து கிடக்கும் பொழுது நாம் தடுமாற்றத்துக்குள்ளாகி உயிரற்று கிடக்கும் பிரச்சனைகளை பலவந்தமாக உருவாக்கத் துவங்குகிறோம். இது எனது கோணம். நாம் அனைத்தையும் ஆதித் துவக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டால், அனைத்தும் அதனது இடத்திலேயே தங்குகின்றன. நமது நாகரிகத்தின் நெருக்கடி ஒரு பொருந்தாமையிலிருந்து துவங்கி வளர்கிறது. அங்கு இரண்டு கருத்துப்பாங்குகள் சமநிலையின்றி இருக்கின்றன – அவை பொருள் வளர்ச்சியும் ஆன்ம வளர்ச்சியும் ஆகும்.

ஐரெனா: இது பிளாட்டோவிடமிருந்தே துவங்கிவிட்டது.

தார்கோவ்ஸ்கி: இல்லை, அதற்கும் முன்பாக. இது மனிதன் தன்னை இயற்கையிடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடிவு செய்ததிலிருந்து துவங்கியது. இந்தப் பிறழ்வான அடிப்படையிலிருந்தே நம் சமுதாயம் வளர்ந்தது. மக்கள் காதலாலும், நட்பாலும், ஆன்ம உறவாலும் அல்லாமல், பயன்பாட்டுக்கு உதவும் உந்துதலைக் கொண்டே ஒருவருடன் ஒருவர் கொள்ளவிருக்கும் உறவைக் கட்டமைக்கின்றனர். பாதுகாப்பாக உயிர் வாழத் தான் அவர்கள் இதை மேற்கொள்கின்றனர், அது தவிர்த்து இதற்கு வேறெந்தக் காரணமும் இல்லை. 

ஆனால், மனிதனோ, எந்தச் சூழலிலும் உயிர் வாழவே செய்திருப்பான், காரணம் அவன் மனிதன், விலங்கல்ல. மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, பிரம்மிக்கத்தக்க விஷயங்களை சாதித்ததற்கு நம்மிடம் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. உதாரணமாக, சமஸ்கிருத மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கீழைத்தேய கலாச்சாரங்கள் ஆன்ம உலகத்திற்கும் பொருள் உலகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்கியுள்ளன. இன்றும் அக்கலாச்சாரங்களின் தடங்கள் உயிரோடு தானிருக்கின்றன, அது மனித சமூகம் ஒரு காலத்தில் உண்மையானவொரு மாற்று வாழ்கைப் பாதையைத் தோற்றுவித்ததை நமக்குணர்த்துகின்றது. பிறகு, எதனால் அக்கலாச்சாரங்கள் செத்தொழிந்தன என்று ஒருவர் நம்மைப் பார்த்துக் கேட்கலாம். அவற்றுக்கு இணையாக வெவ்வேறு கலாச்சாரங்கள் பரிணமித்ததும், அவை ஒன்றோடொன்று பகைமை பாராட்டியதும், மற்றும் அந்த இதர கலாச்சாரங்கள் தத்தமது கலாச்சாரக் கூறுகளை தனித்திருந்து வளர்த்தெடுக்க இயலாமல் போனதும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். காரணங்கள் நமக்கு முழுமையாகத் தெரியவில்லை. எதுவாயினும், மனிதன் இந்த உலகத்தில் வந்து பிறந்ததற்கான நோக்கம் ஆன்ம ரீதியாக தன்னை உயர்த்திக் கொள்வதற்கும், நாம் தீமை என்று வகைப்படுத்தும் அகங்காரத்தை வெல்வதற்கும் தான் என்று அவன் உணர வேண்டும். அகங்காரம் என்பது மனிதன் தன்னையே விரும்பாமல் போய், காதல் குறித்தத் தவறான புரிதலைக் கொண்டிருப்பதன் அறிகுறியே ஆகும். இதுவே அனைத்துவிதமான பொருட் சிதைவுகளின் துவக்கப் புள்ளியுமாகும். நமது அறிவியலின் முட்டாள்த்தனம், அதன் தவறுகள் மற்றும் பேரழிவைத் தோற்றுவிக்கும் அதனது முடிவுகள், சரியான நேரத்தில் உலகம் பெண்களின் கைவசத்துக்குச் செல்லாமல் இருந்ததால் மட்டுமல்ல, மாறாக ஆண்கள் ஆன்ம ரீதியில் உச்சத்தை அடையாமல் இருப்பதனாலும் தான். ஒருவேளை மனிதம் ஆன்ம அறங்களின் பாதையில் சென்று, ஆற்றலின் மூலப் புள்ளியை தேடிச் செல்லாமல், ஆன்மப் புள்ளியை தேடியிருந்தால், தற்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த விஷயங்கள் எதுவும் இல்லாமல் கூட போயிருக்கும். அங்கு மனிதன் ஒரு ஆன்மச் செயல்முறையுடைய கட்டுப்பாட்டின் கீழ் சமநிலையுடன் வளர்ந்திருப்பான். 

ஆன்ம செயல்முறை அறிவுச் செயல்முறையை போலவே ஒருபக்கச் சார்பொன்றை உருவாக்கும் என்று நான் நம்பவில்லை. ஆன்மீகம் ஏற்கனவே சமநிலை எனும் நிலைப்பாட்டை தன்னிடம் கொண்டுள்ளது. நீங்கள் எவ்வளவு தான் சரியாகப் பேசினாலும், அவ்விஷயங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சமானவையே. ஒருவேளை நீங்கள் உங்களை எனது திரைப்படங்களில் கண்டடையவில்லை என்றால், அதற்கு நான் தவறிழைத்தேன் என்று அர்த்தமாகாது. பெண்கள் குறித்த உண்மை என்று எனக்குத் தோன்றும் விஷயங்களைக் குறித்து மட்டுமே நான் அவற்றில் பேசியுள்ளேன். அதை நீங்கள் விரும்பாமல் போகலாம், ஒரு பிரச்சனையுமில்லை. அல்லது, ஒருவேளை நான் பெண்ணை சமூக யதார்த்தத் தளத்தில் காண்பித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?

ஐரெனா: நீங்கள் என் மீது எதிர்ச்சார்பு கொண்டிருக்கிறீர்கள்.

தார்கோவ்ஸ்கி: இல்லை, அது சரியல்ல; நீங்கள் தான் என் மீது எதிர்ச்சார்போடு இருக்கிறீர்கள். ‘எதனால் நீ இவ்வளவு முட்டாளாக இருக்கிறாய்?’ என்று உங்களுடன் வாழும் ஆணைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இப்படியொரு கேள்விதான் அங்கு முன்வைக்கப்பட வேண்டும்.

ஐரெனா: ஒருவேளை எனக்கும் ஒரு ஆணுக்கும் இடையில் எழும் அதி முக்கியமான கேள்வி இதுவாகத்தான் இருக்குமென்றால், பிறகு எனக்கு அதைக் கேட்க நேரமிருக்காது, காரணம், அதற்கு முன் நான் அந்த உறவிலிருந்து வெளியேறியிருப்பேன்.

தார்கோவ்ஸ்கி: புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுக்குத் தெரியுமா, நாம் இத்தகைய இரண்டாம் பட்ச கேள்விகளை உருவாக்கி, அவற்றை தீர்க்க முயன்று, அதன் மூலம் நெருக்கடியில் இருக்கும் உலகத்தை உயிர் கொடுத்துக் காப்பாற்றி விட இயலும் என்று எண்ணுகிறோம். ஆனால், இது பிழையானது. என் மனதைப் பொறுத்த வரையில், இத்தகைய கேள்விகளால் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் அபாயகரமானது, காரணம் ஆன்மீகத்துக்கான போராட்டம் எனும் மையப் பிரச்சனையிலிருந்து இவை நம்மை வெகுதூரம் கொண்டு செல்கின்றன. ஆன்மீகப் போராட்டம் அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படித்தான் அதை அனைவரும் புரிந்து கொள்கின்றனர். படிப்பறிவில்லாத ஆனால் ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைந்தவொரு மனிதர் உட்பட, அனைவரும் இந்த மையப் பிரச்னையை புரிந்து கொண்டுள்ளனர். உதாரணமாக, நான் ரோம் நகரத்துக்கு அருகாமையிலிருக்கும் ஒரு கிராமத்தில் சில காலம் வாழ்ந்தேன். தன் வாழ்நாள் முழுவதும் நிலத்திலேயே பணி புரிந்தவொரு நபரை நான் அங்கு சந்தித்தேன். விவசாய உழைப்பு என்பது, நாம் எல்லோரும் நினைப்பது போல, வேறொரு பணி வழங்கும் ஊதியத்தைக் காட்டிலும் குறைவாகவே பெற்றுத் தரும் என்ற பொழுதிலும், அது மிகவும் முக்கியமானது என்று அவர் என்னிடம் கூறினார். இதிலொரு உண்மை உள்ளது. ‘ஒருவேளை நான் இலாபத்தின் மீது அக்கறை கொண்டவனாக இருந்திருந்தால், விவசாயத்தை நிறுத்திவிட்டு, உதாரணத்திற்கு காய் கறி கடையொன்றை துவங்கியிருப்பேன். பிறகு நான் நன்றாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், என்னால் அதை எக்காலத்திலும் செய்ய இயலாது’ என்றார் அந்த படிப்பறிவே இல்லாத மனிதர். ‘ஏன்?’ என்று நான் கேட்டதற்கு, ‘என்னால் எப்படி இயலும்? அதைச் செய்ய நான் என்னை எக்காலத்திலும் அனுமதிக்க மாட்டேன்’ என்று அவர் பதிலளித்தார். பாருங்கள், இந்த மனிதருக்கு தம் தொழில் மீதொரு பொறுப்புணர்ச்சி உள்ளது. அது அவரின் ஆன்மீக ஈடுபாட்டை நிரூபிக்கின்றது. பொருள் ரீதியான காரணங்களுக்காக அல்ல, ஆனால் தனது பணியின்பால் கொண்டிருக்கும் காதலின் காரணத்தால், அவர் தன் நிலத்திலேயே இருந்தும் அல்லது தன் கிராமச் சமூதாயத்துக்கு பல தியாகங்களை செய்தும் வருகிறார். இதிலொரு குறிப்பிட்ட ஆன்மீக அழகு பொதிந்துள்ளது. அவரால் நிலத்தை விட்டு தூரம் செல்ல இயலாது. மற்றும் நம்மால், குறிப்பான சில இரக்கக் குணங்களுள்ள மனிதர்களாகிய நம்மால், மிகத் தெளிவான மனவுறுதியோடு நிலத்திலிருந்து சுலபமாக வெளியேறிவிட முடிகிறது. மாறாக, இந்த விவசாயி உயர்ந்த அறநெறிகளை கொண்டிருந்தார், அதனால் எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.

ஐரெனா: அவர் நிலத்தின் மீது மரியாதை கொண்டிருக்கிறார்.தார்கோவ்ஸ்கி: நிலத்துக்கும், சக மனிதனுக்கும், முக்கியமாக தனக்கும். அது தான் மிகவும் முக்கியமானது. அவர் முதலில் தன் மீது மதிப்பு கொண்டிருக்கிறார். தனது உள் மற்றும் ஆன்மீக உலகத்தை அவர் பாதுகாத்து பேணி வருகிறார். அது தான் முக்கியம். அதனால் அவருக்கு எந்தப் பிரச்சனைகளும் இருப்பதில்லை. எவனொருவன் உண்மையானவொரு பொறுப்புணர்ச்சியை தன்னகத்தே கொண்டிருக்கிறானோ அவனுக்கு எவ்வித அடிப்படைப் பிரச்சனைகளும் இருப்பதில்லை. வாழ்க்கையின் அரத்தத்தைப் புரிந்து கொண்டு, பூமியின்பாலான வாழ்கையில் நம் பொறுப்புகளை பூர்த்தி செய்து வாழவே நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நம்மால் பெரும்பாலும் இதை நிகழ்த்திக் காட்ட இயலாது. நாம் இன்னமும் பலவீனமாகவே இருக்கிறோம். எது எவ்வாறு இருப்பினும் நாம் இப்பாதையை தேர்வு செய்தல் அவசியமானது. இந்தக் கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்காத பட்சத்தில், அக்கேள்வி நம்மை விட்டு அகலாது. துருதிருஷ்டவசமாக, சமூதாயம் இன்றொரு முட்டுச் சந்தில் வந்து நிற்கிறது. சமூதாயத்தை ஆன்மீக ரீதியில் மாற்றியமைக்க நமக்கு நேரம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த நேரம் நமக்கு வாய்க்கப்பெறவில்லை. செய்முறைகள் துவங்கப்பட்டு விட்டன, பொத்தான்கள் அழுத்தப்பட்டுவிட்டன, அதனால் அதையொத்தச் செயற்பாடுகள் சுதந்திரமாக நடக்கத் துவங்கிவிட்டன. மக்களும் அரசியல் வாதிகளும் தாம் கட்டியெழுப்பிய அமைப்புகளுக்குத் தாமே அடிமைகளாக மாறியுள்ளனர். கணினி ஏற்கனவே மனிதனைக் காட்டிலும் முன்னிலை பெற்றுவிட்டது. கணினியின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆன்மீகப் பணி தேவைப்படுகிறது. அதற்கு வழங்க வேண்டிய நேரமோ நம்மிடம் இல்லை. கணினியை நிறுத்த நமக்கிருக்கும் இறுதி தருணத்தில், மனிதன் ஒரு உயர் சக்தியின் உதவியால் அறிவொளி மிக்கவனாக மாறுவான் என்பது தான் நமக்கிருக்கும் ஒரே இறுதி நம்பிக்கை. அது மட்டும் தான் நம்மைக் காப்பாற்றும்.

ஐரெனா: நாம் தொடர்ச்சியாக ஒன்றுடன் சண்டையிட்டுக் கொண்டும், ஒன்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறோம், காரணம் அந்த முட்டுச் சந்து மேலும் குறுகிக் கொண்டே செல்கிறது. சுவர்கள் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கின்றன. நமது உரையாடல் இதற்கொரு கச்சிதமான உதாரணம். நான் உங்களுடனும், நீங்கள் என்னுடனும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

தார்கோவ்ஸ்கி: உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் வருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், தற்பொழுது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், அதனால் நாம் இருவரும் பேசியாக வேண்டியுள்ளது. ஆமாம், மனிதன் தவறான எதிரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான். பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும், ஆண் இதர ஆண்களுடனும், பெண் இதர பெண்களுடனும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கிறது, ஒரு குழு ஏவுகணைகளின் தயாரிப்பை எதிர்த்து வருகிறது, மற்றொரு குழு வேறொரு விஷயத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது, ஆக, நம்முடனேயே நாம் கொள்ள வேண்டிய சண்டைக்கு பதிலாக, நாமெல்லோரும் வேறேதோவொரு விஷயத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். நாமே நமது மோசமான எதிரி. நம் உள்ளத்திற்குள் தான் போர் நிகழ்த்தப்பட வேண்டும். நானும் கூட எனது அதிமோசமான எதிரிதான், மற்றும் நான் என்னை கைப்பற்றுவேனா மாட்டேனா என்று தான் எனக்குள் நானே தொடர்ந்து கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவும் இருக்கிறது. இது நான் வாழும் வாழ்கையின் அர்த்தமாக உள்ளது. நான் என்னைக் கைப்பற்றுவதில் வெற்றி கொண்டேனா என்று தெரிந்து கொள்ளாமல் என்னால் அமைதியடைய இயலாது. நான் என்னைக் கைப்பற்றிக் கொள்ளவோ அல்லது கைப்பற்றப்பட அனுமதிக்கவோ மட்டுமே இவ்வுலகத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறேன்.

ஐரெனா: நான் குறிப்பாக உங்களின் ‘நாஸ்டால்ஜியா’ திரைப்படத்தில் தான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். மனிதனின் புலம் பெயர்வுப் பிரச்சனை குறித்து நீங்கள் கவலை கொண்டிருந்தீர்களா?

தார்கோவ்ஸ்கி: அது புலம்பெயர்க் குடியேற்றம் குறித்துப் பேசும் திரைப்படமல்ல, அது நாஸ்டால்ஜியா பற்றிய திரைப்படம், வீடேக்கம் மற்றும் தாய் நாட்டின் மீதான ஏக்கங்களை சார்ந்த உணர்வுகள் குறித்தத் திரைப்படம் அது. அவ்வளவு தான். திரைப்படம் இதைப் பற்றி மட்டும் தான் பேசுகிறது.

ஐரெனா: உங்களைப் பொறுத்தவரை ‘தாய் நாடு’ எதைக் குறிக்கிறது?

தார்கோவ்ஸ்கி: ஒருவர் பிறந்து, வளர்ந்து, எந்தக் கலாச்சாரத்துடன் தம்மை இணைத்தும், எங்கு அவர் வேரூன்றியும் இருக்கிறாரோ அதுவே ஒருவரின் தாய்நாடு. நான் அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்துள்ளேன், அந்த நாடு என்னை ஆச்சரியம் கொள்ளச் செய்தது – வேர்களே இல்லாதவொரு நிலம் அது. வேர்களற்ற தன்மை அங்கு பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஒரு புறம், அது அந்நாட்டை ஆற்றல் விசை பொருந்தியதாகவும், எதிர்ச்சார்பு இல்லாமலும் ஆக்குகின்றது. மறு புறம், அங்கு ஆன்மிகம் கிஞ்சித்தும் காணப்படுவதில்லை. மக்கள் பிறிதொரு இடத்தில் ஒரு புதிய வாழ்க்கையை துவங்கிக் கொண்டு, தங்களின் கடந்த காலத்துடனான உறவைத் துண்டித்துக் கொள்கின்றனர். இதுவொரு ஆழமான சிக்கல். ‘நாஸ்டால்ஜியா’ திரைப்படத்தில் முக்கியமென எனக்குத் தோன்றிய எண்ணங்களின் மறுவூக்கத்தை நான் அமெரிக்காவில் உணர்ந்தேன். அங்கிருப்பது போல் வாழ்வது நினைத்துக் கூட பார்க்க இயலாத அளவிற்குக் கடினமானது. தத்தமது வரலாற்றுச் சூழல்களிலிருந்து வெளியே காலடி எடுத்து வைக்கும் பொழுது தான் உலகின் அனைத்துப் பிரச்சனைகளும் உருவங்கொள்ளத் துவங்குகின்றன. திரைப்படம் இதைப் பற்றி தான் பேசுகின்றது. தனது வேர்களிலிருந்து ஒருவர் பீய்த்து எடுக்கப்படுவாரனால், எவ்வாறு அவரால் சாதாரணமாகவும் முழுமையாகவும் வாழ முடியும்? ரஷிய மொழியில், ‘நாஸ்டால்ஜியா’ என்ற சொல்லுக்கு உடற்பிணி, வாழ்கையையே அச்சுறுத்தும் ஒரு நோய் என்று பொருள்.

ஐரெனா: ஒருவர் அனைத்திடமிருந்தும் தன்னை பீய்த்தெடுத்துக் கொள்வது மிகவும் கிளர்ச்சியூட்டுகிறது.

 தார்கோவ்ஸ்கி:    அப்படியா? சரி தான்.

ஐரெனா: அதுவொரு வாய்ப்பும் கூட.

தார்கோவ்ஸ்கி: இல்லை, அதுவொரு வாய்ப்பல்ல.

ஐரெனா: அதுவொரு வாய்ப்பில்லையா?

தார்கோவ்ஸ்கி: இல்லை. ஐரேனா, அங்கு அதில் எந்த வாய்ப்பும் புலப்படவில்லை.

ஐரெனா: தனிநபர்வாதத்துக்கான ஒரு வாய்ப்பு அதில் இல்லையா?

தார்கோவ்ஸ்கி: மனிதன் அதற்கு இன்னும் தயாராகவில்லை.

ஐரெனா: நமது நூற்றாண்டு ஒரு நாடோடித் தனமான வாழ்கையை கொண்டது. மக்களின் கலப்பு மென்மேலும் நடந்து கொண்டிருக்கிறது; புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். சில நூற்றாண்டுகளில் நாம் நாஸ்டால்ஜியவை கடந்து சென்றுவிடக் கூடும்.

தார்கோவ்ஸ்கி: ஒவ்வொன்றாக, அது இயற்கையாகவே நடந்துவிடும். ஆனால் பிரச்சனை சற்று ஆழமாக உள்ளது. பூமி பல்வேறு விளைவுக் கோளங்களாக (spheres of influence) பிரிந்து கிடப்பது அசாதாரணமானது என்று நான் கூறினால் அதனுடன் உங்களுக்குக் கருத்துவேறுபாடு இருக்காது என்று நம்புகிறேன். இது அசாதரணமானது, ஏனென்றால் இந்த உலகம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. இதன் மீது மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுக்கிருக்கும் ஒரே உரிமை தான் பூமியில் வாழ்ந்து ஆன்மீக முதிர்ச்சி அடைவதேயன்றி, கிரகத்தை இரும்புக் கம்பிகளால் பிரித்து, அணு ஆயுதங்களைக் கொண்டு அப்பிரிவினைகளை பாதுகாத்து வைத்திருப்பதல்ல. இந்தச் செயல்பாடு மனிதாபிமானமற்றது. மேலும் இத்தகையவொரு சூழல் இதர சிக்கல்களையும் தோற்றுவித்துள்ளது: அவை நாஸ்டால்ஜியா, நாகரிகம், எதிர்ப்படுதல். இந்த நிலையிலிருந்து வேறென்ன வெளிவந்திருக்க முடியும்? நான் மட்டுமே சரி என் அண்டை வீட்டான் தவறு என்று நான் நம்பினேன் என்றால், நான் அவனோடு முழுமையாக முரண்பட்டு அவனோடு எந்த வகையான உரையாடலையும் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை, அதுவொரு வெளிப்படையான எதிர்ப்படுதலிலேயே சென்று முடியும். அங்கு வேறெதற்கும் சாத்தியமில்லை. நாம் மனிதாபிமானமற்ற வகையில் வாழ்ந்து வருகிறோம். ‘நாஸ்டால்ஜியா’ திரைப்படம் இந்தக் கேள்விகளைத் தான் தாங்கி நிற்கிறது: நாம் எப்படி வாழ வேண்டும்? பிரிந்து கிடக்கும் இந்த உலகத்தில் சகமனிதரோடு எவ்வகைகளில் நம்மாலொரு உடன்படிக்கைக்கு வர இயலும்? பரஸ்பர தியாக உணர்வால் மட்டுமே இது சாத்தியப்படும். தியாக உணர்வற்ற ஒருவனால் வாழ்க்கையில் வேறெதையும் எதிர்ப்பார்க்க முடியாது.

ஐரெனா: உங்களால் தியாகம் செய்ய இயலுமா?

தார்கோவ்ஸ்கி: அதைக் கூறுவது கடினம். வேறெவரைப் போலவும், என்னாலும் அதைச் செய்ய இயலாமல் தான் போகிறது. ஆனால், என்னால் அதை நிகழ்த்த இயலும் என்று நான் நம்புகின்றேன். காரணம், ஒருவேளை என்னால் எது முடியும் என்று நான் எனக்கே நிரூபித்துக் கொள்ளாமல் இறந்து போய்விட்டால், அது என்னை வெகுவாக சோகப் படுத்திவிடும்.

ஐரெனா: அப்பொழுது அதை எப்படிச் சாதித்துக் காட்டுவீர்கள்?

தார்கோவ்ஸ்கி: எப்படியா? எனக்குத் தெரியவில்லை. நான் நம்பும் விஷயங்களை அடையும் விதத்தில் ஒரு ஒழுக்கமான வாழ்கையை வாழ்வதன் மூலம் அதை அடையலாம். ஆனால் நான் செய்யும் தொழில் அதற்கொரு தடங்கலாக உள்ளது. எனது சினிமா பணி உண்மையிலேயே எனக்குத் தேவைதானா, அதை தான் தொடர்ந்து செய்யத்தான் வேண்டுமா என்பதில் எனக்குச் சற்று குழப்பமுள்ளது.

ஐரெனா: நீங்கள் அப்பொழுது என்ன செய்ய விரும்புவீர்கள்?

தார்கோவ்ஸ்கி: சில சமயங்களில் நான் செய்யும் தொழில் அபத்தமானதாகத் தெரிகிறது. அதை விட முக்கியமான விஷயங்கள் இங்கு உள்ளன. ஒருவேளை கலையில் ஆக்கப்பூர்வமான பாதையொன்று இருக்கிறது தான் என்றால், அவற்றை எவ்வாறு அணுகுவது, எவ்வாறு அவற்றில் என்னை கண்டடைவது, அது தான் இங்கு கேள்வி. ஆக, ஒருவன் முதலில் தானே தன்னளவில் தயாராக இல்லாமல்  இருந்துகொண்டு கலைப்படைப்பை உருவாக்குவதன் மூலம் பிறருக்கு அறிவுரை வழங்கத் துவங்கிவிடுகிறான், அது என்னைத் தொந்தரவு செய்கிறது. லியோ டால்ஸ்டாயும் கூட இந்தக் கேள்வியால் தனது வாழ்நாள் நெடுக துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஐரெனா: எவ்வாறு உங்கள் திரைப்படங்கள் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன?

தார்கோவ்ஸ்கி:சந்தேகத்திற்கிடமின்றி, எனது திரைப்படங்கள் என்னைப் பிரதிபலிக்கின்றன என்று நான் நம்புகிறேன். அதில் ஒரு வளர்ச்சி தென்படுகிறதா என்றால், அது எனக்குத் தெரியவில்லை. எனது ஆளுமையை உள்ளே கொண்டுவராமல் என்னால் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க முடியாது.

ஐரெனா: உங்கள் திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, ஒருவித ‘தவம்’ செய்யும் பாங்கில் நீங்கள் பணி புரியும் பார்வை எனக்குக் கிடைக்கிறது.

தார்கோவ்ஸ்கி:ஆமாம், அது சரி தான். அப்படி இருக்கத்தான் நான் விரும்புவேன். எனது சமீபத்தியத் திரைப்படத்தில் என் இதர திரைப்படங்களைக் காட்டிலும் அனைத்தையும் இன்னும் எளிமையாக வெளிப்படுத்தியிருப்பதாக எண்ணுகிறேன். ஆனால் ஒரு பார்வையாளராகிய உங்களைப் பொறுத்தவரை, ஒரு படைப்பாளியால் எப்பொழுதும் ஒரு படைப்பை முழுமையாகச் சரியாய் செய்யவே இயலாது. எது எப்படியோ, எல்லாச் சமயங்களிலும் இங்கு இலட்சோப இலட்சம் கேள்விகள் இருக்கும். இதற்கு மேல் எனக்கெதுவும் தெரியவில்லை.

ஐரெனா: பார்வையாளர் குறித்துச் சிந்திக்கும் நபரா நீங்கள்?

தார்கோவ்ஸ்கி: நான் பார்வையாளரை பற்றி சிந்தித்ததே இல்லை. என்னால் அது எப்படி இயலும்? நான் சிந்திக்க என்ன இருக்கின்றது? நான் அவருக்குப் பாடமா எடுக்க வேண்டும்? அல்லது, லண்டனில் ஒரு ஜான் ஸ்மித்தும், மாஸ்கோவில் ஒரு வசீல் இவானோவும் என்ன சிந்திக்கிறார்கள் என்று என்னால் தெரிந்து கொள்ள முடியுமா? வேறொருவர் என்ன நினைக்கிறார், அவரின் உலகம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டிருப்பது போல நடித்தால் என்னைக் காட்டிலும் பெரிய போலி வேறெவரும் இருக்க முடியாது. எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அதை என்னால் என் விதத்தில் மட்டுமே செய்ய முடியும், மற்றும் பார்வையாளரை எனக்கு இணையானவரகத்தான் என்னால் கொள்ள முடியும். அதனால் இங்கு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவேளை நான் ஏதாவதொரு விஷயம் குறித்து ஐயம் கொண்டிருக்கிறேன் என்றால், ஒரு பார்வையாளரும் அதை போலவே உணர்வார் என்று நான் நம்புகிறேன், பிறகு திரைப்படத்தில் எனக்கும் பார்வையாளருக்கும் என இருவரையும் ஒரே இடத்தில் பொருத்தி அதைத் தெளிவு படுத்திக் கொள்வேன். நான் பார்வையாளரை காட்டிலும் அறிவு அதிகம் பெற்றவனும் அல்ல முட்டாளும் அல்ல. பார்வையாளரை போலவே எனது கண்ணியமும் தீங்கிழைக்கப்படக் கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கிறது. ஒருவன் தான் கொண்டிருக்கும் பணமுடிப்பைப் பொறுத்தே அவனால் திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பது தான் விதி. இங்கு எதுவும் சுலபமல்ல. ஆனால் அதுவல்ல நான் செய்ய விரும்பும் தொழில். அந்தச் சிக்கல்களில் நான் எப்பொழுதும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டேன்.

ஐரெனா: ஒரு அந்நிய நாட்டில் இருப்பதும், அதே படைப்பூக்கத்தோடு அங்கிருக்கும் மக்களுடன் பணி புரிவதையும் எவ்வாறு உணர்கிறீர்கள்?

தார்கோவ்ஸ்கி: நான் என் ‘நாஸ்டால்ஜியா’ திரைப்படத்தை வெளிநாட்டில் தான் உருவாக்கினேன். அடிப்படையில் நான் எந்த வித்தியாசங்களையும் உணரவில்லை. அங்கொரு சிறிய வேறுபாடு உள்ளது தான், ஆனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.

ஐரெனா: 1968 முதல் செக் இயக்குனர் மிலோஸ் ஃபோர்மேன் (Milos Forman) அமெரிக்காவில் ஒரு புலம்பெயர்ந்தவராகவே பணி புரிந்து வருகிறார். கலைஞன் கிழக்குப் பகுதியில் கருத்தியல் அழுத்தத்தாலும், மேற்குப் பகுதியில் சந்தையின் அழுத்தத்தாலும் பாதிப்புறுவதாக அவர் கூறுகிறார். இது குறித்து நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

தார்கோவ்ஸ்கி: சரி தான், கடும் வணிக அழுத்தத்தை நான் இங்கு உணர்கிறேன். அதேசமயம், எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் என்னால் திரைப்படங்களை உருவாக்க இயலாது.

ஐரெனா: உண்மையாகவே உங்களால் சமரசமின்றி பணி செய்ய இயலுமா?தார்கோவ்ஸ்கி: சமரசங்களையும், எனது படைப்பில் அவை குறித்துச் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் என்னால் கையாள முடியாது. அதனால், நான் எந்த இடத்தில் பணி புரிகிறேன் என்பது எந்த வகையிலும் எனக்கு வித்தியாசமாக இல்லை. விதிக்கப்படும் ஆணைகளை என்னால் நிறைவேற்றவே முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் எனது தனித்துவச் சிந்தனைகளை கையாளவில்லை என்றால், என்னால் அவற்றை திரையில் காட்சிப்படுத்த இயலாது. நிச்சயமாக, அதைச் செய்வதில் பெரும் தடங்கல்கள் இருக்கின்றன.

ஐரெனா: உங்கள் தந்தை ஆர்செனி தார்கோவ்ஸ்கி பிரசித்திபெற்றவொரு சமகால பாடல் கவிஞர். அவரின் கோளம், கவிதையின் கோளம், அது நித்தியத்தன்மை வாய்ந்தது. உங்கள் திரைப்படங்களோ நேரத்தின் மாற்றங்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு வெவ்வேறு கலை பாதையில் இருக்கும் நீங்கள் இவ்வாறு ஒரே பெயருடன் சம்மந்தப்பட்டிருப்பது குறித்து எவ்வாறு உணர்கிறீர்கள்?

தார்கோவ்ஸ்கி: அது என்னை பாதித்தப்பதே இல்லை. நான் உங்களோடு முரண்படுகிறேன் – கலையில் ஒன்று முக்கியம் மற்றது முக்கியமற்றது என்று பிரித்துக் காண்பிக்க எதுவுமில்லை. தரம் மட்டுமே இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நல்ல கவிதைகள் மற்றும் கெட்ட கவிதைகள் இருப்பது போலவே தான் நல்ல படங்களும் கெட்ட படங்களும்.

ஐரெனா: நீங்கள் உங்கள் திரைப்படங்களில் குறியீடுகளை பயன்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது. ‘சொலாரிஸ்’ திரைப்படத்தில், நாயகர் தனது பெற்றோரின் வீட்டிற்கு திருப்புகிறார், பிறகு அங்கு மழை பெய்கிறது. மழை நீர் மிகவும் வலுபெற்றிருந்து, அது வீட்டின் கூரைக்குள் புகுந்து, உள்ளேயிருக்கும் தந்தையின் மீது சொட்டுகிறது. அந்த மழை வீடை குறிக்கிறதா, எவ்வாறு இங்கு மழை கடந்தகால நினைவுகளை அர்த்தப்படுத்துவதாக உள்ளது?

தார்கோவ்ஸ்கி:குறியீட்டுவதாம் ஒரு கடினமான துறை. நான் குறியீட்டுவாதத்தின் எதிரி. என்னைப் பொறுத்தவரை குறியீட்டு வாதம் மிகவும் குறுகலானவொரு படிவமாகவே தோன்றுகிறது, காரணம் குறியீடுகள் மறைந்து கிடக்கும் தம்மை கண்டுபிடித்துக் கொள்ளக் கோருபவை. ஆனால், நிதர்சனத்திலோ ஒரு கலை உருவகத்தை விளக்கி வெளிக்காட்ட இயலாது. கலை உருவகம் நாம் வாழும் நிஜ உலக ஆழங்களுக்கு இணையானது. ‘சொலாரிஸ்’ திரைப்படத்தின் மழை ஒரு குறியீடல்ல, அது நாயகருக்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் முக்கியமெனத் தோன்றும் படிவம். அது எதையும் குறிக்கவில்லை. ஆனால் அது ஏதோவொன்றை வெளிப்படுத்த எத்தனிக்கின்றது. அந்த மழை ஒரு கலை உருவகம். குறியீடு எனும் படிவம் என்னை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது.

ஐரெனா: உங்களின் எதிர்காலத் திட்டங்கள் என்ன? தற்சமயம் நீங்கள் மேற்கில் தான் தங்கவிருக்கிறீர்களா?

தார்கோவ்ஸ்கி:ஆமாம், ஆனால் எனது புதிய திரைப்படத்தை நான் எங்கு உருவாக்கப் போகிறேன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. ‘ஹேம்லட்’ன் திரைப்பட வடிவத்தை உருவாக்குவேன். அதற்கான பணத்தை ஸ்வீடிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடூட் திரட்டிக் கொண்டிருக்கிறது…பெர்க்மனுக்கு நிதி வழங்கும் அதே நிறுவனம்.

ஐரெனா: அப்பொழுது நீங்கள் ஸ்வீடனுக்குச் செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றதா?

தார்கோவ்ஸ்கி:அப்படிச் சொல்ல முடியாது. ‘ஹேம்லட்’ குறித்தொரு திரைப்படம் எடுக்கவேண்டும், அது தான் என் கனவு.

ஐரெனா: அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டீர்களா?

தார்கோவ்ஸ்கி: அடிப்படையாக, ஆமாம், ஆனால் நான் அது குறித்து பேச விரும்பவில்லை. இது மிகவும் ஆரம்ப நிலை. முதலில் ‘ஹாம்லெட்’, அதற்குப் பிறகு மற்றொரு திரைப்படத்தை உருவாக்கலாம். ‘ஹாம்லெட்’கான காட்சிகளை நான் இன்னும் எழுதவில்லை. அதைச் செய்வதற்காகவே அடுத்த மூன்று வருடங்களுக்காவது நான் மேற்கில் தங்கியிருக்க விரும்புகிறேன்.

ஐரெனா: சோவியத் ரஷியாவுக்குத் திரும்பச் செல்லாமலேவா?

தார்கோவ்ஸ்கி: ‘ஹாம்லெட்’ஐ கையில் வைத்துக் கொண்டு நான் அங்கு திரும்பச் செல்வேன்.

ஐரெனா: திரைப்படம் ஆங்கில மொழியில் இருக்குமா?

தார்கோவ்ஸ்கி: அது ஆங்கில்த்தில் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஐரெனா: குறிப்பிட்ட நடிகர்கள் எவரேனும் குறித்து சிந்திக்கிறீர்களா?

தார்கோவ்ஸ்கி: இல்லை, நடிகர்கள் குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை.

ஐரெனா: மற்றும் எதனால் ‘ஹாம்லெட்’ஐ மையமாகக் கொண்டவொரு திரைப்படத்தை உருவாக்க விரும்புகிறீர்கள்?

தார்கோவ்ஸ்கி: காரணம், ஹாம்லெட், சமகால பிரச்சனை ஒன்றை கையாள்கிறது: அது மிகவும் முக்கியத்துவமிக்கவொரு கேள்வி, மனிதம் உயிர் பிழைக்குமா அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா என்று அக்கேள்விக்கான பதில் தீர்மானிக்கப் போகிறது. நிச்சயமாக, ஷேக்ஸ்பியருக்கு இணையானவொரு வகைமையை நான் எனக்கென கண்டடைய வேண்டும். அதன் உள்ளடகத்தைக் கையாள நான் எனக்கானவொரு தனிக் கதைப் படிவத்தை உருவாக்க வேண்டும், அதுவொரு மாற்று நாடகவியல் வடிவமாக இருக்கும்.

************************************************************************************************

நேர்காணல் மொழிபெயர்ப்பு-
ப்ரதீப் பாலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *